வால்காவிலிருந்து கங்கை வரை | மனித சமுதாய வரலாற்றை அறிய உதவும் புத்தகம்

உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச்சான்றுகள், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாடுகளின் பழக்கவழக்கங்கள், புதைபொருள்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மனித சமுதாய வரலாற்றை அறிய உதவும் முக்கியமான புத்தகம்.

Download/Buy : வால்காவிலிருந்து கங்கை வரை

ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்யாயன் 1943 ஆம் ஆண்டில் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதினார். இவர் புத்த பிக்குவாக இருந்து பிறகு அதிலிருந்து விலகி மார்க்சியத்தை ஏற்று மார்க்சியவாதியாக தன்னை அறிவித்துக் கொண்டவர். இந்நூல், மனிதர்கள் ஆதிவாசிகளாக(புராதன ஆதிப் பொதுவுடமைச் சமூகம்) வாழ்ந்து கொண்டிருந்த கி.மு. 6000-ல் ஆரம்பித்து கி.பி. 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வரையில் நீள்கிறது.  மொத்தம் 20 கதைகளில் இந்த வரலாற்றை இந்நூல் கூறுகிறது.

 

530 பக்கங்களைக் கொண்ட இந்நூல், மார்க்சிய வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில்  எழுதப்பட்டுள்ளது. ஆரியர்கள் எனப்படும் இந்தோ-ஐரோப்பிய இனக்குழு சமூகங்கள் குலங்களாக வாழ்ந்து பிறகு நகர்ந்து நகர்ந்து சிந்து நதியை தாண்டி இங்கு கங்கை வரையில் வந்ததை புனைவு வடிவில் விளக்குகிறது. #வால்காவிலிருந்து_கங்கை_வரை என்று இந்நூலிற்கு பெயர் வைத்ததும் இக்காரணத்தினால் தான். அதாவது, ரசியாவில் ஓடும் வால்கா நதிக்கரையில் வசித்த ஒரு ஆதிவாசி குல சமூகம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறிது சிறிதாக நகர்ந்து ஆசிய கண்டத்திற்குள் எவ்வாறு நுழைகிறது என்பதைப் பற்றி கூறுகிறது. 

 

இது ஒரு ‘வரலாற்றுப் புனைவு’ நூலாகும். இதில் கூறப்பட்டுள்ள எல்லாமுமே துல்லியமான வரலாறு என்று கூற முடியாது. அதேசமயம் இது உண்மையான வரலாறுகளையும் கொண்டுள்ளது. அன்று ராகுல்ஜிக்கு கிடைத்த வரலாற்றுச் சான்றுகளை வைத்து புனைவுகளை கலந்து இந்நூலை எழுதியுள்ளார். எனவே பொதுவாக வரலாற்றின் வளர்ச்சியை, மாற்றத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் இந்நூலை கண்டிப்பாக படிக்கவேண்டும். உலகம் முழுதும் சமூகம் என்பது புராதன ஆதிப் பொதுவுடைமைச் சமூகமாக(ஆதிவாசி காலகட்டம்) இருந்து, பிறகு பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றுள்ள நிலையை அடைந்திருக்கிறது என்பதையும் வரலாறு என்பது மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதையும் இந்நூலின் மூலம் நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம். 

இதை இந்திய அளவிலான வாசகர்கள் எளிமையாக புரிந்து கொள்வதற்காக ராகுல்ஜி,  ஒரு இந்தோ-ஐரோப்பிய இனக்குழு சமூகம் ஒன்றின் வரலாற்று நகர்வை எழுதியுள்ளார்.


மேலும், அன்றைய புரதான பொதுவுடமைச் சமூகமானது தாய்வழிச் சமூகமாக இருந்தது என்பதையும் அதில் பெண் தான் குலத்தலைவியாக இருந்தாள் என்பதையும் பெண்ணின்(குலத்தலைவியின்) தலைமையில் தான் பெண்களும் ஆண்களும் சேர்ந்து விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தார்கள் என்பதையும் பிறகு, மனிதர்களிடையே வர்க்கப் பிளவுகள் ஏற்பட்டு, சமூகமானது சுரண்டுவோர்-சுரண்டப்படுவோர், ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் எனப் பிரிகிறது என்பதையும், அதிலிருந்து தான் ஆணைக் குடும்பத் தலைவனாகக் கொண்ட தந்தைவழிச் சமூகம் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பு உருவாகி பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள் என்பதையும் இந்நூல் அழகாக விளக்குகிறது. 

 

இந்நூலின் 20 கதைகளும் சமூகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த வரலாற்றின் மாற்றங்களை, வளர்ச்சியை ஒவ்வொன்றாக கூறுகிறது. சமூகமானது புராதனப் பொதுவுடமை சமூகத்தில் ஆரம்பித்து பிறகு வர்க்கப் பிளவுகள் ஏற்பட்டு, ஆண்டான்-அடிமைச் சமூகமாக, மன்னராட்சி சமுகமாக மாறியது என்பதையும் அதன்பிறகு நிலபிரபுத்துவ சமூகமாக மாறி, அதன்பின் இன்றுள்ள முதலாளித்துவ சமூகமாக மாறியது என்பதையும் கதைகள் வடிவில் விளக்குகிறது. இதில் ஆண்டான் அடிமைச் சமூகத்தில் தான், பல்வேறு பிற்போக்கு ஒடுக்குமுறை கருத்தியல்கள் உருவானது. சுரண்டலை ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் மதங்களும் சட்டங்களும் உருவாகியது. இதைச் செய்வதற்காகவே மதக்குருமார்கள், புரோகிதர்கள் என்ற வர்க்கம் இருந்தது. இவர்களது வேலையானது, மக்களை ஆன்மிகத்திற்கு அடிமையாக்கி அதை எந்தக் கேள்வியுமின்றி ஏற்கச் செய்து, மக்களை மன்னனுக்கு கீழ்ப்படியச் செய்வது தான். இச்சமூகத்தில் அரசன் தான் ஆண்டவன்.  இந்த ஆண்டான் அடிமைச் சமூகத்தில் தான் வேதங்களும் உபநிடதங்களும் மதச் சட்டங்களும் உருவாகி, கடவுள் என்ற கருத்தை நிறுவனமயப்படுத்துகின்றன. 

ஆன்மா, மறுபிறப்பு, பூர்வஜென்ம பாவ புண்ணியம், கர்மவினை, சொர்க்கம், நரகம் போன்ற அனைத்து வித பிற்போக்கு கருத்தியல்களும் இந்த சமூகக் கட்டத்தில் தான் உருவாகின என்பதை ராகுல்ஜி அவரது அருமையான கதைகளின் மூலம் விளக்குகிறார். இந்த பிற்போக்கு கருத்தியல்கள் மூலம் மதக் குருமார்கள் எவ்வாறு மக்களிடமிருந்து அரசனையும் அந்த சுரண்டல் சமூகத்தையும் காப்பாறுகிறார்கள் என்பதையும்,  அவர்கள் செய்யும் காரியத்திற்கேற்ப அரசன் எவ்வாறு மதக் குருமார்களை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தான்- அனைத்துவித உதவிகளும் உரிமைகளும் சலுகைகளும் கொடுத்திருந்தான் என்பதையும் இந்நூலின் கதைகள் மூலம் எளிமையாக நாம் புரிந்து கொள்ளலாம். 

இவ்வாறு இந்நூலில் குப்தர்கள் காலம், புத்தரின் வருகை மற்றும் புத்த மதத்தின் பாத்திரம், ஹர்ஷப் பேரரசு, முகலாயர்கள் வருகை, பிரிட்டிஷ் காலனியாதிக்கம் என பலவற்றை விளக்கியுள்ளார். நீண்டதாக எழுத விரும்பவில்லை. இந்நூலை வாசிக்காத நண்பர்கள், தோழர்கள் அனைவரும் வாசிக்கவும்.  இந்நூலின் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் முக்கியமான அடிப்படை விசயம் ஒன்று தான். அது என்னவென்றால்,

சமூகமானது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி பல கட்டங்களை கடந்து வளர்ச்சியடைந்து இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்பதைத்தான். இதற்கு காரணம் என்னவெனில், ஒவ்வொரு சமூகக் கட்டத்திலும் மக்கள் வெவ்வேறு ‘உற்பத்தி முறைகளை’ கொண்டு வாழ்ந்தார்கள். உற்பத்தி கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் அதன்மூலம் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றமும் தான் சமூகமானது அடுத்தடுத்து மாற்றமடைந்து வளர்ச்சியைடந்து வந்துள்ளதற்கு காரணம்.  இதை இந்நூலை படிக்கும்போது எளிதாக புரிந்து கொள்வீர்கள்.

இந்த விமர்சனம் திருமுருகன் என்பவர் எழுதியது

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



மேலும் நூல்கள் பற்றி படிக்க….

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *