இன்டர்நெட் – இனி இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை
வெறுமனே சொல்லிக்கொள்வதனால் மட்டுமே ஒரு நாடு ஜனநாயக நாடாக மாறிவிட முடியாது. அது அந்த நாடு அதன் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளாக எவற்றை வழங்கியிருக்கிறது என்பதனை பொறுத்தது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்த அரசியல் பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியது. அப்போது வன்முறைகள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக ஊரடங்கு உத்தரவு, மிக முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலில் வைப்பது என நடவடிக்கைளை எடுத்தது அரசு. மிக முக்கியமாக, ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்டர்நெட் வசதியை முடக்கி வைத்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஆகஸ்ட் முதல் விசாரித்து வந்தது உச்சநீதிமன்றம். தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில் இன்டர்நெட் இந்தியக்குடிமகனின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரவேற்கப்படக்கூடிய தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
அடிப்படை உரிமை
இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. அவற்றை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்படையான காரணங்கள் அன்றி வேறெந்த காரணத்துக்காகவும் யாராலும் அந்த உரிமைகளை தடுத்து நிறுத்த முடியாது. அதன்படி பின்வரும் சில அடிப்படை உரிமைகள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமத்துவ உரிமை
சுதந்திர உரிமை, இதில் பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை, அமைதியாக ஆயுதங்களின்றிக் கூடும் உரிமை, சங்கங்கள் அல்லது கூட்டமைவுகள் அமைக்கும் உரிமை, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் தடையின்றிச் சென்று வரும் உரிமை, இந்திய ஆட்சிநிலவைரயின் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும் நிலையாகக் குடியமர்வதற்குமான உரிமை, விழைதொழில் எதனையும் புரிந்து வருவதற்கும் அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்கும் உரிமை
சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை
பண்பாடு மற்றும் கல்வி உரிமை
அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமை
வாக்களிக்கும் உரிமை (18 மேற்பட்டவர்களுக்கு மட்டும்)
இன்டர்நெட்டை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என சொல்லிவிட்டால் உங்களை வீட்டுச்சிறையில் வைத்தது போல ஆகிவிடும்.
இன்டர்நெட் – அடிப்படை உரிமை
இன்டர்நெட் வசதியை மக்களின் அடைப்படை உரிமையாக வழங்கிட சட்ட முன்னெடுப்புகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என ஐநா ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி இன்டர்நெட் மூலமாக தகவலை பெறுவதும் என கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இந்தியக்குடிமகன் ஒருவருக்கு இன்டர்நெட் பயன்படுத்திட அரசால் தடை விதிக்க முடியாது. இன்டர்நெட் மூலமாக தகவலை பெறுவது இந்தியக்குடிமகனின் உரிமையாக அது மாறி இருக்கிறது.
எப்படி பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றனவோ அதுபோலவே இன்டர்நெட் உரிமை க்கும் கட்டுப்பாடுகள் இருக்கவே செய்யும். அரசியல் சாசன சட்டத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ள தேசத்திற்கு எதிராக, வன்முறையை தூண்டும் விதமாக, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக இன்டர்நெட் உரிமைக்கு அரசால் தடை போட முடியும். ஆனால் அரசின் நடவடிக்கை தவறாக இருக்கும் பட்சத்திலோ அல்லது பல நாட்களுக்கு தொடரும் பட்சத்திலோ அதனை எதிர்த்து வழக்கு தொடர முடியும்.
உச்சநீதிமன்றம் உடனடியாக காஷ்மீரில் இன்டர்நெட் வசதி மீண்டும் கொடுக்கப்படுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க அந்த அரசுக்கு கட்டளை இட்டிருப்பதே அதற்கு சான்று.
அரசாங்கம் அடிப்படை உரிமைகளை தடையின்றி வழங்க வேண்டும்
அடிப்படை உரிமைகளுக்கு தடை போடாமல் போனால் வன்முறைகளும் அசம்பாவிதங்களும் நடைபெற்றுவிடுமே என கேட்கலாம். ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் நாளை ஆட்சியில் இல்லாமல் போகலாம். அப்போது ஆட்சியில் இருப்பவர்கள் அடிப்படை உரிமைகளை பறித்தால் என்னவாகும்? இதைத்தான் இங்கு இருக்கும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பேச்சுரிமையை எடுத்துக்கொள்வோம். இன்று ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி அரசுக்கு எதிராக பேசுவதை குற்றமாக கருதுகிறது என வைத்துக்கொள்வோம். நாளை அதே கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும் போது அவர்களாலேயே கூட அரசை எதிர்த்து பேச முடியாமல் போகும்.
ஜனநாயக நாட்டின் வலிமை என்பது அனைவருக்கும் சுதந்திரத்தை கொடுத்து அதற்குள்ளாக நிம்மதியாக ஒழுங்காக வாழ்வது தான். பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கைதிகளை போல நடத்திடுவது அல்ல. பொதுமக்களும் தங்களுக்கான உரிமைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அரசாங்கம் தடை விதிக்கவே செய்யும். ஆகவே இதில் இருவருக்குமே பொறுப்பு இருக்க வேண்டும். அதிக பொறுப்பு அரசுக்கே!
உங்களை பொறுத்தவரையில் யார் அதிக பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும்? கமெண்டில் பதிவிடுங்கள்
A . அரசு
B . குடிமக்கள்
C . இருவரும்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
My Answer Is C