கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக உலக அளவில் 3000 பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.
கரோனா வைரஸ் என்றால் என்ன?
உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்படி 31,டிசம்பர் 2019 அன்று வூஹான் நகரில் பல்வேறு நபர்களுக்கு நிமோனியா காய்ச்சல் போன்று ஏற்பட்டது என்றும் ஆனால் அதில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் இதற்கு முந்தைய வைரஸ்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. புதிய வைரஸ் என்பதால் மனிதர்களை இது எப்படி தாக்குகிறது என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில், ஜனவரி 07,2020 அன்று சீனாவை சேர்ந்த மருத்துவக்குழுவினர் இந்த புதியவகை வைரஸ் ஆனது கரோனா வைரஸ் எனவும் சாதாரண காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் குடும்பத்தை இது சார்ந்தது எனவும், சார்ஸ், மெர்ஸ் போன்றதொரு புதுவகை வைரஸ் தான் இந்த கரோனா வைரஸ் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைக்கு இந்த வைரஸ்க்கு 2019-nCoV என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. கரோனோ வைரசுக்கு கோவிட் 19 (COVID-19) என பெயரிடப்பட்டுள்ளது
கரோனா வைரஸ் எங்கிருந்து உருவாகி இருக்கலாம்?
இதுதான் இப்போதைக்கு மருத்துவக்குழுவினர் முன் நிற்கும் மிகவும் சவாலான கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை வைரஸ் எங்கிருந்து பரவியது பரவுகிறது என தெரிந்தால் கட்டுப்படுத்துவது எளிமையாக இருக்கும். ஆனால் கரோனா வைரஸ் இப்படி பரவி இருக்கலாம் என்ற அனுமானங்கள் இருக்கின்றன. சீன தரப்பிலும் இந்த அனுமானங்களே வைக்கப்படுகின்றன. அதாவது வூஹான் நகரில் மிகப்பெரிய இறைச்சிக்கூடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலானது வவ்வால்கள் மூலமாகவே பரவின. ஆகவே இப்புதிய வைரஸ் கூட வவ்வால்கள் மூலமாக பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. வவ்வால்களில் இருந்து பாம்புகளுக்கு பரவி அதன் இறைச்சியை தொடுவது மற்றும் சாப்பிடுவதும் மூலமாக இந்த வைரஸ் தாக்குதல் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
உயிரி ஆயுதமா கரோனா வைரஸ்?
விலங்குகளிடம் இருந்துதான் கரோனா வைரஸ் பவரவுகிறது என கூறப்பட்டு வரும் சூழலில் வேறொரு காரணத்தால் கரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என இஸ்ரேல் நாட்டை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவரது கூற்றுப்படி, வூஹான் நகரில் மனிதர்களை கொள்ளும் திறன் கொண்ட வைரஸ்களை உலக நாடுகளுக்கு தெரியாமல் உருவாக்கும் மருத்துவக்கூடங்களை சீனா அமைத்திருந்தது எனவும் அங்கு பணி புரிந்தவர்கள் மூலமாக அல்லது கசிவு மூலமாக இந்த கரோனா வைரஸ் மக்களிடம் பரவி இருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனை சீனா கடுமையாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா?
நோய் தோற்று ஏற்பட்டுள்ள சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் இருந்து கரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு பரவும் அபாயம் இருக்கிறது. ஆகையால் உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே வைத்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கிறார்கள். அதன்படி இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய இடங்களுக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. கேரளத்தில் 7 பேருக்கும், மும்பையில் 2 பேருக்கும், பெங்களூரு மற்றும் ஹைதராபாதில் தலா ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதையடுத்து, அவா்கள் அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கேரளத்தைச் சோ்ந்த 7 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மற்ற 4 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவா்கள் 11 பேரையும் மருத்துவா்கள் குழு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இதுதான் முந்தைய செய்தியாக இருந்தது.
அண்மைய செய்தி என்னவென்றால் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டுளார்கள். அதேபோல தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.ஜெய்ப்பூரில் 69 வயது இத்தாலிய சுற்றுலாப்பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவது எப்படி?
மூச்சுக்குழாயில் தாக்குதலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலினால் ஆரம்பகட்டத்தில் காய்ச்சல் சளி போன்றவை ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சுவாச பிரச்சனை மற்றும் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு பின்னர் நுரையீரல் செல்களில் இருக்கும் புரத தன்மையை பாதித்து தாக்குதலை அதிகரிக்கிறது. பின்னர் 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் நிமோனியாவை உருவாக்குகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கரோனா வைரஸ் அச்சம் தேவையில்லை என இந்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பொதுமக்களும் இவ்விசயத்தில் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தொடர் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது மிக மிக அவசியம் என்பதை உணர வேண்டும்.
உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்
இயற்கை சீற்றங்களும் கரோனா வைரஸ் போன்ற தாக்குதல்களும் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில நடவெடிக்கைகளை எடுக்கிறோம் என்ற பேர்வழியில் உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் கொடுமையும் அரங்கேறி வருவது மறுக்க முடியாத ஒன்று. கரோனா வைரஸ் அப்படியான உயிரி ஆயுதம் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, அதுவரைக்கும் மகிழ்ச்சி.இதுபோன்ற பேரழிவுகளை தடுக்க உலக நாடுகள் அர்ப்பணிப்போடு ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் துவங்க ஆரம்பித்துவிட்டன. இந்தசூழலில் இந்தியாவும் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் வரிசையில் இணைந்திருக்கிறது. மருந்து அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்கிற பட்சத்தில் அரசாங்கம் மிக விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே கொஞ்சமேனும் இந்த நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியும். பொதுமக்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ளவேண்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!