“காஃப்கா எழுதாத கடிதம்” வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் | எஸ்.ராமகிருஷ்ணன்

28 கட்டுரைகளும் படித்து முடிப்பதற்குள் எல்லாவித உணர்வுகளுக்கும் நாம் பயணித்து விடுகிறோம். அது மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும்  அழைத்துச் செல்லும் மனோபாவம் ,அங்குள்ள மனிதர்களின் வாழ்வியலையும் உணர்வுகளின் வழியாகக் கடத்தும் தன்மையை நமக்குள் இப்புத்தகம் தருகிறது.


காஃப்கா எழுதாத கடிதம் என்ற புத்தகம் குறித்து உமா மஹேஸ்வரி கோபால் அவர்கள் எழுதியுள்ள புத்தக விமர்சனம் இங்கே 

காஃப்கா எழுதாத கடிதம் (கட்டுரைகள் )

ஆசிரியர் :எஸ்.ராமகிருஷ்ணன் 

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் (2018)

பக்கங்கள் : 240

விலை : ரூ 250

எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் 1966 இல் பிறந்து தற்போது சென்னையில் வசிக்கிறார். முழு நேர எழுத்தாளராக விளங்கும் இவர் , நாவல்கள் , கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் , திரைப்பட நூல்கள் , குழந்தைகள் நூல்கள் , உலக இலக்கியப் பேருரைகள் , வரலாறு ,நாடகத் தொகுப்புகள் ,நேர் காணல் தொகுப்புகள் , மொழி பெயர்ப்புகள் ,தொகை நூல்கள் என எல்லா வகை எழுத்துகளையும் தந்துள்ளார். இரு நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ள இவர் ஆங்கிலத்திலும் சிலநூல்கள் எழுதியுள்ளார். 

புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள் என முன்னுரையில் குறிப்பிட்டுள்ள எஸ் . ரா , நமக்கும் அந்த  சிறகுகளை அளிப்பதை உணர முடிகிறது இப்புத்தகத்தை வாசிக்கும் போது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம் பெற்றிருக்கிறது. அது மரத்திற்கு மட்டுமானதில்லை , எழுத்தாளர்களுக்கும் பொருந்தக் கூடியது தான் என்கிறார். அத்தனை அற்புதமான நூல் தான் இதுவும். 

நூல் குறித்து

உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து , கேப்ரியல் கார்சியா மார்வெஸ் , ஸ்டீபன் ஸ்வேக் , மிரோஜெக், ரேமண்ட் கார்வர் , விளாதிமிர் மெக்ரே , லியோெெலெட் லெடுக் , செல்மா லாகர் லெவ் , வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் , ஜே.ஆலன் பூன் , ஒனா நோ கோமாச்சி என்ற உலகின் எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வழியாக நம்முடன் ஆழமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது இப்புத்தகம் வாசித்த பிறகு .

 

28 கட்டுரைகளும் படித்து முடிப்பதற்குள் எல்லாவித உணர்வுகளுக்கும் நாம் பயணித்து விடுகிறோம். அது மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும்  அழைத்துச் செல்லும் மனோபாவம் ,அங்குள்ள மனிதர்களின் வாழ்வியலையும் உணர்வுகளின் வழியாகக் கடத்தும் தன்மையை நமக்குள் இப்புத்தகம் தருகிறது.

 

1.காஃப்கா எழுதாத கடிதம் 

2.புத்தனோடு நடப்பவர்கள் 

3 .ஆமாம் மார்க்வெஸ் , நீங்கள் தான் எனது மேஸ்ட்ரோ , 

4.கார்வரின் கதையுலகம்

5 .முதற் பறவை

6. தனிமை கண்டதுண்டா

7.இயற்கையின் விசித்திரங்கள் 

8.சிரிப்புக்கு நிறமில்லை

9 .காடு கற்றுத் தருகிறது 

10. உலகின் மகத்தான ஓவியன்

11 மோபிடிக்கை வெல்ல முடியாது

12. கார்வரும் செகாவும்

13. மகாபாரதம் படிப்பது எப்படி

14. தேநீர்க் கலை

15. வெள்ளைக் காகிதம் 

16. கோகோலின் பெயரால்

17. காற்றடித்த யானை

18. உண்மையை ருசிப்பவர்கள் 

19. நிலவும் நாணயங்களும்

20. நூறு பொருள்களில் உலக வரலாறு 

21. பாரீஸில் கால்வினோ

22. பாஷோவின் பயணங்கள்

23. புல்லினைக் கடக்கும் காற்று

24. வால் ஆட்டாத நாய்

25. ஐரோப்பிய கூலிப்படை

26. வாழ்வின் சில உன்னதங்கள்

27. இறந்தவர்கள் பொய் சொல்வதில்லை 

28. முறிந்த கரண்டி


இவைதான் 28 கட்டுரைகளின் தலைப்புகள் . ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் நாம் போகும் போது நாம் பெறும் அனுபவம் மிக அலாதியானது. இத்தனை எழுத இவர் எத்தனை லட்சக்கணக்கான பக்கங்களைப் படித்திருந்தால் இப்படி எழுத முடியும் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. உலக அளவிலான இத்தனை எழுத்தாளர்களைக் குறித்தும் நம்மால் தேடிப் படிக்க இயலாது . ஆனால் எல்லோரைப் பற்றியும் ஆழமாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்து நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது காஃப்கா எழுதாத கடிதம் . புதுமைப்பித்தனனயும் காஃப்காவையும் ஒப்பிடுகிறார் எஸ்.ரா .அதே போல அப்பாவின் மீதான வெறுப்பும் கசப்புணர்வுமே தஸ்தாயெவ்ஸ்கியை கரமசோவ் கதாபாத்திரத்தை உருவாக்க வைத்திருக்கிறது , செகாவின் அப்பாவும் காஃப்காவின் அப்பா போலத்தான் என நிறைய ஒப்பீடுகள் , காஃப்கா என்பது தனிநபரில்லை. 

 

காஃப்காவாகவே நம்மை உணர வைக்கும் பல தருணங்கள் இதை வாசிக்கும் போது நிகழ்கின்றன . இப்படியே ஒவ்வொரு கட்டுரையும் நமக்குள் ஆழ ஆழ சென்று சில நெகிழ வைக்கின்றன. சில உருக்குகின்றன , சில அழ வைக்கின்றன. அப்படியே ஓரிரு இடங்கள் நகைப்பையும் உருவாக்குகின்றன .எழுத்து அறிமுகமாகாமல் போயிருந்தால் மனித குலம் இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. மனிதக் கண்டுபிடிப்புகளில் மகத்தானது  எழுத்து என்கிறார் .இந்த எழுத்துகளுக்கும் உயிர் இருப்பதை உணர முடிகிறது. 

 

இந்நூலில் பேசப்படாத விஷயமே இல்லை எனலாம். இயற்கை குறித்து நைல் நதியுடன் ஒரு பயணம் பற்றிப் பேசுவதுடன் கிரிகர் ஜோகன் மெண்டல் பட்டாணிச் செடியுடன் வாழ்ந்த வரலாறும் பேசப்டட்டுள்ளது.. ஆப்பிரிக்க மக்கள் இடம் பெயர்ந்து செல்லும் போது தங்களுடன் எடுத்துச் செல்லும் கைக் கோடாரியான   கற்கோடாரி போன்ற ஒன்று சென்னையில் பல்லாவரத்தில் கண்டறிந்துள்ளது முதலான தொல்லியல் குறித்தும் பேசப்பட்டுள்ளது, வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும்  பேசப்பட்டுள்ள பொருண்மைகள் படிப்போரை இழைய வைக்கின்றன. காடுகள் , விலங்குகள் குறித்தும் காதல் – காமம் குறித்தும் ஓரினச்சேர்க்கை என இப்புத்தகம் தொடாத எல்லைகள் அரிது. தேவ மலர் என்றொரு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றை தேவ மலரின் கதை மிக சுவாரஸ்யம். காற்றும் நிலமும் ஆறும் கடலும் ஓவியமும் உரையாடுகின்ற இடங்கள் அத்தனை அபாரம். 

பழைய புத்தகக் கடைகளின் தேடலில் கடைக்காரருக்கு எஸ்.ரா வழங்கிய ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் தருணங்கள் கண்ணில் நீர் சொறிய வைத்து விட்டனர். ஒரு ஸ்நேகம் துவங்குவதற்கு ஒரு கோப்பைத் தேநீர் போதுமானதாக இருக்கிறது அல்லவா , தேநீர்க் கலை என்ற தலைப்பில் வரும் கட்டுரையை மட்டும் வாசித்துப் பாருங்கள். தேநீரைப் போலவே ரசித்து ருசித்துப் படிக்க இப்புத்தகம்  உங்களை வழிகாட்டும். இப்புத்தகத்தை தேடி வாசிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *