அப்துல்கலாம் அவர்களை இளமையில் செதுக்கியவர்கள் இவர்களே!

அப்துல்கலாம் அவர்களை இளமையில் செதுக்கியவர்கள்

தமிழகம் முழுக்க சோகக்கடல் பாய்ந்திருந்தது. சென்னையில் சாலை நெடுகிலும், மூலை முடுக்குகளிலும் அந்த மனிதரின் முகம் தாங்கிய பிளெக்ஸ் போர்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது. இவர்களில் பலருக்கு கலாம் என்ன செய்தார் என்பதெல்லாம் 100% தெரிந்திருக்காது. ஆனால் கலாம் இந்திய இளைஞர்களை ஆக்கபூர்வமாக பயணிக்க வைக்க விரும்புவதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

Abdul Kalam Motivated young girls students

 

ஒரு மனிதன் பிற்காலத்தில் என்னவாக ஆகப்போகிறார், எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதை அவரது மூதாதையரின் ஜீன்கள் மட்டுமே தீர்மானிப்பது இல்லை. மாறாக, அந்த மனிதர் எப்படிப்பட்ட மனிதர்களோடு பழகுகிறார், அவர் எந்த சூழ்நிலையில் வளர்கிறார் என்பதையெல்லாம் பொறுத்தான் பிற்காலத்தில் அவரது நடத்தை தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய பொறுப்பான குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தபோதும் மாறாத குணமுடைய அமைதியாளர் அப்துல் கலாம் அவர்கள். இந்த அமைதியான பண்பும் அரவணைத்து செல்லும் பாங்கும் எங்கிருந்து இவருக்கு கிடைத்தது? இதனை அக்னி சிறகுகள் புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. வாருங்கள் நாமும் அவர்களோடு பயணிப்போம். 

தாய் – தந்தை

ஒருவேளை நீங்கள் உங்களது பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் முதலில் நீங்கள் அப்படிப்பட்டவர்களாக நடந்துகொள்ளுங்கள்

Former Indian President Abdul Kalam

 

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவில் பிறந்தவர் தான் திரு அப்துல் கலாம். இவரது கரிசனமான குணத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறவர்கள் இவரது பெற்றோர்கள் ஜைனுல்லாபுதீன் மற்றும் ஆசியம்மா இருவரும் தான். கலாமின் அப்பா மெத்த படிக்காதவர் என்றாலும் கூட ஆழ்ந்த ஞானம் உடையவராக இருந்திருக்கிறார். சிறு வயதில் கலாம் அவர்கள் மத சம்பந்தமாகவும் வழிபாடு சம்பந்தமாகவும் வாழ்வியல் சம்பந்தமாகவும் எழுப்பிய கேள்விகளை சற்றும் சளைக்காமல் பதில் சொல்லி புரிய வாய்த்த பெருமைக்கு உரியவர். அப்துல் கலாம் இறை பக்தி நிறைந்தவராக இருப்பதற்கு இவரும் முக்கியக்காரணம்.

அப்துல் கலாம் உயரம் குறைந்தவர் என்றாலும் கூட அவரது பெற்றோர்கள் நல்ல உயரமானவர்கள். அந்தப்பகுதியில் நல்ல தம்பதி என பெயரெடுத்தவர்கள். கலாமின் அம்மா மிகவும் நல்ல குணமுடையவர். தினமும் வீட்டு நபர்களைத்தாண்டி வெளியாட்கள் அதிகம் பேர் அவரது சமையலை சாப்பிட்டு பசியாற்றுவார்கள்.

கலாம் அவர்களின் அப்பா ஒருமுறை இப்படித்தான் வாழ்க்கை பற்றி கலாமிற்கு விளக்கினார் ‘ஓருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ, நல்லதோ கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டியிருந்தாலும் அது தெய்வ சங்கல்பம். இந்த உலகத்தில் பரவிப்பரந்துள்ள தெய்வீக சக்தியில் நாம் எல்லோரும் குறிப்பிட்ட பகுதியாக இருக்கிறோம். பிறகு எதற்காக கஷ்டங்கள்,துயரங்கள், பிரச்சனைகளைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்ன சிரமங்கள் வந்தாலும் அதற்கான காரண காரியங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்திட வேண்டும். பாதிப்புகள் வரும்போது உள்முகத் தேடலுக்கான வாய்ப்பும் கூடவே வரும்” 


சகோதரியின் கணவர் : ஜலாலுதீன்

Abdul Kalam Motivated young girls students

 

ஜலாலுதீன் என்பவர் கலாம் அவர்களின் சகோதரியின் கணவர். ராமேஸ்வரம் தீவு பகுதியிலேயே அந்த காலகட்டத்தில் ஆங்கிலம் எழுத தெரிந்தவர் இவர் மட்டுமே. குடும்பத்தின் வறுமை சூழலால் பள்ளிப்படிப்பை மேற்கொண்டு தொடர முடியாத நிலை ஏற்பட்டது. கலாம் அவர்களை விடவும் 15 வயது மூத்தவராக இருந்தபோதும் ஒரு நண்பர் போலவே கலாம் அவர்களுடன் ஜலாலுதீன் அவர்களின் உறவுமுறை என்பது இருந்தது.

கலாம் படிப்பில் கெட்டிக்காரராக வர வேண்டும் என விரும்பியவர்களில் முதன்மையானவர் ஜலாலுதீன். அந்த இளம் வயதில் உலகில் நடக்கக்கூடிய விசயங்கள் பற்றி அறிவார்ந்தவர்கள் பற்றி விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பற்றி இலக்கியம் பற்றி என அனைத்தையும் கலாம் அவர்களோடு உரையாடிக்கொண்டே இருப்பார். கலாம் ஜலாலுதீன் பற்றி இப்படித்தான் கூறுவார் “நமது குறுகிய எல்லைகளைத்தாண்டிய அச்சமற்ற, புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியவர் ஜலாலுதீன்”

 

ஒன்றுவிட்ட சகோதரர் சம்சுதீன்

Abdul kalam motivated Students

 

கலாம் அவர்கள் அக்னி சிறகுகள் புத்தகத்தில் சம்சுதீன் தனது இளம் பருவத்தை செய்துக்கியவர்களில் ஒருவர் என குறிப்பிட்டு இருக்கிறார். அப்போது ராமேஸ்வரத்தில் படிக்கத்தெரிந்த 1000 நபர்களின் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகிக்கும் முகவர் தான் சம்சுதீன். மிகவும் திறமைசாலியும் பொறுப்பாளியுமான சம்சுதீனுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை கலாம் அவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்.

இரண்டாம் உலகப்போர் நடந்த தருணத்தில் ராமேஸ்வரத்தில் ரயில் வண்டி நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் செய்தித்தாள் அனைத்தும் ஓடுகிற வண்டியில் இருந்து தூக்கி வீசப்படும். அதனை பிடித்துக்கொண்டு வரும் வேலைக்கு உதவியாக கலாம் அவர்கள் செல்வார். அதற்காக அவருக்கு சம்பளமும் கொடுப்பார் சம்சுதீன். 50 ஆண்டுகளுக்கு பிறகு அப்போது தான் சம்பாதித்த பணத்தை நினைத்தால் பெருமிதம் வருகிறது என்பார் கலாம்.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதே சில உள்ளார்ந்த பண்புகளுடனும் குணாதிசியங்களுடனும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார சூழலுடன் கொண்ட குடும்பத்தில் பிறக்கின்றன. பிறகு அந்தக்குழந்தைகள் ஆதிக்கம் செலுத்துவோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. நேர்மையும் சுயகட்டுப்பாடும் என தாய் தந்தையிடம் இருந்து எனக்கு கிடைத்த சொத்துக்கள் என குறிப்பிடும் கலாம் அவர்கள் குழந்தைப்பருவத்தில் தன்னிடம் பதிந்த சிறப்பு இயல்புகளுக்கு ஜலாலுதீன் மற்றும் சம்சுதீன்ஆகிய இருவரும் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறுகிறார்.

 

பெற்றோர்களே!

indian-parents

 

உங்களது பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்க ஆசைப்பட்டால் நீங்கள் அத்தகைய பண்புகளை கொண்டிருக்க முயலுங்கள். நல்லவர்களோடு உங்களது குழந்தைகளை பழக வாய்ப்பை ஏற்படுத்தித்தாருங்கள். ஒரு குழந்தை நல்லவர்களாக வளர சமூகமும் சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெறும் பள்ளிகளும் சத்தான உணவுகளும் மட்டுமே நல்லவர்களாக உங்களது குழந்தைகளை மாற்றி விடாது.

 

இதுபோன்ற கட்டுரைகளை படிப்பதற்கு எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திடுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *