ஞானக்கூத்தன் கவிதைகள்

காகித வாழ்க்கை

திடீரென்று ஆனால்

சர்வ நிச்சயத்துடனே அன்று

தொடங்கிய எனது வாழ்வை

வியக்கிறேன் திரும்பிப் பார்த்து.

நான் அதைக் கேட்கவில்லை

எனக்காக யாரும் கேட்கவில்லை

என்பதுறுதி ஆனால்

ஏனது உண்டாயிற்று?

அவ் வேத கோஷத்தோடு

மழை மண்ணில் இறங்கும் போது

இவ் இது என் வாழ்க்கை வானி

லிருந்து பொட்டலம் போல் வீழ-

பொட்டல மான யானே என்னையே

பிரித்துப் பார்க்கும்

அதிசயம் இதன் பேரென்ன?

நிச்சயத்தோடு அன்று

வாழ்க்கையே தொடங்கிற் றென்றால்

எங்கிருந் தாரம்பம் என்று

தேடு மென் மடமை என்ன!

உலகெங்கும் பிரிப்பில்லாமல்

பொட்டல எருக்கங்காடு

புசுண்டகன் அலகுக் கூத்து

என்னை நான் பிரித்துப் பார்த்தேன்

விக்கித்துக் கண் கலுழ்ந்தேன்

கடவுளைக் கண்டேன் அந்தப்

பொட்டலத்தின் கால் விரித்த

ஒரு மூலைக் கோட்டில் நின்றார்

விரல்களால் என்னை மீன்போல்

தூக்கினார் வாய்க்குள் இட்டார்

ஆனந்தம் அவரை முந்தி

நான் சொன்னேன் அவர் சிரித்தார்

பொட்டலக் காட்டில் சர்வ

நிச்சயத் துடனே நின்றேன்

எப்படி உண்டாயிற்று

அது என்ற கேள்வியோடு.

Share with your friends !