தொடரும் மாணவர்கள் தற்கொலை – தன்னம்பிக்கை இன்மையே காரணமா ?

 

தொடரும் மாணவர்கள் தற்கொலை – தன்னம்பிக்கை இன்மையே காரணமா ?

தொடரும் மாணவர்கள் மரணம் :

அண்மையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அற்ப காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வது பரவலாக பரவி வருகின்றது .

இன்று ( டிசம்பர் 09 2017 ) இரண்டு பள்ளி மாணவிகள் தங்களை ஆசிரியர் திட்டினார் என்பதற்காகவும் இடம் மாற்றி அமர வைத்தார் என்பதற்காகவும் அதனால் ஏற்பட்ட பிரிவை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்துள்ளது .அதில் ஒருமாணவி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் . இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் .

சில வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததற்காக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார் .

சில மாதங்களுக்கு முன்பு மிகபெரிய ஓவிய திறமை கொண்ட மாணவர் ஒருவர் கல்லூரி ஆசிரியர் மத மற்றும் அரசியல் கொள்கையை திணிக்கிறார் என சொல்லி வீடியோ பதிவை வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

என்ன காரணம் இந்த தற்கொலைகளுக்கு :

அதிகப்படியான எதிர்பார்ப்பு :

இந்த கால தலைமுறையினருக்கு வாழ்வின் பெரும்பான்மையான விஷயங்கள் அனைத்தும் மிக எளிமையாக கிடைத்துவிடுகின்றன . அதன் காரணமாக அவர்களின் மனதில் எதிர்பார்ப்புகள் அதிகப்படியாக கூடிவிடுகின்றன . இதில் பழக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் தாங்கள் விரும்பிய பொருள்களை பெற்றோர் வாங்கி தரவில்லையெனில் தற்கொலை அளவிற்கு அவர்களை கொண்டு சேர்க்கிறது .

இல்லையென்று சொல்லாத பெற்றோர் :

தனிநபர் வருமானம் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில் பெற்றோர்களின் இன்றைய எண்ணம் எப்படி மாறிவிட்டது என்றால் தங்களின் இளம் வயதில் கிடைக்காத அனைத்து சந்தோஷங்களும் தங்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டும் என மாறிவிட்டது .

அதற்காக பிள்ளைகள் என்ன கேட்டாலும் அது தங்களின் வருமானத்திற்கு அதிகமானதாக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தங்களின் வறுமையை பிள்ளைகளிடம் மறைத்து அவர்கள் விரும்பியதை செய்கின்றனர் .

சில சூழ்நிலைகளில் பெற்றோரால் பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும்போது பெற்றோரின் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் பிள்ளைகள் விரக்தி அடைந்து தற்கொலைக்கு செல்கின்றனர் .

தன்னம்பிக்கை அறியாத இளையோர் :

இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் தொழில்நுட்ப விஷயங்களிலும் பல துறைகளிலும் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர் . ஆனால் தன்னம்பிக்கையில் வெறும் பூஜ்யமாக இருக்கின்றனர் .

பிள்ளைகளுக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் அக்கறை காட்டிடும் பெற்றோர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள் குறித்தும் அது இயல்பானது என்பதையும் அதை தாண்டி வாழ்வதே வாழ்க்கை என்பதையும் சொல்லி வளர்க்காமல் விட்டதன் விளைவே தற்கொலைகள் .

என்ன செய்யவேண்டும் :

பிள்ளைகளை படிப்பில் மட்டுமே அக்கறைசெலுத்த சொல்லாமல் விளையாட்டில் அவர்களை ஈடுபட சொல்லுங்கள் . விளையாட்டில் தோல்விகளை சந்திக்கும் அவர்கள் வாழ்க்கையில் தோல்வி ஏற்படும்போது அதனை தாண்டி செயல்படும் தன்னம்பிக்கையை பெறுவார்கள் .

பெற்றோர்கள் தங்களின் குடும்ப நிலையை பிள்ளைகளிடம் மறைக்காமல் பிள்ளைகளிடம் எடுத்து சொல்லி வளருங்கள் . அது உங்களால் பொருள்களை வாங்கித்தர இயலாதபோது அவர்களை சோர்வடைய செய்யாது .

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல் நம்பிக்கையையும் வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என்பதையும் போதிக்க வேண்டும் . மேலும் தற்கொலை செய்துகொள்வதால் பலனில்லை என்பதையும் எதிர்த்து போராடி வெற்றி பெறுதலே உண்மையான வெற்றி என்பதையும் கூறி மாணவர்களை உருவாக்கிட வேண்டும் .

தற்கொலை அருவருக்கத்தக்க செயல் நண்பர்களே . தோல்வியடைந்தால் வெற்றிபெற போராடுங்கள் . துரோகம் அடைந்திருந்தால் துரோகிகளை ஒதுக்கிவிட்டு வாழ பழகுங்கள் . வாழ்வு உன்னதமானது .ஒருமுறை மட்டுமே கிடைப்பது .

நன்றி
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *