திரித்து வெளியிடப்படும் வதந்திகள் | தவிர்க்கப்பட வேண்டும்

 


கிசு கிசு

 

சில ஆண்டுகளுக்கு முன்பாக சினிமா பிரபலங்களை பற்றி கிசு கிசு என்கிற பெயரில் யூகங்கள் அடிப்படையிலான செய்திகள் நாளிதழ், வார இதழ்களில் வரும். படிக்கும் போது கொஞ்சம் சந்தோசத்தை தரும் மற்றபடி வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.  அப்படிப்பட்ட கிசு கிசு உண்மையாகவும் இருக்கும் சில சமயங்களில் பொய்யாகவும் இருக்கும். சினிமா சார்ந்து அப்படி வெளிவரும் கிசு கிசுக்களால் பெரிய தாக்கம் எதுவும் சமூகத்தில் ஏற்படாது.

 

ஆனால் தற்போது கிசு கிசு வின் நீட்சியாக செய்திகளை திரித்துக்கூறும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட வழக்கம் சமூகத்தில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதே நிலை தொடருமாயின் எது உண்மை என்கிற குழப்பம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் எவரையும் மக்கள் நம்பாத சூழலுக்கு இட்டுச்சென்றுவிடும்.


திரித்து வெளியிடப்படும் செய்திகள்

 

அண்மையில் செய்திகள் திரித்து வெளியிடப்படும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் தான் இந்த கொடுமை அரங்கேறி வருகிறது என நினைத்துக்கொண்டு இருந்தால் முன்னனி செய்தி நிறுவனங்களும் கூட பொறுப்பற்ற இந்த செயல்களில் ஈடுபட்டு வருவது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

 

குழந்தை கடத்தல் வதந்தி 

 

 

திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பேசி வெளியிட்டார். மின்னல் வேகத்தில் பகிரப்பட்ட அந்த செய்தியின் விளைவாக வெளிநாட்டில் இருந்து வந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டது உட்பட பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. அதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட அரசு, வதந்தி பரப்பிய நபரை கைது செய்தது. பின்னர் வதந்தியை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் அந்த வதந்தியின் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

 


நாய்கறி வதந்தி 

 

நாய்கறி என சொல்லப்பட்ட ஆட்டுக்கறி
நாய்கறி என சொல்லப்பட்ட ஆட்டுக்கறி

 

ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் கைப்பற்றப்பட்ட இறைச்சி “நாய்கறி” என செய்தி செய்தி தொலைக்காட்சிகளிலேயே பரவியது. வால் நீளமாக இருக்கிறது, ஆட்டிற்கு இப்படி இருக்க வாய்ப்பில்லை என உணவுத்துறை அதிகாரிகள் குழப்பத்தோடு கூற, அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை போல பரவியது. பின்னர் வால் நீளமுள்ள ஆட்டு வகைகள் உண்டு என இறைச்சியை இறக்குமதி செய்த பெண் கூறினார். உணவு பாதுகாப்புத்துறை சோதனையிலும் அது ஆட்டு இறைச்சி என உறுதிப்படுத்தப்பட அந்த செய்தி அடங்கியது.

 

ஆனாலும் இன்றுவரை மக்களுக்கு சந்தேக உணர்வு போகவில்லை. இதன் விளைவாக மிகப்பெரிய இழப்பினை உணவு நிறுவனங்கள் சந்தித்தன.

 


ராகுலை அதிரவைத்த துபாய் குழந்தை 

 

தினகரன் மற்றும் தினமலர் நாளிதழில் ராகுல் காந்தியை கேள்வியால் மிரளவைத்த துபாய் சிறுமி என்கிற பெயரில் செய்திகள் வெளியாயின. இந்தியாவில் 80 சதவிகித ஆண்டுகள் ஆட்சியில் இருந்த உங்களால் செய்ய முடியாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்? என துவங்கி, ராகுல் கோவிலுக்கு திருநீர் அணிந்தும் காஷ்மீருக்கு  குல்லா அணிந்தும் செல்வது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் விவரிக்கப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளால் துளைத்த மாணவியை அரங்கில் இருந்தவர்கள் பாராட்டியதாகவும், நேரலை நிறுத்தப்பட்டாகவும் செய்திகள் பரவின.

 

இந்த செய்தி உண்மையா என பிபிசி நாளிதழ் ஆராய்ந்தபோது அப்படி ஒரு சிறுமி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே இல்லை எனவும், வேறு ஏதோ ஒரு நிகழ்வில் அந்த சிறுமி பேசிய பேச்சை இப்படி திரித்து கூறிய உண்மையயை வெளிக்கொண்டு வந்துள்ளது பிபிசி. துபாய் இல் ராகுல் கலந்துகொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மையாம்.

 


வதந்திகள் தவிர்க்கப்பட வேண்டும்

 

தனிநபர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிடுவது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான். அப்படி ஒரு வதந்தி பரவினால் அதனை உறுதி செய்வதற்கு மக்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளை காண்கிறார்கள். பரப்பப்பட்ட விசயம் பொய் என தெரிந்தால் மக்கள் நம்புவதில்லை, அதனை தவிர்த்து விடுகிறார்கள்.

 

ஆனால் செய்தி நிறுவனங்களே, சார்பு நிலையில் இருந்துகொண்டு அல்லது செய்தியை சரியாக ஆராயாமல் இருந்துகொண்டு செய்தியை வெளியிடும் போது மக்களிடம் அது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி விடுகிறது. செய்தி பரவிய பின்னர் அது வதந்தி என கூறினாலும் மக்களிடம் ஏற்கனவே ஏற்பட்ட தாக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்திட முடிவது இல்லை. இதனை ஒவ்வொரு தருணத்திலும் நன்றாக உணர முடிகிறது.

 

இனியாவது செய்தி நிறுவனங்களும் தனி நபர்களும் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் செய்தி நிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கும் சூழல் ஏற்பட்டுவிடும். ஜனநாயகத்தின் தூணாக இருக்கக்கூடிய செய்தி நிறுவனங்கள் நம்பிக்கையோடு செயல்படுவது அவசியமான ஒன்று.


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *