கரோனா வைரஸ் வெயிலில் பரவாது, தமிழர்களை தாக்காது போன்ற வெற்று வதந்திகளை நம்பி அலட்சியமாக செய்யப்படுவதை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி இருக்கும்.
கரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பரவ துவங்கி இருக்கிறது. சீனாவில் மட்டுமே மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்திய கரோனா வைரஸ் தற்போது இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்த துவங்கி இருக்கிறது. கரோனா வைரஸ்க்கு என சரியான எதிர்ப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. அமெரிக்காவில் நோய் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முடிவு தெரியவே இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகம்பேருக்கு பரவிக்கொண்டே இருக்கிறது.
இதற்கு மிக முக்கியக்காரணம் பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்து பெரிய அச்சம் கொண்டிராமல் இருப்பது தான். குறிப்பாக இந்தியாவில் அதேபோல நமது தமிழ்நாட்டில் இன்னமும் பொதுமக்கள் பெருவாரியாக கூட்டமாக கூடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அனைத்து தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மற்றவர்களிடமிருந்து தான் வைரஸ் பரவுகிறது என்ற செய்தி கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்கள் எவ்வித அக்கறையுமின்றி பொது இடங்களில் கூடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் வைரஸ் கண்டறியப்பட்டவரை அடையாளம் கண்டுகொண்டால் கூட அவர் யாரிடம் தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது மிகப்பெரிய சவாலாக அரசுக்கு இருக்கிறது.
ஆரம்பகட்டத்தில் சீனாவின் வூஹானில் தான் அதிகம் பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டார்கள். இப்போதும்கூட அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக சீனா தான் இருக்கிறது. ஆனாலும் தற்போது வைரஸ் பரவலை மிகவும் சிறப்பாக சீனா கட்டுப்படுத்திவிட்டது. அலட்சியமாக நடந்துகொண்ட பிற உலகநாடுகள் பலவற்றிலும் இறப்பு எண்ணிக்கையும் வைரஸ் புதிதாக பாதித்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட சீனா எப்படி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது? இதற்கு எளிமையான பதில், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்த வூஹான் பகுதியை முற்றிலுமாக துண்டித்துவிட்டது சீனா. இதனால் வூஹானில் இருப்பவர்கள் வெளியேற முற்றிலுமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதேசமயம் அங்கிருப்பவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனால் புதிதாக வேறு எவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதேசமயம் வைரஸ் பாதிதவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. வேகமாக நடவெடிக்கைகளை எடுத்த சீனாவை உலக சுகாதார அமைப்பு கூட வெகுவாக பாராட்டி இருந்தது கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை சில நூறுகளில் தான் இருக்கிறது. ஆனால் கரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை என்பது திடீரென தான் உயருகிறது. ஆகவே எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என அலட்சியமாக இருப்பது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் இப்போதுதான் மக்கள் அதிகம் கூடும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்னமும் கோவில், சர்ச்சுகள், மசூதிகள் போன்ற இடங்களில் மத வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன. இன்னும் தினசரி நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே நடைபெற்று வருகின்றன. தனியார் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
பொதுமக்களை பொறுத்தவரைக்கும் இன்னமும் பெரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. எப்போதும் போலவே அவர்கள் பொது இடங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உணர்வும் இன்றி சென்றுவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் தற்போது மிகப்பெரிய சவாலான விசயமாக கருதப்படுகிறது. கரோனா வைரஸ்க்கு எதிராக தற்போதைக்கு நம்மால் செய்யமுடிந்த ஒரே விசயம் பிறருக்கு அது பரவாமல் தடுப்பது தான். அதற்கு உறுதுணையாக நாம் செயல்பட்டால் மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இனியாவது பொதுமக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு செயல்படவேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சீனாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது?
கரோனா வைரஸ் – சிறப்பாக எதிர்கொள்ளும் சிங்கப்பூர் – மற்ற நாடுகளும் பின்பற்ற முடிவு
கரோனா வைரஸ் முழுத்தகவல் படியுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!