Site icon பாமரன் கருத்து

ஞானக்கூத்தன் கவிதைகள்

ஞானக்கூத்தன் கவிதைகள்

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

••••

காலவழுவமைதி

“தலைவரார்களேங்…

தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.

தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்

தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்

கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்

காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

“வளமான தாமிழர்கள் வாட லாமா?

கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற

பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?

தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்

கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே

நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்

நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்

தலைவரார்களேங்

பொதுமாக்களேங் நானின்னும்

யிருகூட்டம் பேசயிருப்பதால்

வொடய் பெறுகறேன் வணக்கொம்”

‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்

அமைதி… அமைதி…

•••

மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல

சொற்பொழி வாற்றலானார்:

வழுக்கையைச் சொறிந்தவாறு

‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;

மேசையின் விரிப்பைச் சுண்டி

‘வையத்து நாட்டில்’ என்றார்;

வேட்டியை இறுக்கிக் கொண்டு

‘விடுதலை தவறி’ என்றார்;

பெண்களை நோட்டம் விட்டு

‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;

புறப்பட்டு நான் போகச்சே

‘பாரத தேசம்’ என்றார்;

‘வாழ்விக்க வந்த’ என்னும்

எஞ்சிய பாட்டைத் தூக்கி

ஜன்னலின் வழியாய்ப் போட்டார்

தெருவிலே பொறுக்கிக் கொள்ள

•••

பரிசில் வாழ்க்கை

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்

வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு

காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு

கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை

நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு

நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த

தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு

தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்

பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்

பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து

பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்

மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று

முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்

வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்

வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான

பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்

பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்

பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்

ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற

அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்

காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்

பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்

ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.

அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு

நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்

விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்

கும்மியடி தமிழ் நாடு முழுவதும்

குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி…

காணிக்கை கொண்டு வாருங்கடி… கு

லோத்துங்க சோழனைப் பாருங்கடி

நாளை அமைச்சரைப் பாருங்கடி… மவ

ராசனைப் பார்த்துக் கும்மியடி…

சென்மம் எடுத்தது தீருதடி… இந்த

சித்திரச் சாமிக்குக் கும்மியடி

•••

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா

மகிழ்ச்சியினால்

மரியாதையை நான்

குறைத்ததற்கு

மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்

சங்கக்கவிதை யாதொன்றும்

படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த

அன்பு தோன்றிற்று

இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்

தூக்கம் போட்ட முதல்மனிதன்

நீதான் என்னும் காரணத்தால்

**

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்

பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ

பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்

பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்

சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்

எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த

முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்

துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்

கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ

கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்

கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்

பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்

நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு

**

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு

‘மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்

பார்த்திருக்க மாட்டீர்கள்

மன்னார்சாமி

ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல்

ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும்

ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக்

குறைவில்லை

இது கபாலம்

மார்புக்கூடு…

போணிசெய்த பெருங்கைகள்…

கைகால் மூட்டு

பூரான்போல் முதுகெலும்பு… சிரிக்கும் பற்கள்…

சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும்

புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’

மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க

ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி

அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு

**

சைக்கிள் கமலம்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்

மைதானத்தில் சுற்றிச் சுற்றி

எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பியைக் கொண்டு போய்ப்

பள்ளியில் சேர்ப்பாள்

திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்

கடுகுக்காக ஒரு தரம்

மிளகுக்காக மறு தரம்

கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க

மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்

வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்

இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்

எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்

என்மேல் ஒருமுறை விட்டாள்

மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்

**

விடுமுறை தரும் பூதம்

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்

வேலை என்னும் ஒரு பூதம்

திங்கள் விடிந்தால் காதைத் திருகி

இழுத்துக் கொண்டு போகிறது

ஒருநாள் நீங்கள் போகலை என்றால்

ஆளை அனுப்பிக் கொல்கிறது

மறுநாள் போனால் தீக்கனலாகக்

கண்ணை உருட்டிப் பார்க்கிறது

வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்

வீட்டில் ஒருவர் நலமில்லை

என்னும் பற்பல காரணம் சொன்னால்

ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

வாரம் முழுதும் பூதத்துடனே

பழகிப் போன சிலபேர்கள்

தாமும் குட்டிப் பூதங்களாகிப்

பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

தட்டுப் பொறியின் மந்திரகீதம்

கேட்டுக் கேட்டு வெறியேறி

மனிதர் பேச்சை ஒருபொருட் டாக

மதியாதிந்தப் பெரும்பூதம்

உறைந்து போன இரத்தம் போன்ற

அரக்கை ஒட்டி உறை அனுப்பும்

‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ன்னும்

இந்தப் பேச்சை அது கேட்டால்

யோசனை

உனக்கென்ன தோன்றுது

கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள்

கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்

யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்

போச்சு

பரிசில் வாழ்க்கை

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்

வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு

காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு

கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை

நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு

நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த

தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு

தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்

பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்

பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து

பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்

மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று

முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்

வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்

வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான

பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்

பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்

பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்

ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற

அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்

காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்

பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்

ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.

அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு

நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்

விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்

கும்மியடி தமிழ் நாடு முழுவதும்

குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி…

காணிக்கை கொண்டு வாருங்கடி… கு

லோத்துங்க சோழனைப் பாருங்கடி

நாளை அமைச்சரைப் பாருங்கடி… மவ

ராசனைப் பார்த்துக் கும்மியடி…

சென்மம் எடுத்தது தீருதடி… இந்த

சித்திரச் சாமிக்குக் கும்மியடி

நாயகம்

மனிதர் போற்றும் சாமிகளில்

ஒற்றைக் கொம்பு கணபதியை

எனக்கு பிடிக்கும். ஏனெனில் வே

றெந்த தெய்வம் வணங்கியபின்

ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை.

இக்கரைப் பச்சை

பொக்கைவாய் அய்யர்ப் பெரிய கண்ணாலத்தில்

வக்குமாப் பிள்ளைக்கு மட்டுமோ?

நிற்கின்ற

வாழைக்கும் தோரணத்துக்கும்

சூழ்மனிதருக்கும் சேர்த்து அயலூரே!

போராட்டம்

கைவசமிருந்த காதற்

கடிதங்கள் எரித்தேன் வாசல்க்

கதவுமுன் குவித்துப் போட்டு

காகிதம் எரிந்து கூந்தல்

சுருளெனக் காற்றில் ஏறி

அறைக்குள்ளே மீளப் பார்க்கக்

கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்

வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே

கரிச்சுருள் கூட்டம் போட்டுக்

குதித்தது அறைக்குள் போக

காகிதம் கரியானாலும்

வெறுமனே விடுமா காதல்.

யோஜனை

அம்மிக்கல் குழவிக்கல்

செதுக்கித் தள்ளும்

ஒரு சிற்பக் கூடத்தில்

மைல்கல் ஒன்று

வான் பார்த்துக் காட்டிற்று

நாற்பதென்று.

உறவு

ஈரக் கைகளைப் புடவையில் துடைத்தவா

றெதிர் வீட்டம்மாள் எட்டிப் பார்த்தாள்

அம்மா தபால்.

அஞ்சலட்டையை நொடியில் படித்ததும்

எரவாணத்தில் செருகிப் போனாள்

எரவாணத்தில் செருகிய கடிதம்

வருத்தப்பட்டு மூக்குக் கறுத்ததே.

ஆவதும் என்னாலே

முதலிலிவர் போட்டியிட்டார் ஜாமீன்போச்சு

மறுபடியும் இவர் நின்றார் எவனெல்லாமோ

உதவுவதாய் வாக்களித்துக் கைவிரிச்சான்

கடைசிநாள் நான்போனேன் சுவரிலென்பேர்

கண்டதனால் முன்கூட்டி மக்கள் வெள்ளம்

கைதட்டல் நானெழுந்து பேசும் போது

ரெண்டுமணி. எதிரிகளைப் பிட்டுவைச்சேன்

பத்தாய்ரம் வாக்கதிகம். இவர் ஜெயித்தார்.

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப

வயிறெனத் தெரிந்த கீற்றுக்

குடிசைகள் சாம்பற் காடாய்ப்

போயின

புகையோடு விடிந்த போதில்

ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்

குழந்தைகள் இவைகள் என்றார்

பெண்களோ இவைகள்? காலி

கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட

அனைத்துக்கும் அஸ்தி கண்டார்

நாகரிகம் ஒன்று நீங்க

விட்டுப்போன நரி

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

மேற்படிக்

குரலைக் கேட்டார்

மாதொரு

பாகர். குற்றம்

ஏற்பட

வியந்தார். தேவி

ஏளனம்

செய்தாள் சற்று

“வாதவூரடிகட்காக

நரிகளைத் தேர்ந்த போது

நீதியோ என்னை மட்டும்

விலக்கிய செய்கை சாமீ!”

திருவருட்

திட்டம் பொய்த்த

தற்கொரு

ஊளைச் சான்றாம்

நரி எதிர்

உதித்துக் கீற்று

நிலாத் திகழ்

ஈசர் சொன்னார்:

நரிகளைப் பரிகளாக்கும்

திருவிளையாடல் முற்றும்

விடுபட்ட பேரை நாங்கள்

கவனிக்க மாட்டோம் போய்வா

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்

எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்

ஆள் நடவாத தெருவில் இரண்டு

நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன

ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்

அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன

நகர நாய்கள் குரைப்பது கருதிச்

சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன

நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்

கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு

வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்

கடைசி நாயை மறித்துக்

காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

காலவழுவமைதி

“தலைவரார்களேங்…

தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.

தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்

தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்

கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்

காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

“வளமான தாமிழர்கள் வாட லாமா?

கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற

பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?

தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்

கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே

நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்

நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்

தலைவரார்களேங்

பொதுமாக்களேங் நானின்னும்

யிருகூட்டம் பேசயிருப்பதால்

வொடய் பெறுகறேன் வணக்கொம்”

‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்

அமைதி… அமைதி…

தணல்

தெரியுமா மாமி இந்தப்

பிராமணன் கதையை? வெட்கக்

கேடுதான் சொன்னால் போங்கள்

இத்தனை வருஷமாக

இருக்கலை அநியாயங்கள்

மனசொரு சமயம் வேகும்.

அமைதியாய் இருந்தேன் தானே

ஒருவழி வருவாரென்று

ராகுவின் பார்வை பட்டால்

பீஷ்மனும் தாசி கேட்பான்.

ஜாதகம் பார்த்தேன் நாலு

மந்திரம் செய்தேன் ஆனால்

யாதொரு பலனும் இல்லை.

தலைக்குமேல் போவதற்குள்

தடுக்கலை யென்றால் மானம்

என்னதும் சேர்ந்து போகும்.

காதிலே விழுந்ததெல்லாம்

புரளியாம். எனக்கு மட்டும்

நிஜமெனத் தெரியும் மாமி.

‘நேற்றுநான் உங்களோடு

நின்றதை வைதார் மாமி

ஊர்க்கதை பேசினேனாம்’.

‘நாலைந்து மாசமாச்சு

வெளியிலே தலையைக்காட்டி’

நரைதிரை வயதிற்பிள்ளை

யாள்வது அவமானம்தான்.

என்னவோ மாமி தெய்வம்

நினைப்பதே நடக்குமென்றும்.’

கணக்குப் போட்டான்

கணக்குப் போட்டான் விடை பிறர்க்குத்

தெரியாதிருக்க அவன் மறைத்தான்

ஒருத்தன் பார்த்தால் அவனுக்குக்

கண்ணிரண்டும் முஷ்டிகளாகும்

பலகைகள் எல்லாம் கீழ்வைத்தார்

இடைவேளைக்கும் உணவுக்கும்

பள்ளிக்கூட மணி அசைய

பலகை அடுக்கப் படுகிறது

ஒன்றின் மேல் ஒன்றாக

சரியும் தப்பும் சரியாக

அவனைப் பார்த்தான் அவன் சரியாய்ச்

செய்தான் என்றே கருதியதால்

இவனைப் பார்த்தான் இவன் சரியாய்ச்

செய்தான் என்றே கருதியதால்

ஆமாம் என்று நினைத்தேன்

உனதென்றாலும் எனதென்

றாலும் என்ன நம்விடைகள்

இன்னொன்றுக்கு பொருந்தணுமே.

இரட்டை நிஜங்கள்

குலத்துக்கு தெய்வம் வேறாய்க்

கொள்கிற தமிழர் தங்கள்

வழி காட்டித் தலைவரென்று

பற்பல பேரைச் சொன்னார்

என்றாலும் மனசுக்குள்ளே

இன்னொருவர் இருப்பாரென்று

ஆராய்ந்தேன் அவர்கள் போற்றும்

தலைவர்கள் யார் யாரென்று

இருந்தவர் இரண்டு பேர்கள்

அவர்களின் அடையாளங்கள்

நடப்பவர் பார்க்க மாட்டார்

பார்ப்பவர் நடக்க மாட்டார்

வெங்காயம்

வியர்த்திட குருதி ஓட்டம்

நேர்பட வெங்காயம் போல்

ஏற்றது உலகில் இல்லை

வெண்கலக் காலத்தோரும்

விரும்பினார். கல்லுக்கொன்றாய்த்

தின்றதால் எகிப்தியர்க்குப்

பிரமிடுகள் கைகூடிற்றாம்

தன்மடி வெங்காயத்தை

மற்றொரு சிற்பிக்காக

வீசிடும் சிற்பி பந்தைப்

பிடிப்பது போல் பிடிக்கும்

அங்கொரு சிற்பி என்று…

தஞ்சையிற் பெரிய கோயில்

கட்டினோர் எகிப்தியர்போல்

தாங்களும் வெங்காயங்கள்

தின்றவராக வேண்டும்.

மத்திய ஆசியாவில்

முதன் முதல் பிறந்து பின்பு

பலபல விண்ணும் மண்ணும்

பார்த்ததாம் இவ்வெங்காயம்.

பலபல விண்ணும் மண்ணும்

பார்த்தபின் எதனால் இன்றும்

குடுமியை வெங்காயங்கள்

கைவிட மாட்டேன் என்னும்.

நேற்று யாரும் வரவில்லை

இரண்டொரு நாட்கள் குளிப்பதற்கில்லை

வைத்தியர் சொற்படி ஒருநாள்

கவனம் கருதி மற்றும் ஒருநாள்

உடல் நலம் கேட்டு யாரும் வருவார்

திரும்பும் போது

தயவு செய்தெனக்காகச்

சந்து விடாமல் கதவை மூடெனக்

கேட்கணும்

பொருந்தி மூடாக் கதவின் சந்தில்

குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத்

தெரிந்திடும் நீலவானை

எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது

சினிமாச்சோழர்

“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்

தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க

குகைப்புலிகள் சினந்தெழந்து வகுத்த யூகம்

குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”

மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி

முடித்தஉடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்

சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச் சோழர்.

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா

மகிழ்ச்சியினால்

மரியாதையை நான்

குறைத்ததற்கு

மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்

சங்கக்கவிதை யாதொன்றும்

படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த

அன்பு தோன்றிற்று

இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்

தூக்கம் போட்ட முதல்மனிதன்

நீதான் என்னும் காரணத்தால்

சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?

மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல

சொற்பொழி வாற்றலானார்:

வழுக்கையைச் சொறிந்தவாறு

‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;

மேசையின் விரிப்பைச் சுண்டி

‘வையத்து நாட்டில்’ என்றார்;

வேட்டியை இறுக்கிக் கொண்டு

‘விடுதலை தவறி’ என்றார்;

பெண்களை நோட்டம் விட்டு

‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;

புறப்பட்டு நான் போகச்சே

‘பாரத தேசம்’ என்றார்;

‘வாழ்விக்க வந்த’ என்னும்

எஞ்சிய பாட்டைத் தூக்கி

ஜன்னலின் வழியாய்ப் போட்டார்

தெருவிலே பொறுக்கிக் கொள்ள

கொள்ளிடத்து முதலைகள்

ஒன்றிரண்டு நான்கைந்து…

பத்துப் பத்தாய்…

ஒரு நூறா? ஆயிரமா?

கணக்கில் வாரா…

கொள்ளிடத்தின் மணல்வெளியில்

நடுச்சாமத்தில்

கரைமரங்கள் தூக்கத்தில்

ஆடும் போதில்

ஒன்றிரண்டு நான்கைந்து

பத்துப் பத்தாய்

ஒரு நூறா? ஆயிரமா?

கணக்கில் வாரா…

சிறிது பெரிதாய் முதலைக் கூட்டம்

சற்றும்

அமைதி கலையாமல் அவை

பேசிக் கொள்ளும்

சில நொடிக்குள் முடிவெடுத்துக்

கலையும் முன்னே

குறுங்காலால் மணலிலவை

எழுதிப் போட்ட

மருமமொழித் தீர்மானம்

என்ன கூறும்?

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு

‘மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்

பார்த்திருக்க மாட்டீர்கள்

மன்னார்சாமி

ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல்

ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும்

ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக்

குறைவில்லை

இது கபாலம்

மார்புக்கூடு…

போணிசெய்த பெருங்கைகள்…

கைகால் மூட்டு

பூரான்போல் முதுகெலும்பு… சிரிக்கும் பற்கள்…

சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும்

புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’

மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க

ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி

அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

மண்ணும் மந்திரியும்

ராமன் கால் பட்ட பின்பு

கல்லெல்லாம் பூக்களாச்சாம்

அதிசயம் என்ன. எங்கள்

அமைச்சர் கால்

படுமுன்னேயே

என்னென்ன மண்ணுக்

காச்சு?

அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்

பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்

கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி

காலால் உதைத்தான். நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி

எட்டி உதைத்தான். அது நகர

தெற்குக் கோடிப் பிணந்தூக்கி

தானும் உதைத்தான். அது விலக

வடக்குக் கோடிப் பிணந்தூக்கி

முந்தி உதைத்தான். இடக்கால்கள்

எட்டா நிலையில் மையத்தில்

பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை

நடுவில் நீட்டப் பெரும்பாடை

நழுவித் தெருவில் விழுந்துவிட

ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்

பாடைதூக்கப் பாடையின் கீழ்

பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்

பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ

பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்

பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்

சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்

எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த

முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்

துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்

கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ

கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்

கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்

பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்

நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு

ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்

வரங்கள் பெற்றான் அதன் முடிவில்

நீர்மேல் நடக்க தீபட்டால்

எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்

கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்

உடம்பில் பூசிச் சோதித்தான்

மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட

முனிவன் போனான் ஆற்றுக்கு

நீருக்குள்ளே கால்வைக்க

முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு

காலைப் போட்டால் நடைபாதை

சிரித்துக் கொண்டு கண்ணெதிரே

ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா

கிரியை எல்லாம் போயிற்று

வேர்த்துப் போனான். அத்துளிகள்

உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்

செத்துப் போக ஒரு நாளில்

தீயிலிட்டார். அது சற்றும்

வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்

தீயாலழியா திருப்பதற்கும்

வரங்கள் பெற்ற மாமுனிவன்

மக்கிப் போக நாளாச்சு

யெதிரெதிர் உலகங்கள்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவர் நாட்டில்

திரிசங்கைப் போகவிட மாட்டேன் என்று

ஒருமுட்டாள் சொன்னதுபே ராபத்தாச்சு

தன்னாளைத் திருப்பியதும் விஸ்வா மித்ரன்

கொதித்தெழுந்தான். பிரம்மாவுக் கெதிர்ப்படைப்புத்

தான் செய்வே னென்று சொல்லி ஆரம்பித்தான்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவரெல்லாம்

ஓடிவந்தார் கடவுளுடன். வேண்டாமென்று

முனிவர்களில் மாமணியைக் கெஞ்சிக் கேட்டார்.

சினம்தணிந்தான் தவஞானி. ஆனால் அந்தக்

கணம்மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும்

இருந்துவர வேண்டுமென்றான். வரமும் பெற்றான்

அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர

மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து

வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு:

மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை

குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை

கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்

சைக்கிள் கமலம்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்

மைதானத்தில் சுற்றிச் சுற்றி

எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பியைக் கொண்டு போய்ப்

பள்ளியில் சேர்ப்பாள்

திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்

கடுகுக்காக ஒரு தரம்

மிளகுக்காக மறு தரம்

கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க

மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்

வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்

இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்

எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்

என்மேல் ஒருமுறை விட்டாள்

மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்

தலையணை

விழுவதால் சேதமில்லை

குலுக்கினால் குற்றமில்லை

மூலைகள் முட்களல்ல

உருவமோர் எளிமையாகும்

வாழ்க்கையில் மனிதன் கண்டு

பிடித்ததில் சிறந்ததாகும்

தலையணை. அதற்குள் ஒன்றும்

பொறி இயற் சிக்கல் இல்லை

பாயில்லை என்றால் வேண்டாம்

தலையணை ஒன்றைப் போடும்

கனவு

மலைகள் என்னும்

குறும்பற்கள்

முளைத்திராத

பூதலத்தின்

கொக்குப் போலக்

காலூன்றி

நிற்கும் மரங்கள்.

அதற்கப்பால்

எழுந்து வீழ்ந்து

தடுமாறும்

நடக்கத் தெரியாக் கடலலைகள்

யார் சென்றாலும்

விரல் நீட்டும்.

ஒட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்

பார்த்தபின் முடிவு கண்டேன்

ஒட்டகம் குரூபி இல்லை

குரூபிதான் என்றால் மோவாய்

மடிப்புகள் மூன்று கொண்ட

அத்தையும் குரூபி தானே?

அத்தையைக் குரூபி என்றோ

ஒருவரும் சொல்வதில்லை

சண்டைகள் வந்தாலன்றி

சண்டைகள் வந்தபோது

மற்றவர் அழகில் குற்றம்

பார்ப்பது உலகநீதி

ஒட்டகம் குரூபி என்றால்

அதனுடன் உலகுக் கேதும்

நிரந்தரச் சண்டை உண்டோ?

தொழுநோயாளிகள்

ஐயா உம் விரல்கள் மூன்று

கிடந்தன. பெற்றுக் கொள்ளும்

அம்மணி உனதும் கூட

கால்களின் செதில்கள் அங்கே

கிடப்பதைக் கண்டேன். உங்கள்

உடம்பினை ஏனிவ்வாறு

உதிர்க்கிறீர் தெருவிலெங்கும்?

கங்கையில் விருப்பைக் கொஞ்சம்

கைவிடச் சொன்ன நூல்கள்

கேணியில் உடம்பைக் கொஞ்சம்

கைவிடச் சொன்னதுண்டா?

வெள்ளிக்கு முதல் நாள் ஊரை

வலம் வரும் தங்கட்கின்னும்

உடைமையில் கவனம் வேண்டும்

அம்மணி தங்கள் மேனி

சிந்தினால்

யாருக்காகும்?

உதைவாங்கி அழும் குழந்தைக்கு

என்ன கேட்டாய்?

உன் வீட்டில்

என்ன செய்தாய்?

ஏதெடுத்து

என்ன பார்த்தாய்?

எதைக் கிழித்து

வாங்கிக் கொண்டாய்

அடி உதைகள்?

கெட்டுப்போன

பிள்ளைக்கு

வெளியில் கிடைக்கும்

அடி உதைகள்

கெட்டுப் போகாப்

பிள்ளைக்கு

வீட்டில் கிடைக்கும்

முன்கூட்டி

அவர்கள் அவர்கள்

பங்குக்கு

உதைகள் வாங்கும்

காலத்தில்

உனக்கு மட்டும்

கிடைத்தாற் போல்

சின்னக் கண்ணா

அலட்டாதே.

பட்டிப் பூ

தையற்காரன் புறக்கணித்த — புது

வெள்ளைத் துணியின் குப்பைகள்போல்

பட்டிப் பூவின் வெண்சாதி — அதைப்

பார்த்தால் மனசு நெக்குவிடும்

காய்ச்சல் நீங்கிக் கண்விழிக்கும் — ஒரு

கன்னிப் பெண்ணின் முதல் சிரிப்பாய்

பட்டிப் பூவின் கருநீலம் — அந்தப்

படுகை எங்கும் மிகவாகும்

எங்கும் வளரும் பட்டிப்பூ — தன்

குடும்பத் தோடும் சூழ்ந்திருக்கும்

செவியின் மீதில் ரோமம் போல் — அது

தனித்தும் வளரும் இப்போது

முலைகள் அசையத் தான் அசையும் — ஒரு

புடவைத் தலைப்பை நினைவூட்டிப்

பட்டிப் பூக்கள் குலை அசையும் — அதன்

பக்கம் எங்கும் புல்பூமி

நாளை மறுநாள் ரயிலேறி — என்

வீட்டை அடைந்து பைவீசி

படுகைப் பக்கம் நான்போவேன் — என்

பட்டிப் பூவைப் பார்த்துவர

விடுமுறை தரும் பூதம்

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்

வேலை என்னும் ஒரு பூதம்

திங்கள் விடிந்தால் காதைத் திருகி

இழுத்துக் கொண்டு போகிறது

ஒருநாள் நீங்கள் போகலை என்றால்

ஆளை அனுப்பிக் கொல்கிறது

மறுநாள் போனால் தீக்கனலாகக்

கண்ணை உருட்டிப் பார்க்கிறது

வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்

வீட்டில் ஒருவர் நலமில்லை

என்னும் பற்பல காரணம் சொன்னால்

ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

வாரம் முழுதும் பூதத்துடனே

பழகிப் போன சிலபேர்கள்

தாமும் குட்டிப் பூதங்களாகிப்

பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

தட்டுப் பொறியின் மந்திரகீதம்

கேட்டுக் கேட்டு வெறியேறி

மனிதர் பேச்சை ஒருபொருட் டாக

மதியாதிந்தப் பெரும்பூதம்

உறைந்து போன இரத்தம் போன்ற

அரக்கை ஒட்டி உறை அனுப்பும்

‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ன்னும்

இந்தப் பேச்சை அது கேட்டால்

நாள்

கொட்டிக் கொண்டு போயேன்’டா

தட்டு கொண்டு வாயேன்’மா

தொட்டுக் கொள்ளப் போடேன்’மா

கட்டை விரலைத் தொட்டுக்கொள்

பள்ளிக்கூடம் போறேன்’மா

பாதை பார்த்துப் போய் வாடா

கையில் கட்டித் தருவாயா

கையைக் கனக்கும் வேணடாம்’டா

மத்தியானம் வருவேன்’மா

வெயிலில் வெந்து சாகாதே

மத்தியானம் வருவேன் நான்

பத்துப்பானை தேய்ப்பதற்கா?

எழுதக் குவிந்த

எழுதக் குவிந்த கைபோல

இருக்கும் குன்றில் ஒருபாதை

மூட்டு தோறும் நீர்க் கசிவு

மணிக்கட்டோரம் விளை சகதி

சகதிப் பக்கம் ஒரு சப்தம்

உளியின் சப்தம் செவியில் விழும்

தாவும் அணிலின் முதுகின் மேல்

இராம பிரானின் கைவுரல்கள்

இடை வானத்தில் துணையாகும்

உளியின் சப்தம் மலை முழைஞ்சில்

உதிக்கும் போது ஓராண்டு

கேட்கும் போது நூறாண்டு

அந்தத் தெரு

சூத்திரர் தெருக்களென்று

சொல்லுவார்

ஏற்றாற்போல

மாட்டுத் தோல் உலரும்

ஆடு

கோழிகள் நாய்கள் வாழும்

முருங்கைகள்

பிள்ளை வாதக்

கிளைகளைத் தாழ்த்திக் கொண்டு

குடிசையின் வாசற்பக்கம்

‘பசுபதி

ஆறாம் பாரம்’

என்கிற சாக்குக் கட்டி

எழுத்துக்கள் தெரியும் குச்சு

இடச்சாரி

பெரியகுச்சு

மல்லிகை முல்லை

சாணி முட்டைகள்

முருங்கைக் காய்கள்

விற்கிற பழக்கமுள்ள

வீடுகள் ஆங்காங்குண்டு

தனிப்பட வர மாட்டாமல்

கடவுளின் துணையில்

அங்கே

வருகிறான் பார்ப்பான்

சாமி

வலம் வர வேதம்பாடி.

கனவின் மனிதன்

ஒருவனைக் கனவில் கண்டேன்

உதடுகள் பற்கள் கண்கள்

தலைமயிர் நகங்கள் கை கால்

அனைத்துமே மனிதன் போல

இருந்திடும் அவனைக் கண்டேன்

கனவிலும் மனிதன் போலத்

தோன்றினால் மனிதன் தானா?

பவழமல்லி

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்

கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்

தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி

தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு

விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல

கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்

தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்

தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?

அந்திமம்

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்

மரம் பட்ட

சாலைக் கென்னை

அனுப்பு முன்

பேரைக் கொஞ்சம்

சோதித்துப் பாருங்கள் ஸார்.

பார்த்தல்

கூடைக்காரி

சிலசமயம்

குடும்பக்காரி

வரும் தெருவில்

டீச்சர் வந்தாள் குடைவிரித்து.

…… ஒற்றைமாட்டு வண்டியிலே

…… வைக்கோல் பாய்க்கு

…… நெளிந்து தரும்

…… மருத்துவச்சி தேடுகிறாள்

…… எட்டிப் பார்த்து ஒரு வீட்டை

விளக்குக் கம்பம்

நடைக் கொம்பாய்

நிற்கும் தெருவில்

பிறபெண்கள்

வந்தார் போனார் அவள் வரலே.

சரிவு

சூளைச் செங்கல் குவியலிலே

தனிக்கல் ஒன்று சரிகிறது.

நஷ்டக் கணக்கு

வாகனம் தூக்கிக் கொண்டு

தீவட்டி பிடித்துக்கொண்டு

வாத்தியம் இசைத்துக்கொண்டு

பலூன்கள் விற்றுக்கொண்டு

தெருக்காரர் ஊர்வலத்தில்

இருப்பதால் நஷ்டப்பட்டார்

எங்களூர் அரங்கநாதர்

காலைநடை

வில்லைத்தகர எழுத்துகளால்

வெட்டுப்பட்ட விளம்பரம் போல்

நிலத்தின் மீது வயல்வரப்பு

விடிந்த நாளின் முதல் சிகரெட்

நெருப்பைத் தவிர மற்றெல்லாம்

பச்சை பொலியும் செழும்பூமி

தோப்புப் பனைகள் தொலைவாக

தாழைப் புதர்கள் உரசாமல்

நடக்கும் அவரைத் தெரிகிறதா?

கையில் கொஞ்சம் நிலமுண்டு

ஸ்டேஷன் மாஸ்டர் கொடிபோல

உமக்கும் இருந்தால் தஞ்சையிலே

நீரும் நடப்பீர் அதுபோல

தவளைகள்

தவளையின் கூச்சல் கேட்டுத்

தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்

ஆயிரம் வருஷம் போச்சு

போயிற்றா தவளைக் கூச்சல்

மாதத்தில் ஒன்றைக்

கண்ணன்

மட்டுமா பிடிக்கும் என்றான்

தவளைக்கும் பிடித்த மாதம்

ஒன்றுண்டு பன்னிரண்டில்

குளத்திலே இலைத் தண்ணீரில்

குதூகலத் தவளைக் கூட்டம்

குதித்திடும் கூச்சல் போடும்

படித்துறை ஏறித்தாவும்

நீர்மட்டத் தளவு தோன்றித்

தாமதித்து நீரில் மீளும்

தவளையின் வயிற்றைப் பார்த்தால்

சந்தனக் கட்டி தோற்கும்

கண் மறைவாக எங்கோ

கதிரவன் தேர்க்கால் சிக்கி

உருள்கிற சப்தம் கேட்டுத்

தவளைகள் போலி செய்யும்

தவளைகள் இரவில் தங்கள்

சுகங்களை உரத்துப் பேச

அனைத்தையும் ஒட்டுக் கேட்டேன்

அப்புறம் உனக்கும் சொல்றேன்

கம்பனைக் கார்காலத்தைச்

சொல்லென்றேன் அவனும் சொன்னான்

ஏனெனில் தவளைப் பேச்சு

அடிபடும் கொஞ்சம் அங்கே

கொல்லையில் க்ராக் க்ராக் க்ராக் க்ராக்

“சாக்கடை மூடியாச்சா?”

படுக்கையில் அப்பா கேட்டார்

தூங்கிடும் சமயம்

சோம்பல்

எழுந்து போய் ஒன்று செய்ய

சிறுவர்கள் சொன்னோம். “ஆச்சு”

ஆதரித்து அம்மா

தானும்

ஆயிற்று என்றபோது

முற்றத்தின் நடுவில் க்ராக் க்ராக்

தவளைகள்

நன்றாய்ப் பார்த்தால்

தாவர ஜீவ்யக் காய்கள்

தவளைகள் பிடிக்கும்

இந்தத்

தவளைகள் ருசி அலாதி

சாப்பாட்டு சமயத்தில் மனைவியோடு

சச்சரவு பேய்க்கூட்டம் பிள்ளைக் கூட்டம்

கடன்தொல்லை ஒரு பிடுங்கி உத்தியோகம்

எல்லாமும் வெறுப்பேற்ற பிய்த்துக்கொண்டு

படிக்கட்டில் வந்தமர்ந்தான் சுப்பராமன்

“வீட்டுவரி கட்டலியா? இல்லையென்றால்

படிக்கட்டை அவன் பெயர்த்துப் போட்டுப் போவான்

இருவருக்கும் அவமானம்”

யாரோ சொல்லத்

தான் திரும்பிப் பார்க்கச்சே தவளைக்குட்டி

கொல்லையிலே என்ன சப்தம் என்றாள் அம்மா

போய்ப்பார்த்து வரச் சொன்னாள். இரவு நேரம்

சரியென்று நான் போனேன் லாந்தர் ஏந்தி

கொல்லையிலே ஒன்றுமில்லை சூனியம்தான்

திரும்பிவிடக் காலெடுத்து வைத்தபோது

தோள்மீது ஒரு குதிப்பு தள்ளப்பட்டேன்

கிசுகிசுத்துப் பலபேர்கள் சூழ்ந்து கொண்டார்

என்றெண்ணி நான் பார்த்தேன் தவளைக்கூட்டம்

ஒவ்வொன்றும் ஆளுயரம் முன்கால் தூக்கிப்

பின்காலில் நின்றிருக்கும் வயிறு மூட்டை

ஒவ்வொன்றும் விரகத்தால் என்னைத் தீண்டி

முத்தமிடக் கூச்சலிட்டு ஓடப்பார்த்தேன்

ஒருதவளை பாடிற்று. ஒன்றென் தோளைத்

தட்டிற்று. மற்றொன்று ஆடை நீக்கி

அதிசயமாய்த் தேடிற்று. கூச்சலிட்டேன்

அம்மாவின் காதுகளில் விழவே இல்லை.

உள்ளோட்டம்

பூமியின் பிச்சைக்கார

முகத்திலே ஒரு வெள்ளோட்டம்

வயல்களில் தண்ணீரோட்டம்

விளையாட்டுப் பிள்ளை ஓட்டம்

புளியன் பூ வைத்தாயிற்று

காவிப்பல் தெரிந்தாற் போல

கிளைகளில் அக்கா பட்சி

கூவின வெட்கத்தோடு

தானொரு முதலை போலப்

புதுப்புனல் ஆற்றில் ஓடும்

ஊர்க்கூட்டம் கரையில் ஓட

போகிறார் தலைக்குடத்தில்

ஆற்றுநீர் துள்ளத் துள்ள

நீர்மொண்ட குருக்கள் வர்ணக்

குடையின்கீழ் ஈரத்தோடு

கச்சேரி ஆசை உள்ள

கோயிலின் மேளக்காரன்

உற்சாகம் ஒன்றில்லாமல்

தொடர்கிறான் ஊதிக்கொண்டு.

எட்டுக் கவிதைகள்

1

சாத்துயர் கேட்டுப் போகும்

சுற்றத்தார் சாயல் காட்டிக்

கழன்றது ரத்த வெள்ளம்

குத்துண்ட விலாப்புறத்தில்

அவர் பெயர் ஒன்றினோடு

என்பெயர் ஒன்றிப் போச்சாம்

படுக்கையில் தூங்கும் என்னைக்

கந்தர்வர்கொன்று போனார்

பெயரையே சொல்லிப் பார்த்து

திகைக்கிறேன் எனக்கென் பேரே

எப்படித் துரோக மாச்சு.

2

வெளியில் வந்தான் நடுநிசியில்

ஒன்றுக் கிருந்தான்

மரத்தடியில்

நெற்றுத் தேங்காய்

அவன் தலையில்

வீழ்ச்சியுற்று

உயிர் துறந்தான்

ரத்தக் களங்கம்

இல்லாமல்

விழுந்த நோவும்

தெரியாமல்

தேங்காய் கிடக்கு

போய்ப்பாரும்

3

மூட்டைகள்

அனுப்பக் காத்த

மூட்டைகள்

அவற்றைப் போலப்

பயணிகள்

தூங்கினார்கள்

ஆடைக்குள்

சுருட்டிக் கொண்டு

காரணம்

இல்லாமல் நெஞ்சம்

உணர்த்திய பயத்தைப் போலத்

தொலைவிலே

இரவினூடே

ரயில் முகம்

வைர ஊசி

கிணறுகள்

கால்முளைத்த

கிணறுகள்

இங்குமங்கும்

மூத்திரம்

நின்று பெய்யும்

வியாபாரிப்

பெண்ணைப் போல

ஏணியை

நிமிர்த்துப் போட்டு

ஏறுவார்

அன்றைக் குண்டு

ஏணியைப்

படுக்கப் போட்டு

ஏறுவார்

இன்றைக் குண்டு

4

விழிக்கிறான்

முழங்காலொன்று

காணலை

பொசுக்கப்பட்டு

சதைகளும் எலும்புமாகக்

கிடப்பதைத்

தெரிந்து கொண்டான்

வைக்கிறான்

கூறுகட்டி

அறுவையில்

எடுத்த ஈரல்ப்

பகலவன்

சாய்வதற்குள்

பண்டமும்

விற்றுப் போச்சு

வயிற்றடி

ரோமக் காட்டில்

வருவாயைப்

பொத்தி வைத்துப்

படுக்கிறான்

கனவில் யாரோ

பாக்கியும்

எரிக்கிறார்கள்

5

பெயர் சொல்லிக் கூப்பிட்டாள்

புரண்டு கூடப்

படுக்கவில்லை அஃதொன்றும்

கொள்ளிக் கட்டை

கொண்டு வந்து ஒவ்வொன்றின்

காலைச் சுட்டாள்

ஒவ்வொன்றாய் எழுந்திருந்து

என்ன என்ன

அப்பாவை எழுப்பென்றாள்

பந்தம் தந்தாள்

பந்தத்தால் அப்பாவின்

தாடி மீசை

எல்லாமும் கொளுத்திவிடப்

புரண்டெழுந்தான்

ஆயிற்றா உட்கார

லாமா என்றான்

அப்பாவும் பிள்ளைகளும்

உட்கார்ந்தார்கள்

உடுப்புகளைப் புறம்போக்கிப்

படுத்துக் கொண்டாள்

வள்ளிக் கிழங்கின்

பதமாக

வெந்து போன

அவள் உடம்பைப்

பிட்டுத் தின்னத்

தொடங்கிற்று

ஒவ்வொன்றாக

அவையெல்லாம்

எல்லாக் கையும்

முலைகளுக்குப்

போட்டி போட்டுச்

சண்டையிட

அப்பன் கொஞ்சம்

கீழ்புறத்தில்

கிள்ளித் தின்றான்

அவ்வப்போ

6

முகக்கண்கள் அழுதால் கண்ணீர்

விடுகிறான் என்னும் நீங்கள்

மயிர்க்கண்கள் அழுதால் மட்டும்

வியர்க்கிறான் என்று சொல்வீர்

வேலை செய் என்னும் உங்கள்

வார்த்தைகள் குசுப்போல் நாறக்

கழிவறை உலகம் செய்தீர்

குருடுகள் காலூனங்கள்

பித்துக்கள் பிறக்கும் போதே

வேலையைத் தவிர்க்கும் மார்க்கம்

தெரிந்ததால் பிழைத்துக் கொண்டார்

நானொரு குருடனாக

நானொரு முடவனாக

நானொரு பித்தனாகப்

பிறக்காமல் போய்விட்டேனே

7

உங்கள் எதிரே நான்வரும் பொழுது

என்னைப் பிடித்துக் கொல்லப் பார்க்கிறீர்

‘எப்படி உயிர்க்கலாம் எங்கள் காற்றை நீ’

காற்றை உண்டு வாழ்கிற வழக்கம்

உள்ளவன் இல்லை நான் எனக்கூறி

மூக்கில்லாத முகத்துக்குங்கள்

பார்வையைக்கொணரப் பீயாய் உணர்கிறீர்

நீங்கள் என்னை விட்டுப் போனதும்

ஒளித்து வைத்த மூக்கை எடுத்துப்

பொருத்திக்கொண்டு

உயிர்க்கத் தொடங்கினேன்

தொலைவில் நீங்கள் குலைகிறீர்

காற்றில்லாத பலூனைப் போல

8

தூக்கம் வரைக்கும் யாவரும் சித்தர்

தூக்கத்துக்கப்புறம் யாருடா சித்தர்?

தூக்கத்துக்கப்புறம் என்னான்னு கேளு

தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு.

உள் உலகங்கள்

வயல்களைக் குளங்களென்று

நினைத்திடும் மீனும் நண்டும்

குசலங்கள் கேட்டுக் கொள்ளும்

கொய்கிற அரிவாளுக்குக்

களைவேறு கதிர்வேறில்லை

என்கிற அறிவை இன்னும்

வயல்களோ அடையவில்லை

மீனுடன் நண்டும் சேறும்

நாற்றிசைக் கரையும் பார்த்துக்

குளத்திலே இருப்பதாகத்

தண்ணீரும் சலனம் கொள்ளும்

பறைக்குடிப் பெண்கள் போல

வயல்களில் களைத்துத் தோன்றும்

பெருவிரல் அனைய பூக்கள்

மலர்த்தும் சஸ்பேனியாக்கள்

படுத்தவை கனவில் மூழ்கி

நிற்பவையாகி எங்கும்

எருமைகள். அவற்றின் மீது

பறவைகள் சவாரி செய்யும்

சரி

மனை திரும்பும் எருமைமேலே

எவ்விடம் திரும்பும் காக்கை?

தேரோட்டம்

காடெ கோழி வெச்சுக்

கணக்காக் கள்ளும் வெச்சு

சூடம் கொளுத்தி வெச்சு

சூரன் சாமி கிட்ட

வரங்கேட்ட வாரீங்களா

ஆரோ வடம் புடிச்சி

அய்யன் தேரு நின்னுடுச்சி

கற்கண்டு வாழெ வெச்சு

விருட்சீப் பூவ வெச்சுப்

பொங்கல் மணக்க வெச்சு

வடக்கன் சாமி கிட்ட

வரங்கேட்ட வாரீங்களா

ஆரோ வடம் புடிச்சி

அய்யன் தேரு நின்னுடுச்சி

இளநீ சீவி வெச்சு

இரும்பாக் கரும்ப வெச்சுக்

குளிராப் பால வெச்சுக்

குமரன் சாமி கிட்ட

வரங்கேட்டு வாரீங்களா

தெரு ஓடும் தூரமின்னும்

வடமோடிப் போகலியே

வடம்போன தூரமின்னும்

தேரோடிப் போகலியே

காலோயும் அந்தியிலே

கண் தோற்றம் மாறையிலே

ஆரோ வடம் புடிச்சி

அய்யன் தேரு நின்னுடுச்சி

தெரு ஓடும் தூரமின்னும்

வடமோடிப் போகலியே

வடம்போன தூரமின்னும்

தேரோடிப் போகலியே

காலோயும் அந்தியிலே

கண் தோற்றம் மாறையிலே

ஆரோ வடம் புடிச்சி

அய்யன் தேரு நின்னுடுச்சி

மருதம்

ஊருக்கெல்லாம் கோடியிலே

முந்திரிக் கொல்லே

உக்காந்தால் ஆள்மறையும்

முந்திரிக் கொல்லே

செங்கமலம் குளிச்சுப்புட்டு

அங்கிருந்தாளாம்

ஈரச்சேலை கொம்பில் கட்டி

காத்திருந்தாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்

அங்கே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்

எந்திரிச்சாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்

கிட்டே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்

சிரிச்சிக்கிட்டாளாம்

உக்காந்தால் ஆள்மறையும்

முந்திரிக் கொல்லே

ஊருக்கெல்லாம் கோடியிலே

முந்திரிக் கொல்லே.

தமிழ்

எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால்

பிறர்மேல் அதைவிட மாட்டேன்

சமூகம்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா

சரி

சோடாப் புட்டிகள் உடைக்கலாம்

வாடா

நம்பிக்கை

பசித்த வயிற்றுடன்

சுற்றிலும் பார்த்தான்

பார்வையில் பட்டன பற்பல

தாவரம்

ஒன்று ஆல். ஒன்று அரசு

ஒன்று வேம்பு…

அவனுக்கு வேண்டிய

ஒன்றோ

நாற்றங்காலாய் இன்னமும்

இருந்தது.

ஞாதுரு

ஓவியம் வரைந்தேன் ஒன்று

அதிலொரு மனிதன் வந்தான்

அவன் முகம் மேசை மீது படிந்திட

இமைகளின் ரோமம் நீண்டு நெற்றிமேல் விரைக்கக்

கண்ணை

மூடினேன் வெறுப்புக் கொண்டு

அவன் என்னைக் கேட்டான். கண்களை

எதற்கிவ்வாறு

மூடினாய்? உன்னால் பார்க்க

முடிந்ததா? என்றேன் இப்போ நான் உன்னைப்

பார்த்துக் கொண்டு

அல்லவா இருந்தேன் என்றான்

மடிப்புகள் பலவாறாகப் பண்ணினேன் அவனைக்

கண்கள்

வெளிப்படக் கூர்மையாக்கிச்

சென்றுபார் மேலே என்றேன்

புலப்படாக் காக்கை தூக்கிச் செல்கின்ற கரண்டியைப்

போல்

ஏகினான் அவனும் ஆனால்

அழகென்று வானைக் கூறி.

பதில்

தெருக்களில் திரிந்தேன்.

வானக்

காட்டிலே மாலைப்போதின்

குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன்.

நான்நின்றால்

தானும் நின்று

நான் சென்றால்

தானும் மேலே

தொடர்கிற நிலவைப் பார்த்தேன்.

வானத்தில் வர்ணக்கோலம்

விசிறிடத்

திகைத்த மீனைப்

போய்க் கொத்தும் பறவை போல

ஒரு கேள்வி மனசுக்குள்ளே.

என்னடா செய்வாய் தம்பி

பெரியவன் ஆனபின்பு

என்றொரு கேள்வி கேட்டார்

இளமையில் சிலபே ரென்னை,

அன்று நான் அதற்குச் சொன்ன

பதிலொன்றும் நினைவில் இல்லை

இன்று நான் என்ன சொல்வேன்?

அதைக் கேட்க அவர்கள் இல்லை.

யாரோ ஒருத்தர் தலையிலே

நாங்கள் நாலு பேர் எலிகளைத் தின்றோம்

ஒரு காலத்தில்

நாங்களே எலிகளாய்ப் போகலாமென்று

எலிகளாய்ப் போனபின் நெல்களைத் தின்கிறோம்

ஒரு காலத்தில்

நாங்களே நெல்களாய்ப் போகலாமென்று.

நெல்களாய் நாங்கள் ஆனதன் பின்பு

நாங்கள் நாலுபேர் மண்ணைத் தின்கிறோம்

ஒரு காலத்தில்

நாங்களே மண்ணாய்ப் போகலாமென்று

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்

என்றான் ஒருவன்

இல்லை என்றேன் அவன் சொன்னான்

என்னை இன்று உண்பித்தால்

உனக்குச் சில நாள் உழைப்பேன்

ஒன்றும் வேண்டாம் போ என்றேன்

இன்னும் சொன்னான். ‘என்னைப் பார்

கண்டதுண்டா நீ முன்பு

என்னைப் போல் சப்பட்டை

யான மனிதன்’

நானும் பார்த்தேன் அதுசரி தான்

‘எனக்குக் கொஞ்சம் சோற்றைப்போடு

பலவிதமாகப் பயன் படுவேன்

கதவில்லாத உன் குளியலறைக்கு

மறைப்பு போல நான் இருப்பேன்

வேண்டுமென்றால் என்னைக் கிடத்திப்

பொருள்கள் உலர்த்தலாம் நடுப்பகலில்.

அதுவும் இல்லை பெருங்காற்று

வீசும் மாலைக் காலங்களில்

உடம்பின் நடுவில் பொத்தலிட்டுக்

காற்றாடியாகச் சுற்றலாம் நீ’

என்றான் அந்தச் சப்பட்டை.

உள்ளே சென்றேன். வரும்வரைக்கும்

இருக்கச் சொன்னேன். நொடிப் பொழுதில்

சோற்றைக் கொணர்ந்தேன் ஒரு கையில்

மாலைக் காற்றின் நினைப்போடு.

எங்கள் வீட்டு பீரோ

எங்கள் வீட்டில் ஒரு பீரோ

ஒரு காலத்தில் வாங்கியது.

வீட்டுக் குள்ளே வந்தவழி

எவ்வாறென்றும் தெரியாது.

பட்டுத்துணிகள் புத்தகங்கள்

உள்ளே வைத்துப் பூட்டியது.

உயரம் நல்ல ஆளுயரம்

கனத்தைப் பார்த்தால் ஆனைக்கனம்.

வீட்டுக்குள்ளே இரண்டிடங்கள்

கூடம் மற்றும் தாழ்வாரம்

இரண்டில் ஒன்றை மாற்றிடமாய்

வைத்துக் கொள்ளும் பழம்பீரோ,

குப்பை அகற்றும் பொருட்டாக

ஆளை அழைத்துப் பேர்த்தெடுத்து

இன்னோரிடமாய் முற்றத்தில்

கொண்டு வைத்தால் அங்கிருந்து

வானைக் கொஞ்சம் பார்க்கிறது

காற்றில் கொஞ்சம் உணர்கிறது

எடுக்கப் போனால் கால்விரல்கள்

ரத்தம் கக்கக் கடிக்கிறது.

வந்தனம் என்றான் ஒருவன்

வந்தனம் என்றான் ஒருவன்

இளங்காலைக் கதிரைக் கண்டு

நன்றென்றான் ஒருவன் இரவில்

முகிழ்கிற நிலவைக் கண்டு

அவன் நின்றான் கால்கள் ஊன்றி

ஒரு போதில் வருதல் மற்றப்

போதிலே மறைதல் என்னும்

இயல் பில்லா முகிலைப் பார்த்து.

மண்டையைத் திறந்தால்

மண்டையைத் திறந்தால்

மூளைக் களிமண்ணாய்க்

காணும் என்று யாரோ சொன்னார்.

கண்ணால் பார்த்தால் தவிர

நான் எதையும் நம்புவதில்லை.

என் தலையைத் திறந்து

பார்த்தேன்

திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின்

சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்.

மீண்டும் அவர்கள்

மழைபொழியக் கடமைப் படாதவை எனினும்

அழகாய் இருந்தன காலை மேகங்கள்.

பறக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்

எழும்பினேன் வானில்

சிறகை விரித்து

புனித கோபுரக் கலசங்கள் சில

பறக்கும் எனது கால்களுக்கிடையில் பூமியில்.

சலனமற்ற மரங்களின்

முடிப்பந்தின் ஊடே ஒளிந்திருந்து

அவர்கள் சுட்டார்கள்

எங்கும் அமராத அந்த பறவை அதோ என்று

புகைக் கோலத்தை வானில் வரைந்து

நான் விழும்போது

அவர்கள் சென்றார்கள்

அன்றைய நாளின் பூரணம் கண்டு.

எங்கும் அமராத பறவை ஒன்றை உங்களப்பா

சுட்டு வீழ்த்தினார் இன்றைக் கென்று

அம்மாக்கள் குழந்தைகட்குக் கதை சொன்னார்கள்.

மண்ணில் கலந்து நீருடன் பழகி

நெடிய கடலை மறுநாள் அடைந்தேன்.

அலைகளடங்கிய நடுக்கடல் முழுவதும் அவர்கள்

என்னைத் தேடி யுகங்கள் போக்கினார்.

கடலைக் கொதிக்க வைக்காத சூரியன்

உச்சிக் கெழுந்ததைக் காணும் பொருட்டு அன்று

கரையைத் தீண்டினேன்.

ஆழ்கடலில் நீந்தி வந்தேன் அவர்கள் என்னை

கரையேறத் தொடங்குகையில் குழுவாய்க் கூடி

சுட்டார்கள் ஓயாமல் எனது

செந்நீரைக் கரைமணலில் அலை அலம்ப.

துப்பாக்கிகளை மீண்டும் தோளில் பூட்டி.

எந்தத் திசையை நோக்கிற்றாயினும்

துப்பாக்கிக் கழகு துப்பாக்கியே என்று

திரும்பிப் பார்த்து அவர்களில் ஒருவன் சொன்னான்.

வானில் சிரித்த நண்பகல் நாதனை

நானும் கண்டேன் நெருஞ்சிப் பூவாய்.

துப்பாக்கிக் குண்டால் சிதறிய உடம்பை

சமித்துப் போல சேமித்துக் கொண்டு மீண்டும்

வானில் எழுந்தேன்.

அன்றைக் கிரவு அவர்களின் காதலிகள்

கூடுதலாகக் கொஞ்சிக் களிக்கலாம் நானும்

எங்கும் அமராமல் எங்கும் பறப்பேன்

பள்ளமென்றாலும் பறப்பேன்

உயரமென்றாலும் பறப்பேன்

இறப்பென்றாலும் இறப்புக் கிடையில்

பறக்கை இனிது.

பறந்தேன் உயர உயர

துப்பாக்கிக் கோல்களை சுவரில் சாய்த்து

காதலிமாரைக் கையால் அணைத்துப்

பறவை கொன்ற பெருங்கதை பேசிக் களிக்கும்

அவர்களை வாழ்த்தி.

எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது

எல்லாமும் முதலில் பாழாய்

இருந்தது கடவுள் சொன்னார்

தோன்றுக தெருக்கள் என்று

எழுந்தன தெருக்கள் பாழில்

வைத்தன நடனக் காலை

ஆடின தழுவிக் கொண்டு

இசைத்தன மூங்கில்க் கீதம்

ஊசிகள் சூர்யனாகித்

திரும்பின என்றாற் போல

எங்கணும் தெருக்கள் பாடிப்

பறந்தன. தெருக்கள் தாத்தாப்

பூச்சியாய்ப் பாழில் எங்கும்

திரிந்தன இடங்கள் தேடி

எல்லாமும் முதலில் பாழாய்

இருந்தது கடவுள் சொன்னார்

தோன்றுக தெருக்கள் என்று

கோடுகள் முதுகில் ரெண்டு

சுமந்திடும் அணிலைப் போல

போகிறேன் முதுகில் ரெண்டு

தெரு ஏறிக் குந்திக் கொள்ள

தற்செயலாய் என் நிழலை

தற்செயலாய் என் நிழலைத் தெருவில் பார்த்தேன்

அதில் எனது அண்ணன் தோள் இருக்கப் பார்த்தேன்.

வீட்டுக்குத் திரும்பிவந்து முகத்தைப் பார்த்தேன்

அண்ணன் முகம் பிம்பத்தில் கலங்கப் பார்த்தேன்

இது என்ன இவ்வாறாய்ப் போயிற் றென்று

தெருவுக்குத் திரும்பிவர ஒருத்தன் என்னைப்

பேர் சொல்லிக் கூப்பிட்டான். நானும் நின்றேன்

அவன்தானா நீ என்றான் இல்லை என்றேன்.

அவனைப் போல் இருந்தாய் நீ அழைத்தேன் என்றான்

சில சொற்கள் நான்பேசத் தொண்டைக்குள்ளே

அவன் இசைந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டேன்

தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை

ஆனதற்குப் பக்கத்தில் ஆமை தீய்ந்து

வாசமெழ சுவாசித்தேன் அண்ணா என்று.

பூ

என் கால் சுவடுகள் மண்ணில் படாதவை

தண்ணீரில் நான் பிறந்ததால்.

எதை எடுத்துக் கூறுவது

எதை எடுத்துக் கூறுவது நீஙகள்

இடமொன்றைத்

தெரிவிக்க வேண்டுமென்றால்

ஆலமரம் ஒன்றுண்டு

அதற்கு நேரே

கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப்

போகுமொன்றில் தொடர்ந்து செல்லக்

கிட்டும் என்போம்

கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு

மேற்காகப் பிரிகின்ற தெருவில்

என்போம்

தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை

ஆனதற்குப் பக்கத்தில்

உள்ள தென்போம்.

இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம்

இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும்

எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்

எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது

நாலு தலைக்காரன்

நாலு தலைக்காரன்

அற்புத நாக்குக்காரன்

நாலு தலைக்குள்ளும்

நாக்குகள் நான்கிருக்கும்

நாக்குகள் ஒன்றுக்குள்ளே

நல்லதாய்ப் பூவிருக்கும்

பூவுக்கு வாய்திறந்தால்

மெல்லிதாய்க் கானம் வரும்

நாக்குகள் ஒன்றுக்குள்ளே

வேறொரு பூவிருக்கும்

பூவுக்கு வாய்திறந்தால்

ஒரு மின்னல் பெண்மைகொள்ளும்

நாக்குகள் ஒன்றுக்குள்ளே

இன்னொரு பூவிருக்கும்

பூவுக்கு வாய்திறந்தால்

எங்கெங்கும் நானிருப்பேன்

நாலு தலைக்காரன்

அற்புத நாக்குக்காரன்

நாலு தலைக்காரன்

பூக்கிற நாக்குக்காரன்.

காலி

ஒன்றும் அவனுக்குப் பெரிதல்ல

எதுவும் புனிதமும் அல்ல.

காலி கயவாளி மைதுனத்தில்

முடிக்கமுடியாமல் சிக்கிக் கொண்டவன்.

தந்தையைப் போக்கடித்தான்

தாயைக் கொலைசெய்து

கடல்நீரில் கைகழுவிக்

கப்பலிலே சென்று வந்தான்

போக்கடித்த தந்தைக்குத்

திவசம் தந்து

கொலைசெய்த தாயைக்

கள்குடித்து வசைபொழிந்தான்.

அவனுக்குத் தெரியாதது

ஒன்றும் கிடையாது.

நாற்றத்தை முள்ளை

நெருப்பைப் பிணைத்து

குதத்தி லிருந்து

தொண்டைக் குழிவரைக்கும்

வழிய நிரப்பிக்

காலி பவனி வந்தால்

கோயில் கடவுள்கள்

குலை நடுக்கம் கொண்டார்கள்.

தங்கள் கனவுகளில்

விடாமல் புகமுயலும்

அந்தக் குழியை அவன்

மாந்தர்க்குக் காட்டினான்

பார்த்திருந்த மனிதர்களைக்

கூசாமல் பின் குத்தினான்.

தெருவிளக்கில் கல்லெறிந்து

முன்னதாக வரும் இரவில்

அச்சத்தைக் கற்பழித்தான்.

மூடர்களின் கைகொண்டு

மலம் கழுவிப் புண்சொறிந்து

க்ரிடர்களின் கைகொண்டு

தாம்பூலம் தரத்தின்று

பிற்பகலின் மதிமயக்கின்

வானை அளந்து

இலகு தமிழில்

இனிக்கக் கவிபாடி

நாடெல்லாம் வீசினான்.

ஒருவரைப் பார்ப்பான்

அடுத்தவர்க்குப் பேச்சுவைப்பான்

யாருமவன் பேர்சொல்லிக்

கூப்பிட்டுக் கேட்டதில்லை

அவன் பேரைச் சொல்லாமல்

எல்லோரும் நன்கறிந்தார்

இன்றைக்கு மரக்கொம்பில்

தூக்கில் அவன் தொங்கிவிட்டான்.

தாளைக் கசக்கி

அதன்பிறகு தான் எழுதும்

அவன் வழக்கப் படி ஒரு நாள்

காலி அதில் பிழையின்றி

கைபடவே எழுதுகிறான்

‘ஊர்க்காரர் கோழைத்தனம்

என்னை அழுத்திற்று

இவர் நடுவில் என்னால்

உயிர் வாழ முடியாது’

ராஜா மந்திரி

தானைத் தளபதி

எல்லாமும் தானே

காலி கயவாளி

ரௌடி கில்லாடி

மாகதையின் சுருக்கமிது.

தொடர்ந்து வரும் காண்டத்தில்

அதன் விரிவைக் கூறுகிறோம்.

இரட்டை நிழல்

பறவைகள் சிலவும் மீன்கள் சிலவும்

புலம்பு புலம்பென்று புலம்பின.

நண்டுகள் வளைகளை மேலும் மேடாக்கின.

வானத்தின் கருமையில் வஞ்சனை உண்டெனறு

அறிவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்களை

ஐந்து திணைக் காரர்களும் கல்லால் அடித்துக்

குன்றங்களுக்கு விரட்டி விட்டுச் சிறிய

பூசலைப் போன்ற மழையின் மின்னலைப்

பாராட்டி மகிழ்ந்திருந்தார்கள். ஆனால்

மழையோ போராய்ப் பெருகியது.

ஏரிகள் குளங்கள் ஆறுகள் குட்டைகள்

கேணிகள் என்பன மாலைக்குள் மாறி

எங்கும் தண்ணீர் ஓடாமல் விம்மியது.

கட்டழிந்த முந்நீர் ஊருக்குள் கால்வைக்க

அங்காடிகள் கோயில்கள் வாழ்மனைகள் கோட்டங்கள்

களவுப் புணர்ச்சியின் எண்ணற்ற குறியிடங்கள்

மன்றங்கள் பூங்காக்கள் எல்லாம் அழிந்தன.

திரும்பத் தனதிடம் போக விரும்பாத

கடல் நீரில் சவங்கள் கோல்கள் போல மிதந்தனய

உடுத்திய ஆடையை நீருக் கெப்படி

உருவத் தெரிந்ததோ? அம்மணப் பெண்சவங்கள்.

விரலால் மலை தூக்கிக் காப்பாற்றக்

கண்ணன் வராமல் உடல் விறைத்த ஆவினங்கள்.

ஊழிக்குப் பின் வந்த முதல் வெயிலில்

ஆடை நனைய ஏட்டுச் சுவடிகளின்

கட்டொன்றை மார்பில் அணைத்து

வெளிப்பட்டார் காப்பியர்-தொல்காப்பியர்.

தண்ணீரைத் தள்ளிக் கொண்டு.

வெள்ளம் தொடாத பகுதிக்கு வரும் அவரை

ஓடிப்போய் நானழைத்தேன்.

அழியாத எங்கள் சிற்றூர்

அருகில் உள்ளதென்றேன்.

சுவடிக் கட்டை என்னிடம் தந்தார்.

ஆடையை அவிழ்த்தார். பிழிந்தார். கட்டினார்.

என்னை முன்னே நடக்கச் சொல்லிப்

பின்னே தொடர்ந்து வந்தார்.

கூச்சலிட்டு ஊரைக் கூட்டினேன்.

சேரி திரண்டு காப்பியரைச் சூழ்ந்தது

ஆவினம் பாலிக்கும் எங்கள் குடிக்குப்

பாவினம் எதுவும் தெரியாது.

காப்பியர் தன்னைச் சில சொல்லால் அறிவித்தார்

என்றாலும்

நெற்றிப் பொட்டில் ஒரு துளியாய்ப்

பட்டு தெறித்தது படிப் படியாய் எப்படிப்

படியற்று ஊழிப் பெருமழையாய்ப்

பெருகியதென்று காப்பியர் சொன்னார்.

அவரை எனக்குப் பிடித்தது. அவருக்கும்.

மத்துக் கயிற்றின் துண்டம் போல் விரல்;

வளமான தீங்குரல் மிகையற்ற முறுவல்

சுவடிகள் போனதற்குக் கண்ணீர் சொரிந்தார்.

எங்கள் ஊரில் பனைமரங்கள் ஏராளம்.

ஓலைகள் ஆயிரம் பறித்துப் போடுவேன்

கவலை விடுங்கள் என்றேன் நான்.

காப்பியர்க்குக் குளிரும் மெய்வருத்தமும் போகக்

கள்ளைக் குடிக்கச் சொல்லி வேண்டினார் பலர்.

கள்ளை மறுத்தார். காய்ச்சிய பால்

உண்டென்று சொல்லி முன் வைத்தேன்

கொஞ்சம் பருகினார். மீதி வைத்தார்.

‘தெரிந்தார் அனைவரும் இறந்தவராகத்

தனியாளாய் நீந்தினேன். நானும்

இறப்பது திண்ணம். ஆனால் அதற்கு முன்

வாழ்வான் ஒருவனைக் கண்ணாரக் கண்டு

விடவேண்டும் என்று விரும்பினேன்

இந்த சிறுவனைக் கண்டேன்” என்றார்

காப்பியர் என்னைக் குறிப்பிட்டுக் காட்டி.

என்ன நேர்ந்தது அவருக்குத் திடீரென்று?

என் மேல் பரவிய அவரது பார்வை

அங்ஙனே இருக்க உயிர் பிரிந்தது.

காப்பியர் பற்றியே நினைத்துக் கொள்வேன்.

அவரது பேச்சு அவரது பார்வை

ஆடை பிழிந்து என்னைப் பின் தொடர்ந்து

நான் வழங்கிய பாலைப் பருகி

மகிழ்ந்த முன்னத்துடன்…

ஏட்டுச் சுவடிகளைப் புலவருக்குத் தந்தேன்.

மாடுகளை விட்டு விட்டு மன்றங்கள் தேடினேன்.

முட்டுப் படாமல் புலவர்கள் ஏதேதோ

பட்டி மன்றங்களில் பேசுவதைக் கேட்டேன்.

அவர்கள் நெற்றியில்

காப்பியர் போல் கண்கள் இரண்டில்லை.

என்றாலும்

மன்றத்தார் கேட்டார்கள். கைகொட்டிச் சிரித்தார்கள்.

புலவர்கள் சிரித்தால் அவர் சிரிப்பில்

காப்பியர் மீதி வைத்த பாலின் நினைவு வரும்

மாடுகள் விட்டேன் மன்றங்கள் விட்டேன்

பனங்காட்டில் அலைந்தேன் –

வயதில் சிறியவனாய் நெஞ்சில் முதுமகனாய்

கல்லாத இருள் மனதில் கலக்கமே கைவிளக்காய்

நாட்கள் சில செல்ல இறந்தேன் நானொரு நாள்.

பெற்றோர்

தாழியில் என்னைப் படுக்க விட்டுக்

காப்பியர் தீண்டிய பால்கலத்தை

என்னோடு சேர்த்துப் புதைத்து விட்டுப் போனார்கள்.

இரட்டை நிழலெனக்கு

இரண்டுக்கும் இடையில்

தாழை மடல் போல் இருந்தேன்

நான்.

என் உலகம்

என் உலகம் சிறியது

அங்கே

மூங்கில் ஆல் ஆன வேலி ஒன்றும்

அந்த வேலிஇல் இருக்கும் ஓணான் ஒன்றும்

உண்டு ;

குச்சிப் பூச்சியும் ஒன்றுண்டதிலே

வீட்டுக்கும் இல்லை;

வீட்டுப் பக்கம் வளர்ந்து

கனியாத மரத்துக்கும் இல்லை வேலி

வேலியைப் போட்டதும் நானில்லை

மரத்தைப் பற்றி கூறினேன் அல்லவா?

இன்னும் ஒன்றைச் சொல்லணும்

மரத்தின் கிளையில் தொங்கும்

கூடொன்றுண்டு. பழங்கூடு

இத்தனை சொன்ன பின் எனது

உலகம் எப்படிச் சிறிய தென்று

யாரேனும் என்னைக் கேட்கக் கூடுமோ

எனது உலகம் சிறியது

ஓணானும் குச்சிப் பூச்சியும்

வேலிப் படலில் காணாத போது நான்

கூட்டுக்குப் போய்விடுவேன்: ஏனென்றால்

அங்கே எனக்குச் சூரியன்

அந்தியைக் காட்டுவான் அணுவளவாக

ஆகஸ்டு 15

இரண்டு விரல்களுக்கிடையில்

எச்சிலைக் காறித் துப்பிய

ஒணசல் மனிதன்

நுகத்தடியில் தன்னை மீண்டும்

பொருத்திக் கொள்கிறான்

சிறிய காற்றுக்கும் பெரிதும் அசைந்தன

சிறு மரங்கள்

உலோகத் தட்டில் உணவை முடித்து

வீட்டுக்குள்ளேயே கையைக் கழுவி

மதியத் தூக்கத்தில் சிலபேர் தங்களை மறந்தனர்

வேம்பில் பழக் குலையை எட்டிப் பிடித்துக் காக்கைகள்

ஒற்றைப் பழத்தை ஈர்த்துச் சுவைத்தன

இடித்துக் கட்டப்படும் வீடுகள்

முக்கோண வட்டச் சிதறலாய்க் கவிழ்ந்து

மீண்டும் எழுந்தன விண்ணில்

குறுக்கு நெடுக்கு

வளைவில் நெடுக்கு நெடுக்கில் வளைவு

சதுர வட்டக் கோண மயக்கம்

தூண்கள்

தூணில் துளை

துளையில் புகை

கம்பிக் கதவுகள் எந்திரச் சங்குகள்

கட்டிட நிழலில் கார்களின் வரிசை

தணிந்த சூட்டுத்தூறல் நடுப்பகலில் நினைத்தேன்

ஆண்டுகள் முப்பதுக்கு கீழே ஒரு நாள்

கேள்விப்பட்ட விடுதலை என்னும் கட்டுக்கதை

கூடவே இன்னமும் தொடர்ந்து வளர்ந்து

ஒருநாள் மெய்யாய்த் துடிக்கக் கூடுமோ?

மழைநாள் பாதை

மழை நாள்த் திவசம்

தாத்தாவுக்குத் தந்தை

செய்தது.

வீட்டுக் குள்ளே

பெரிய காலித்

தகர டப்பியில்

காற்றின் பேச்சு

கண்ணை மூடிக் கொண்டு

நடக்கும் பழக்கம் உள்ள நான்

ஆசாரத்தை அஞ்சி வீட்டின்

பின் பக்கம் வந்தேன்

கொல்லைச் சுவரின்

புராதன ஈரத்தில்

பளபளக்கும் சுவடு வைத்து

ஊர்ந்தது நத்தை ஒன்று

நத்தைக்குத் தெரியாதா

செங்குத்துச் சுவரென்று

மீண்டும் ஊர்ந்தது

மீண்டும் விழுந்தது

திவசச் சோற்றுக்குக்

காத்திருக்கும் தேவதைகள்

நத்தையைப் பிடித்துதள்ளி

விளையாடுகிறார்கள் பொழுது போக

இன்றும் திவசம்

மழைநாள்த் திவசம்

கடனுக்கும் பட்டினிக்கும் மான

பங்கத்துக்கும் கண்ணீர்

சுரக்காத தந்தை

குலுங்கி அழுது மனம் தேறி

புலன் அடங்கிய திருநாள்

தீ முன் அமர்ந்தேன்

தாத்தாவின் பெயரோடு

தந்தையின் பெயரைப்

பார்ப்பார் சேர்த்தார்

பாத்திரத் தண்ணீரை

மற்றொன்றுக்கு நான்

பாம்புக் கரண்டியால்

மாற்றி ஊற்றுகையில்

முற்றத்துச் சுவரில்

விரலே உடம்பாகி

அதுவே காலான ஒரு சின்ன நத்தை.

அழிவுப் பாதை

சொல்லப் பட்டது போலில்லை அழிவுப்பாதை

அண்மையில் அல்லது சேய்மையில்

ஏதோ ஒன்றுக் கேற்ப அஃதிருந்தாலும்:

பறவையின் சாதி உடன்வந்தழைக்க

காலுக் கடியில் பூமி குழைய

நாளையின் வாயில் பெருகிய கானம்

வருகையில் இருப்பவர் பெருமையை விரிக்க

சொல்லப்பட்டது போலில்லை அழிவுப் பாதை

எந்தக் கணமும் கழுத்தில் இறங்க

வானவில்லொன்று எதிரே நகரும்

தாரகை கடந்த ஒருபெரும் விசும்பில்

முடிவின் அருள்முகப் புன்னகை பொலியும்…

நடக்கலாம்; இருக்கலாம்; நிற்கலாம்; படுக்கலாம்

அனைத்தும் ஒன்றுதான் அழிவுப் பாதையில்

முதலடி பதியுமுன் அடுத்ததின் வரவு

அதற்குள் மகுடியின் நாக சங்கீதம்

மகுடியின் தலையே ஒருநாக பூஷணம்

நீல நித்திலத் திராவக மயக்கம்

மகுடியின் துளைவழி பிராணனின் நடனம்:

மகுடி நாதா! வேண்டாம் என்பதா

கேளாமல் கிடைத்து நெளியும் உன் பாடலை:

மகுடி நாதா சுற்றி உள்ளோரை

ஒருமுறை நன்றாய்ப் பார்க்கச் சொன்னாய்

சுற்றி உள்ளோரில் ஒருவனாகிய நானும்

சற்றைக்கு முன்பே நின்றிருந்தேனே.

என் அது கண்டாய் என்னிடம் அப்போது?

அத்தனைப் பேர்களில் என்னை அழைத்தாய்

அழைத்த மாத்திரம் வெளியில் வந்தேன்.

வந்த மாத்திரம் நின்றிருந்த இடத்தை

அருகில் இருந்தவர் நகர்ந்து நிரப்பினார்

தலைக்கு மேல்தலை அதற்கும் மேல் தலை

தலைமேல் விழுந்தலை தோளில் விழும் தலை

இடுப்பில் விழும்தலை காலிடுக்கில் தலை

சுவரில் பதித்த விரட்டிக் கூட்டம்

அத்தனைக் கிடையில் மகுடி நாதா

வெட்டாமல் விழுந்தது என் தலை மண்ணில்

சுற்றிலும் ஒருமுறை பார்க்கச் சொன்னாய்.

கண்டேன் அந்தச் சித்திரம் பெரிதும்

மாற்றப் படுவதை எப்படிக் கூறுவேன்.

மேயக் குனிந்த மாடு மாற்றிற்று

உட்கார்ந்திருந்தவன் எழுந்து மாற்றினான்

பறந்த கூளம் விழுந்து மாற்றிற்று

ஓடி மாற்றிற்றுத் தொலைவிற் றண்ணீர்

கனன்றும் அவிந்தும் தீமாற்றிற்று

மூக்குத் துளைகள் விரிந்து மாற்றின

ஒவ்வொரு மூலையில் ஒவ்வோரிடத்தில்

மாற்றித் தீர்ப்பதே கடமையாய்க் கிடந்ததால்

சித்திரம் முழுவதும் மாற்றப்படுகிறது

உன் மகுடியின் சப்தச் சிலந்திகளில்

நீலம் இறங்கி நிலவு தெளிகிறது

முழுவதும் என்னைப் புகையால் உடுத்தி

அதற்குள் இருப்பதாய் மற்றோர் எண்ண

இல்லாதாகிய என்னை நீ

அழைத்தால் திரளும் ஒரு பொருளாக்கிக்

கேட்கிறாய்: அங்கே இருப்பதைக் கூறு

வானில் தொங்கும் குபேரக் காசொன்று

பக்கம் இரண்டையும் புரட்டிக் காட்ட

அங்கே அங்கே அங்கே பார்க்கையில்

மாற்றிச் சொல்ல வன்மை செய்கிறாய்

மகுடி நாதன் சொல்லிக் கொண்டிருந்தான்

சுற்றி நின்றவர் கேட்டுப் பார்த்தனர்:

புகையில் என்னைக் கூப்பிட் டெடுத்தான்

சித்திரத்தை மாற்றத் தொடங்கினேன் நானும்

உன்னை வீட்டில் தேடுகிறார்கள்

ஆம்:

தான்யம் வேண்டுமே அமுது படிக்கு

காக்கை

காக்கையை எனக்குத் தெரியும்

யாருக்குத்தான் தெரியாது. ஆனால்

இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது.

எனக்கு நேரே ஏதோ என்னிடம்

பேச வந்தாற் போலப் பரபரப்பில்

அமர்ந்திருக்கும் இந்தக் காக்கை

ஊரில் எனது குடும்பத்தினருக்குப்

பழக்கமுள்ள காக்கை ஒன்று

எங்கள் வீட்டுச் சிறிய கரண்டியை

எடுத்துச் சென்று பெரிய கரண்டியைப்

பதிலாய் ஒரு நாள் முற்றத்தில் போட்டதாம்

இந்தக் காக்கை என்ன செய்யுமோ ?

காலும் உடம்பும் கழுத்தின் நிறமும்…

அதற்கு நவீன உலகம் பழகிவிட்டது

காக்கையின் மூக்கில் மெல்லிய இரும்புக்

கம்பிகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன

நாற்பது வயதில் மூன்று தடவைகள்

சிறகால் அடித்த அவற்றையே என்னால்

அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை

மீண்டும் ஒருமுறை இந்தக் காக்கை

எனக்கு நேரே வந்தமர்ந்தால்

தெரிந்து கொள்ள முடியுமா என்னால் ?

முடியும் என்பது சந்தேகந்தான்

ஏனெனில் காக்கையை யாரும்

முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.

என் சிவனே

இந்நாள் வரைக்கும்

நானமர்ந்தால்

சப்திக்காத நாற்காலி

எழுந்தால் அமர்ந்தால்

ஓசை எழுப்பத்

தொடங்கிற்று

நீரை நோக்கிக் குனிந்தால் என்

பிரதிபலிப்பின் சுமை பொறாமல்

அலைகள் விரையும் மறுகரைக்கு.

ஒரு ஜீவனுக்கும்

என் பொருட்டால்

துன்பமில்லாத

நாள் மறைந்து

ஒவ்வொரடிக்கும்

ஒரு ஜீவன் மிதிபட்டுக்

கூவக் கண்டேன் என் சிவனே

அங்கம்மாளின் கவலை

பலகைக் கதவில் நான்காவதனைக்

கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில்

அங்கம்மாளின் கண்ணில் நாராயணன்

வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள்

ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப்

பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும்

கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு

இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள்.

கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான்

சங்கடமான சிரிப்பொன்று காட்டினான்.

பார்க்காதவள் போல் அவளிருந்தாள்

சுருட்டுக்காக அவன் வந்திருந்தான்

முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல

கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான்

என்ன வென்று அவள் கேட்கவில்லை

என்ன வென்று அறிந்திருந்ததால்

சைக்கிளில் வந்தான் சுப்பிரமணியன்

அவனைக் கண்டதும் அவள் வியர்த்தாள்

காலைப் பொழுதில் இரண்டாயிற்று

இன்றைக் கெப்படி ஆகப் போகுதோ?

“என்னடா நாணி? ஆரம்பிக்கலையா?”

“உன்னைத்தான் பார்த்தேன் நீ ஆரம்பி.”

அங்கம்மாள் இந்தப் பேச்சைக் கேட்டு

உள்ளுக்குள்ளே எரியத் தொடங்கினாள்.

“நாணிக்கிரண்டு எனக்கிரண்டு

நடக்கட்டும் வியாபாரம் இன்றைக்”கென்று

சுப்பரமணியன் வண்டியை விட்டுக்

கடைக்குப் பக்கமாய் நெருங்கி வந்தான்

ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள்

வேகம் குறையாத நடை பயின்று

கோபாலன் வந்தான் சேர்ந்து கொண்டான்

கேட்பதைத் தனக்கும் சேர்த்துக் கேளென்றான்

அங்கம்மாள் அவனை ஒருகணம் முறைத்தாள்

“என்ன முறைக்குது அங்கம்மா?” என்றான்

“எல்லா முறைப்பும் சரியாப் போய்விடும்

வருகிறான் அங்கே ரத்தினம்” என்றான்

அந்தப் பெயரை கேட்டதும் அங்கம்மா

கொஞ்சம் பதறி நிலைமைக்கு வந்தாள்

“என்னடா அங்கே காலை வேளையில்

கிணடல் கலாட்டா நமது கடையில்?”

ரத்தினம் குறும்புடன் சிரித்துக் கூறினான்

“வாடா இன்னும் மத்தவனெல்லாம்

வரலியா?” என்றாள் அங்கம்மா

“என்னடா ரத்தினம் பெண்டாட்டி வாயில்

அடாபுடா? வெட்கம்” என்றான் கோபாலன்

சீற்றத்தோடு அங்கம்மாள் எழுந்து

நாயென்றும் கழுதையென்றும் அவர்களைத்

திட்டினாள்

“கணவன் மனைவி உறவில் இதெல்லாம்

சகஜம்” என்று ரத்தினம் சொன்னான்.

“நீங்களெல்லாம் படித்தவர்கள் தானா?

உங்களுக்கு எந்த மூடன் கொடுத்தான்

பட்டங்கள்?” என்று பொரிந்தாள் அங்கம்மா.

‘அவரும் ஒருவேளை உன்னிடம் வருவார்

சுருட்டுக் கேட்டெ’ன்று நாராயணன் சொன்னான்

“அவரைப் பிடித்துக் கொண்டு அப்புறம் என்னை

விட்டு விடாதே” யென்று ரத்தினம் கெஞ்சினான்

அந்தச் சமயம் வேணுவும் வந்தான்

சுருட்டை எடுக்கக் கடைக்குள் நீண்ட

வேணுவின் கையை அவள் மடக்கினாள்

சுகமோ சுகமென்று வேணு பாடினான்

ரத்தினம் அவனது தலையில் தட்டி

அத்து மீறினால் உதை என்று சொல்லி என்

பெண்டாட்டி என்பது மறந்ததா என்றான்

மன்னிக்கச் சொல்லி வேணு சிரித்தான்

வேணுவின் கையை மடக்கிய வேகத்தில்

சேலை நகர்ந்து சிறிது வெளிப்பட

நல்லதாய்ப் பெயரை உங்கப்பன் வைத்தான்

என்றான் ரத்தினம் அங்கம்மாளுக்குக்

கோபம் பொரிய உங்கம்மாவைப்

பார்த்துச் சொல்லென்று உரக்கக் கூவினாள்

இடையில் சிறுவன் மிட்டாய்க்கு வந்தான்

எடுத்துக் கொடுத்து அனுப்பிய பின்பு

சீயக்காய்க்குக் கிழவி ஒருத்தியும்

வெற்றிலைக்குக் கோனார் ஒருவரும்

ஊறுகாய்க் கென்று பிச்சைக் காரியும்

வந்து போனதும் கோபாலன் மெல்ல

முதல் வியாபாரம் நடந்த பிற்பாடு

தாமதம் ஏனென்று கையை நீட்டினான்.

நீட்டிய கையைத் தட்டி நீக்கினாள்

தட்டிய கையைத் தீண்டிய தன் கையை

முத்தம் கொடுத்துப் பிறர்க்கு நீட்டினான்

அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தனர்

கௌரவமான தகப்பன் தாய்க்குப்

பிறக்காத பிறவிகள் நீங்களென்று

ஒட்டு மொத்தமாய் அங்கம்மாள் திட்டினாள்

உன்னைப் பார்த்தோம் உன்னைத் தொட்டோம்

முத்தம் கூடக் கிடைத்துவிட்டது

சுருட்டைக் கொடுத்து எங்களை அனுப்பென்று

வேணு நயமாய் எடுத்துக் கூறினான்.

அவளுக்குக் கோபம் எல்லை தாண்டிற்று

அவர்கள் சிரிப்பும் எல்லை தாண்டிற்று

அடுத்த வீடுகள் எதிர்த்த வீடுகள்

இன்னும் தெருவில் போவோர் வருவோர்

அனைவரும் இதனைப் பார்த்து ரசிக்க ஒரு

சுருட்டுப் பெட்டியைத் தெருவில் எறிந்தாள்

ஆளுக் கொன்று பற்ற வைத்துத்

தங்கள் பாக்கியை ஒன்றாய்த் திரட்டி

அங்கம்மாளை ஆங்கிலப் படத்துக்குக்

கூட்டிக் கொண்டு போகலாமென்று

ரத்தினம் சொல்ல அனைவரும் சிரித்தனர்

ஒன்பதுக் கப்புறம் இரவில் பார்ப்பதாய்

வேணு சொன்னதும் அனைவரும் கலைந்தனர்.

அங்கம்மாள் இருக்கையில் அமர்ந்தாள்

அருகில் இருந்த ஒருவரைக் கேட்டாள்.

‘என்ன சாமி எனக்கும் வயது

நாளை வந்தால் ஐம்பதாகிறது

இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்

நினைக்காமல் போகக் காரணம் என்ன?’

மூலைகள்

பூமியிலிருந்து

சூரியன் வரைக்கும்

அடுக்கிக் கொண்டு

போகலாம்

உலகில் உள்ள

மூலைகளை எல்லாம்

கணக்கெடுத்தால்.

இருந்தாலும் மூலை

எல்லோருக்கும்

சரிசமமாகக்

கிடைப்பது கிடையாது

தனக்கொரு மூலை

கிடைக்கப் பெறாமல்

இங்கும் அங்குமாய்ப்

பலபேர் அலைகிறார்

அழுக்கானாலும் சரி

சிறிதென்றாலும் சரி

உண்மையில் எதற்கும்

பயனில்லை என்றாலும் சரி

மூலை வேண்டும் ஒரு மூலை

எல்லா மூலைகளையும் யாரோ

பதுக்கி வைத்திருக்க

லாமென்றும் பரவலாகச்

சிலபேர் கருதுகிறார்கள்

இனிமேல் மூலைகள்

கிடைக்கும் வழியற்று

வெதும்பிப் போனவர்கள்

கோணம் வரைந்து

போட்டிக்கு முந்தி

மூலையைப் பிடித்து

வசமாக்கிக் கொண்டு

நிற்கிறார்கள் கையில்

படுக்கை பெட்டி

காலணி புத்தகம்

இன்னும் பலவற்றோடு.

எங்கெங்கும் போவேன்

எங்கெங்கும் போவேன் என்ன

வேண்டுமென்றாலும் பார்ப்பேன்

எங்கெங்கும் போவேன் யாரை

வேண்டுமென்றாலும் பார்ப்பேன்

காலரைப் பிடித்துக் கொண்டு

எங்கெங்கு போனாய் என்று

கேட்குமா நியாயம் என்னை.

கல்லும் கலவையும்

கல்லும் கலவையும் கொண்டு

கரணையால் தடவித் தடவி

சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்

ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்

கட்டிடம் இல்லை பாலம்.

முன்னாளெல்லாம் பாலம்

தியானித்திருக்கும் நீருக்கு மேலே

இந்நாளெல்லாம் பாலம்…

நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.

ஆதியில் இந்தப் பாலம்

தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும்

போகப் போகப் போக

மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி

ஒருவாறாகிப் பிறந்தது பூமியில்

ஒருநாள் அதனுடன் பேசும் பொழுது

வேலியும் படியும் கம்பமும் ஏணியும்

தானே என்றது பாலம்

இன்னும் கொஞ்சம் நின்றால்

என்னையும் தானே என்று

கூறக்கூடும் பாலம்

என்கிற எண்ணம் உதிக்க

வருகிறேன் என்று புறப்படும் பொழுது

என்னைப் பார்த்துப் பாலம்

சிரிப்பில்லாமல் சொல்லிற்று

ஜாக்கிரதையாகப் போய் வா

எங்கும் ஆட்கள் நெரிசல்

உன்னைத் தள்ளி உன்மேல்

நடக்கப் போறார் பார்த்துக் கொள்.

நகர மறுக்கிறது பொழுது…

நகர மறுக்கிறது பொழுது

இன்னும் நெடுநேரம் ஆகும் இரவுக்கு

நித்தியத்தின் வெயிலில் நன்றாக உலர்ந்து

பக்குவம் அடைகிறது அன்றைய இரவு

இன்னும் நேரமாகும் இரவு வர

காற்றைக் கிழவன் வாயால் வெளிப்படுத்திக் கொண்டு

கேட்கப் பிடிக்காத ஒருவனிடம்

மறதியை ஊதி அந்தநாள்க் கதையைக் கூறுகிறான்

குந்திக் குறிவிறைத்த யாளித் தலையிலிருந்து

சாமித் தண்ணீர் கொட்டுகிறது

மாலைக் கூட்டத்தில் பேச்சாளி

மேற்கோள் கட்டுகளை வீசிக் கிளர்கிறான்

காலட்சேபக் கூட்டத்தில்

பிரசங்கிக்கும் பக்தர்க்கும் கூவம்

உடம்பில் கமழ

வத்திப் புகையும் நறுமணப் பூவும்

சுகந்தம் குன்றி செத்துப் போகிறது

தெருவை ஒருமுறை கண்ணால் துழாவி

முன்னேற் பாடாக கக்கூசுக்குப் போன பரத்தை

வந்தது இரவென்று வயதைக் களைகிறாள்

பாடம் மட்டும் மனப்பாட மாகாத சிறுவன்

குழப்பத்துக் கிடையில் தூங்கிப் போகிறான்

சலங்கைக் காலுடன் பாவங்கள் தெருக்கூத்தாடி

அழியாத தங்கள் மேன்மையைக் கூறின.

உலகின்மீது இரவு கவிழ்ந்து அமிழ்கிறது

இரவின் உலுக்குக் காசுகள் உளற

விளக்கம் எழுதினார் இலக்கிய வாதிகள்

ப்ரகாசம் மிகுந்த இரவின் சப்த தாதுக்கள்

யாரையும் எதையும் தன்வச மாக்கின்

தயங்கிய புண்ணியம் கூட

தயங்கிய புண்ணியம் கூட

தயங்கிய புண்ணியம் கூட

பாவத்தைப் பின்பற்றித் தன்னை மொழிந்தது

நான்

நெட்டுயிர்த்து விளக்கை அணைத்தேன்.

கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி

கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி கரப்பான்

தண்ணீர் பக்கெட்டின் வெளியில் கனாக்காண

உள்ளேயிருந்து வெளிப்பட்டபோது.

அவசரப் படாமல் தின்றது பல்லி அதன் குறிகள்

கரப்பானுக்கு மௌனமாய்ப் போதித்ததெவ் வுண்மை?

விலக்கிவிடாமல் இருந்து பார்த்து கரப்பான்

மிஞ்சாமல் மறைந்ததும் எழுந்துபோய்த் தண்ணீர்

குடித்துத் திரும்பிப் பக்கெட்டைப் பார்த்தேன்

கவிஞன் எதிரில் கொலைக்கிடம் கொடுத்ததைக்

காட்டிக் கொள்ளாதிருந்ததந்த நீல பக்கெட்டு

பாலை

வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்

உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை

அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி

பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்

காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து

விடியற் பறவைகள் ஒருசில கூவ

வந்தேன் என்றாள் வராது சென்றாள்

யாருடன் சென்றாள் அவரை ஊரார்

பலரும் அறியத் தானறியா மடச்சி

உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்

எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி

நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி

மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின்

நிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ

கரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி

சேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்

போகப் போகக் குறையும்

ஆகாச் சிறுவழி அது எது என்றே.

தெரு

எல்லாத் தெருக்களையும் போலவே எனதும்

இரண்டு வரிசை வீடுகளுக் கிடையில் அமைந்தது

பிள்ளைப் பருவத்திலிருந்து இன்று வரைக்கும்

அதன் மேல் நடக்காத நாளொன்று கிடையாது

தெருவில் அதிக மாற்றமும் இல்லை

இரண்டு தென்னைகள் அகற்றப்பட்டன

பச்சைப் புல்லின் புதர்கள் இப்போது

இடம்மாறித் தெருவில் வளர்ந்து வருகின்றன

தெருவை நான்காய்ப் பிரித்தால் முதலாம் பகுதியில்

அமைந்ததென் வீடு பழசு ஓடு சரிந்தது

எடுப்பிலேயே வீடிருந்ததால்

தெருவை முழுக்க வயதான பிறகு

ஒருமுறைகூட நடந்து பார்க்கவில்லை.

ஒன்றிலிருந்து திரும்பிய பிறகே

எல்லாத் தெருக்களும் அடைவதாய் இருக்கும்

எனது தெருக்குள் நுழையும் முன்பு

ஒரு கணம் நிற்பேன். தெருவைப் பார்ப்பேன்

தொலைவில் விளையாடும் எனது பிள்ளைகள்

என்னைக் கண்டதும் ஓடி வராதிருந்தால்

வீட்டின் வாசலில் மனைவி காத்திருக்கா திருந்தால்

வீட்டுக் கெதிரில் அந்நியர் ஒருவரும்

வெறுமனே நின்று கொண்டில்லாமல் இருந்தால்

நடையில் வேகம் கூட்டிச் செல்கிறேன்

பிள்ளைகளை வீட்டுக்கு வருமாறு பணிக்கிறேன்

உள்ளே யுகாந்திரமாகப் பழகிய இருளை

அமைதியாகத் தீண்டிக் கொண்டே

அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறேன்

வெள்ளைப் பல்லியை நகரச் செய்து

விளக்குத் திரியைச் சற்றுப் பெரிதாக்குகிறேன்

முற்றத்துக்கு வந்து நின்று கொண்டு

வாசல் படிக்கப்பால் தெரியும் தெருவை

என்னுடன் மனைவியும் பார்க்கப் பார்க்கிறேன்

சின்னதாய்த் தெரிகிறது தெரு.

உள்ளும் புறமும்

உள்ளும் புறமும்

ஒருங்கே தெரிய

ஒன்றிருப்பது அழகுதான்.

மற்றவை யெல்லாம்

உள்ளும் புறமும்

தனியே தெரிய இருக்கும் பொழுது.

எந்தப் பொருளின்

முடிப்பாகமோ

அடிப்பாகமோ

உள்ளும் புறமும்

ஒருங்கே தெரிய

இருக்கும் இப்பொருள்?

ஒன்றையும் காணாமல்

உள்ளும் புறமும்

தெரிய பொருளின் ஊடு

உலகைப் பார்த்தேன்

உலகம் கோமாளி ஒருவனின் மீசையாய்

நகர்கிறது பக்கவாட்டில்.

காட்சி

வரப்பு

காக்கிப் பயிர்

கம்பி குத்தி

நெட்டைக் கம்பம்

கேடயம்

வாள்

குறுக்கில் விரையும் பறவை

உதைக்கும் சப்தம்

சப்தத்தில் பூமி

ஒரு மீசை

பூசப்பட்ட வானம்

நகராத புரவி

நகர்ந்து போன பகை

நெல்லுப்பயிர்

கள்ளு குடி

குளத்துப்படிக்

கட்டில் வெட்டுப்

புண்ணில் சொட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ

ராஜாதி ராஜர்க்கு

யாண்டு…

யாண்டு?

அல்லிப் பூவில்

ரத்தக கறை

சூரியனின்

சேப்புத் தலை

தோப்பு

தெம்மாங்கு

தலை முழுகிய

தண்ணீர்

அலை இடி

அலை இடி

அலை

தலை

அலை

தலை

அலை

தலை

அலை

பொம்மைக் குதிரை

ஆசைப்பட்டுக் கனைச்சு

வர்ணம் உதிர்ந்து போச்சு

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்

எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று

எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்

ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

சொல்

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்

வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு

நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு

ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்

மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்

பலரும் சொன்னோம்

‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’

அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.

நாங்கள் வியந்தோம்.

இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா

ஒருநாள் அவனும் இறந்தான்

கட்டைப் புகையிலை போல அவன்

எரிந்ததைப் பார்த்துத்

திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்

சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.

வழக்கம் போல நான் சொன்னேன்.

‘புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்’

ஓட்டை ரூவா

நடத்துநர் பக்கம் நீட்டிய பொழுதே

நெஞ்சம் சற்று தடதடத்தது.

இடமும் வலமும் தலையை அசைத்துத்

திருப்பித் தந்தார் இரண்டு ரூவாயை.

வாங்கிக் கொண்டேன் வீதிப் பக்கம்

விரித்துப் பார்த்தேன். நடுவில் ஓட்டை…

ஓட்டை வழியாய்ப் பார்த்தேன். கட்டிடங்கள்

ஓடிச் சென்றன விரைவாய்.

அக்குளைக் காட்டிப் பரத நாட்டியம்

ஆடும் ஒருவனின் வண்ணச் சித்திரம்

இசைக் கேடான இடத்தில் மசியால்

தடவப் பட்ட ஒருத்தியின் படமும்

தலைவரின் படங்கள் கோஷங்கள் சென்றன.

ரூவாய்த் தாளை மடித்துப் பைக்குள்

வருத்தத்தோடு வைத்துக் கொண்டேன்

சட்டைப் பையின் அடியில் சூடாய்

இரத்தம் கசிவதாய் நினைப்புத் தோன்ற

சட்டைக்குள்ளே பார்த்தேன். செல்லாத

தாளை எதற்குப் பாதுகாப்பானேன் என்று

ஓட்டை விழுந்த ரூவாய்த் தாளை

வெளியில் எடுத்து வீசி எறிந்தேன். ஆ.

உந்து நின்றது அனைவரும் வெளியில்

விரைவாய் ஓடித் தாளைத் தேடினர்

எண்ணற்ற ரூவாய்த் தாள்கள் எங்கும்

பறந்ததாய்க் கூறிப் பிடிக்கத் தொடங்கினர்.

மக்கள் கூட்டம் பெருகப் பெருக

நானோ இருக்கையில் விழித்திருந்தேன்.

இவன்தான் அத்தனை தாள்களை எறிந்தான் என்று

பலபேர் என்னிடம் தேடத் தொடங்கினர்.

ஒருதாள் அதுவும் நடுவில் ஓட்டை

விழுந்த தாள் என்றால் ஒருவரும் அதனை

ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை.

போலீஸ் வந்தது கூட்டம் கலைந்தது.

உனக்குத் தாள்கள் எங்கே கிடைத்தன?

போலீஸ் கேட்டதும் உள்ளதைச் சொன்னேன்.

இருந்தவர் கூடி நடுவில் ஓட்டை

விழுந்த ரூவாய் தாளைத் தேடினர்.

கிடைத்தது. பனைகள் இரண்டுக் கிடையில்

காட்டுச் சிலந்தியின் வெள்ளைக் குடைமேல்

திரும்பத் தந்தார்: ‘வெளியில் எறிந்தால்

எண்ணணும் கம்பி இனிமேல்’ என்றார்.

வாங்கிக் கொண்டு மடியில் வைத்தேன்

வயிற்றுக் கடியில் கனமாய் அறிந்தேன்

வீதியில் எறிய பயந்து கொண்டு

புத்தகத்தின் இடையில் வைத்தேன்.

ஓட்டை விழுந்த ரூவாய்த் தாளது

படிக்கப் படாத பக்கத்தில்

ஒருவாறாக இருந்தது பொருந்தி.

கடற்கரையில் சில மரங்கள்

கடற் கரையில் சில

மரங்க ளென்று நான்

கவிதை எழுத நினைத்திருந்

தேன். எதையும் நி

னைத்ததும் மு

டிக்க வேண்

டும். மு

டிக்க வில்லை யென்றால் ஏ

தும் மாற் றம் ஆ

கிவிடும். அம் ம

ரத்திலொன்றை இன்று நி லைகு லையச் சாய்த்து

தொடர்ந்து பி

ளந்து தொ

டர்ந்து வா

ளாலறுத்

துத் துண்

டுதுண்

டுதுண்

டுதுண்

டாக்கிக் கி

ளைமு

றித்துப் பூ

சிதறி இ

லை சிதறி

எங்கும் அம்மணம் இளவெயிலில் துலங்க

கோடரி குதிக்கத் தூள் தூள் எழுப்ப

நெடுகக் கிடந்த அம்மரப் பெருமையைக்

காற்றுக் கூறக்

கடற்கரையில் சில

மரங்கள்

மை குழம்பிய நீள் இமை சோரும்

தங்கள் மேல்கள் தளர்வுற விம்மும்

யூக லிப்டஸ் தோப்பின்

பிருஷ்டபா

கங்கள் தவிக்கும்

பூமிக் கடியில் விதைகள் ஒருசில

மண்ணைத் தள்ளிக் கொண்டு தங்கள்

வெள்ளைச் சிறுவாய் அகட்டிப் பார்க்கும்

கொடிகள் தளர கொன்றை நின்றன

புள்ளி காணா வியப்புக்

குறிகள் ஏராளம் தம்மிடம் தொங்க.

பிரிவு

ஊர்புகழும் மார்கழியை

ஏன் டிஸம்பர்

கைவிட்டுப் போகிறது.

மழையில்

மழையில் நனைந்த கந்தல்த் துணி மீது

பாத சாரியின் செருப்புக் கால்

ஊன்றி அகன்றது.

கந்தல்த் துணியின் தண்ணீர்

பிழியப்பட்டு ஊர்ந்ததைக் கண்டேன்

நெஞ்சம் நெகிழ்ந்தது.

உவமை ஒன்று துன்புற்ற தென்று.

குப்பைத் துணை

அவருடன் காகிதக் குப்பைச் சுருளொன்று

அவருக் கிணையாய் விரைந்து வந்தது

அவரால் அழைத்து வரப்படுவதைப் போல்

அன்னார் என்னைக் கடந்து சென்றார்

அதுவும் அவரைத் தொடர்ந்து சென்றது

என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி.

இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

சந்தேகத்துடனே தொட்டுப்பார்த்தேன்

பையிலிருந்த பேனாவைக் காணோம்

வழியில் எங்கோ விழுந்து விட்டது

நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா

எங்கே விழுந்ததோ யாரெடுத்தாரோ

ஒருகணம் நினைத்தேன் வழியில் அதன்மேல்

வண்டி ஒன்று ஏறிவிட்டதாய்.

எண்ணிப் பார்த்ததும் உடம்பு நடுங்கிற்று

வண்டி எதுவும் ஏறியிராது.

பள்ளிக்கூடத்துப் பிள்ளையின் கையில்

கிடைத்திருக்கலாமென்று எண்ணிக் கொண்டேன்.

முள்ளைக் கழற்றிக் கழுத்தைத் திருகிப்

பல்லால் கடித்துத் தரையில் எழுதி

அந்தப் பையன் பார்ப்பதாய் எண்ணினேன்

அதற்கும் நடுங்கி எண்ணத்தை மாற்றினேன்

எவனோ ஒருவன் கிழவன் கையில்

அந்தப் பேனா கிடைத்ததாய் எண்ணினேன்

குடும்பத்தை விட்டுத் தொலைவில் வாழும்

அந்தக் கிழவன் மகளுக்குக் கடிதம்

எழுத முயன்று அவனுக்கெழுத

வராமல் போகவே என்னைத் திட்டியதாய்

எண்ணிக் கொண்டேன் எனக்குள் சிரித்தேன்.

மாலை வரைக்கும் நிம்மதியற்றுப்

புதிய பேனா ஒன்று வாங்கினேன்

சோதனைக்காகக் கடையில் கிறுக்கினேன்.

வீட்டுக்கு வந்ததும் முதலாம் வேலையாய்

எழுதிப் பார்க்கக் காகிதம் வைத்தேன்

என்ன எழுத? ஏதோ எழுதினேன்

புதிய பேனா எழுத எழுத

இழந்த பேனா இருப்பதை உணர்ந்தேன்

ஆமாம் எல்லாம் ஒன்றுதான்

இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

பிரிவும் சேர்க்கையும்

என்னை நோக்கிக் கையொன்று நீண்டது.

குச்சிக் குப்பை ரேகை படர்ந்த

உள்ளங் கையைத் தொடர்ந்து பார்த்தேன்.

இல்லை யென்றும் அதற்குள் சொன்னேன்.

இல்லை யென்றதும் மடங்காத தனது

கையை எடுத்துக் கொண்டு அவள் நகர்ந்தாள்.

இருப்பிடத்துக்குத் திரும்பும் பொழுது

சட்டைத் துணியில் மசித் துளிக் கறை போல்

அவளது கண்கள் நினைவில் எழுந்தன.

பிச்சையே எடுப்பாள் என்று நினைத்தேன்.

இரண்டாம் வகுப்பின் கழிவறைப் பக்கம்

சீட்டில்லாமல் பயணம் செய்வாள்

அப்படி ஒருநாள் பார்க்கும் பொழுது

கொடுப்பதாய் எண்ணினேன். ஆனால்

ரோகியாய் அவளைத் தவறாய்க் கருதி.

நட்டு

வட்டச் சந்திலும் சதுரச் சந்திலும்

மூன்றுநாட் புழுதி அடைந்திருக்கும்

இரும்பு நட்டொன்று எதிரில் கிடந்தது

எங்கும் இனிமேல் பொருந்தாத நட்டு

என்றாலும் பாரம் அதற்கொன்று உண்டு

எடுத்துக் கொண்டேன் உள்ளங்கையில்

உருட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்

கிண்ணத்து நீரில் மூழ்க வைத்தேன்

சாலிக்ராம பூசை செய்வதாய்

அம்மா என்னைப் போற்றத் தொடங்கினாள்

இனிமேல் வீட்டில் சுபிட்சம் என்றாள்

மனைவி பார்த்து கெக்கலித்தாள்

பிள்ளைகள் அதனை ஆசை தீரதர

தெருவில் பந்தாடிக் களித்தார்கள்

அதற்கு பின்பு நட்டு

வலைஞன் வலையில் ஆமைக் குட்டி போல்

என்றும் எனது பார்வைக் கெதிரே.

மிளகாய்ப் பழங்கள் மாடியில்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன

ஆசை மிகுந்த அணிலொன்று வந்தது

பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து

கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது.

முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித்

தடுத்திழுத்து நிறுத்திய போதும்

ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க

உலவைப் பழங்கள் எங்கும் சிதறின

ஜன்னலை விட்டுத் திரும்பினேன்

எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று.

சும்மா

இறுகத் திருகியதும்

கழுத்தில் துளிர்த்ததை மனத்தில் கண்டு

எழுது கோலைத் தேடி எடுத்தேன்

போதுமா இன்னும் ஊற்ற வேண்டுமா?

மூடுதல் எளிமை திறப்பது கடினம்

மூடலே கடினமாய் இருக்குமானால்?

எளியதாய்த் திறந்து கொண்ட

எழுது கோலின் தொண்டைக் குள்ளே

ஒலிக்காத சொற்கள் போலக்

குமிழிகள்.

ஊதிப் பார்த்தேன்.

ஊசியால் குத்திப் பார்த்தேன்

குமிழியில் ஒன்று கூட

அதற்கெல்லாம் உடையவில்லை

ஊற்றினேன் மையை மை மேல்

வந்தது குமிழிக் கூட்டம்

வெளியிலே விழுந்தடித்து

திருகினேன் இறுக்கி. அங்கே

கழுத்தில் பனித்தது மனத்தில் கண்டது.

உபதேசம்

அன்பைத் தவிர வேறொரு செய்தி

விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை

நீண்டதாய் எங்கும் செல்வதாய்

இருக்க வேண்டும் என் அன்பு

சக்கரம் பொருந்தி சுமையை

எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.

காகித வாழ்க்கை

திடீரென்று ஆனால்

சர்வ நிச்சயத்துடனே அன்று

தொடங்கிய எனது வாழ்வை

வியக்கிறேன் திரும்பிப் பார்த்து.

நான் அதைக் கேட்கவில்லை

எனக்காக யாரும் கேட்கவில்லை

என்பதுறுதி ஆனால்

ஏனது உண்டாயிற்று?

அவ் வேத கோஷத்தோடு

மழை மண்ணில் இறங்கும் போது

இவ் இது என் வாழ்க்கை வானி

லிருந்து பொட்டலம் போல் வீழ-

பொட்டல மான யானே என்னையே

பிரித்துப் பார்க்கும்

அதிசயம் இதன் பேரென்ன?

நிச்சயத்தோடு அன்று

வாழ்க்கையே தொடங்கிற் றென்றால்

எங்கிருந் தாரம்பம் என்று

தேடு மென் மடமை என்ன!

உலகெங்கும் பிரிப்பில்லாமல்

பொட்டல எருக்கங்காடு

புசுண்டகன் அலகுக் கூத்து

என்னை நான் பிரித்துப் பார்த்தேன்

விக்கித்துக் கண் கலுழ்ந்தேன்

கடவுளைக் கண்டேன் அந்தப்

பொட்டலத்தின் கால் விரித்த

ஒரு மூலைக் கோட்டில் நின்றார்

விரல்களால் என்னை மீன்போல்

தூக்கினார் வாய்க்குள் இட்டார்

ஆனந்தம் அவரை முந்தி

நான் சொன்னேன் அவர் சிரித்தார்

பொட்டலக் காட்டில் சர்வ

நிச்சயத் துடனே நின்றேன்

எப்படி உண்டாயிற்று

அது என்ற கேள்வியோடு.

கண்ணைக் கவரும் மார்பகங்கள்

பார்ப்பதரிதாய்ப் போய்விட்டதென்று

சுற்றிலும் பார்த்தேன்

உயர்ந்த வெள்ளைத் துணிக்குள்

இரண்டில் வலது பொதிந்திருந்தது

அதன் மேல் ஆனால் ஒரு ஈ

சாமரம் போல மார்பசைந்தது

அசையாதிருந்தது நான்

இடத்தை விட்டுப் போக நேர்ந்தது

போய் விட்டிருக்குமா ஈ

நிச்சயம் போய்விட்டிருக்கும்: இல்லை

நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்

ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப்

பார்க்கப் படாத ஈ யூகத்தளவு தான்

கண்ணால் எடுத்துச் செல்லப்பட்ட

கண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல்

என்றும் இருக்கிறது ஈ.

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும்

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும்

நினைவில் உள்ளதா

ஏமாற்றத்தின் துரோக முட்கள்

உன்னைக் கிழித்த அம்முதல் நாளை

எப்படி உரக்கக் கூவினாய்! யாரோ

கூக்குரல் கேட்டு வருவார் என்பதாய்

எவ்வளவு விரைவில் தெரிந்து கொண்டாய்

பதிலில்லாக் கேள்வி உன் கூக்குரலென்று

கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப் போய்விடும்

எத்தனை குருதி பெருக்கினாய் முதலில்

அன்று குத்தப்பட்ட போது

இன்றோ உன்னை எங்குக் குத்தியும்

சொட்டுக் குருதியும் வெளிப்படவில்லை

கூச்சலும் இன்று தவிர்ந்து விட்டது

உனக்குத் தெரியும் கொலையின் நேரம்

காத்திருக்கிறாய். ஓரெரி கல்லாய்

உன்னை நோக்கித் தவறாது விரையும்

அசக்திக் கருவியின் கூர்முனை நோக்கி.

எதையும் ஒருநாள் ஏற்றுக் கொள்ளலாம்

அதனின் பிசுக்கைத் துடைத்த கையுடன்

திரும்பும் பொழுது எதிர்பாராமல்

இருளில் மழைக்குளத்தில்

இறங்கினாற் போல் இருக்கும் பொழுது.

லாறி

எங்களூர்ப் புழுதித் தெருமேல்

அடிக்கடி ஓடும் லாறிக்கு

நைனாச்சாரியார் என்று பெயர் வைத்தார்கள் –

இரண்டிடத்திலும் புட்டம் அகலமாய்த் தெரிந்ததால் –

புறம்போக்கு மண்ணில் புகைந்த சூளையின்

செங்கல்லை வாரித் தொலைவில் விற்று விற்றுக்

குதிரை வண்டி குப்பு முதலியைக்

குபேரனாக்கிய பெருமை அதற்குண்டு

கல்வி கேள்விப் புலமையில் சிறந்தவராக

லாறியாரைப் பலபேர் மதித்தார்கள்

லாறியாரின்

அங்கம் முழுதும் ஆங்கிலம் பொலிந்தது

கொஞ்ச நாட்களாய் லாறியார்க்குக்

கெட்டப் பேரொன்று சேரத் தொடங்கிற்று

லாறி வழங்கிய பெட்றோலிய மூச்சில்

நாளும் பிழைத்த அவர்களே சொன்னார்கள்

செட்டித் தெருவில் விற்பதற்கான புல்லுக்

கட்டை ஊர்க்கோடி அல்லிக் குளத்தில்

புலைச்சிகள் இறக்கி அலசும் போது

அவர்களில் ஒருத்தி

உள்ளாடை யில்லாமல் பாவாடை அணிந்தவள் –

செல்லக் கொடியை முன் சக்கரத்தால்

தாழைப் புதர்ப்பக்கம் ஏற்றிக் கொண்டு போய்க்

கத்த விடாமல் பலர் முன்னிலையில்…

மார்கழிப் பனிபோல் மறதி படர்கிறது

புலைச்சிகள் வெள்ளிச் சிரிப்பை நீரில் தெளித்துப்

புல்லுக் கட்டை முன்போல் அலசுகிறார்கள் –

அவர்கள்

தொடையின் பிம்பம் புரளும் அலைகள்

அப்பால் படுத்த எருமையின் முதுகை மூழ்கடிக்க.

அல்லிக் குளத்தின் தவளைகள்கூட

மறந்துவிட்டன செல்லத்தின் இளங்கால் வரவுகள்

லாறிக்குப் பாட்டரி புதிதாய்ச் சேர்ந்தது

ஆயுத பூஜையின் சந்தன குங்கும

வாழை மரங்களின் அலங்காரம் கொண்டு

சிறுவர்கள் துரத்த ஓடுகிறது லாறி

அல்லிக்குளத்தில் வீச்சம் என்றாவது

எழும்போது நான்தான் நினைக்கிறேன்

செல்லக் கொடியை. அதென்ன வீச்சம்?

ஆனால் நானும் சும்மா இருக்கிறேன்

அன்னிய மொழியில் லாறியின்

இடைவிடாத அதட்டலை அஞ்சி.

தண்ணீர்த் தொட்டி மீன்கள்

இந்தக் கடலின்

எந்தக் குபேர மூலையிலும்

கிடைக்காத புழுக்கள்

வேளை தவறாமல்

தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்

புயல்களும் இல்லை.

திமிங்கிலங்களை

அவதாரக் கடவுள்

காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்

ஒன்று மட்டும்

புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்

அஃதென்ன இடையில்?

அப்புறம் ஒன்று

எங்கே எங்கள்

முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

ஐந்து கவிதைகள்

1

என் வீட்டுச் சுவரில் எவரோ எழுதிய

இரட்டை இலைமேல் கம்பளி பூச்சி

2

அரசியல் வாதிதான் பாரத ரத்னம்

மற்றவரெல்லாம் டீக்கடை ரத்னம்

3

நிறைய பலாப்பழம் போகிற தென்றான்

சிறுவன் ஒருவன். திரும்பிப் பார்த்தேன்

போய்க் கொண்டிருந்தது கூச்சலிடாத

மோடா வியாபரி

4

தட்டான் பூச்சிகள்

தோட்டத்தில் சுற்றக் கண்டு

கிட்டாத இன்பம்

கிட்டிய தென்ன – கண்ணபெருமானே.

5

பச்சைத் தழையுடன் நின்றிருந்த

மரத்தில் காற்று புகுந்தது.

எண்ணி எண்ணி துறக்கிறாற் போல

விளையாடி விழுந்தன பழுப்பிலைகள்.

விழுந்த இலைகளில் இன்னமும் பசுமை

குன்றாதவை இருந்தது கண்டேன். அவ்விலைகள்

மரத்தில் மேலும் சில நாள் இருந்திருக்கலாம் என

நினைத்தேன். விழுந்தன அவ்வகை இலைகள்

ஆனால் நான்யார் அதைக்கூற?

மரமே அறியும் இலைகளில் எவ்வெவ்

இலைகளை உதிர்க்கலாம் அன்றைக் கென்று.

நிர்மலம்

வருகிறான் அவன் யார்?

சவரத் தகடா? புதிய பல்பொடியா?

இன்னதென்று

நினைவில் இல்லை. என்னிடம் விற்க

முயன்று, வாங்கப்

படாமல் திரும்பிப் போகிறான் அவன் யார்?

போகும் திசையில்

நிற்கறான் நடக்கிறான் தயங்கிப் போகிறான்

கண்ணுக்குக்கீழ்

தலைப்பில் குத்திய ஐம்பது காசுப்

பேருந்துச் சீட்டுப் போல

என்னவோ சுருக்கம் பார்வையைக் கவரும்.

இடது கையில் ஏதோ

பெட்டியைச் சுமப்பது போன்ற பாவனை.

நிற்கிறான் நடக்கிறான்

பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்

வேங்கட ரங்கம்

பிள்ளைத் தெருவின்

வால்போல் நீண்ட

சந்து முனையில் நின்று கொண்டு

எவளோ ஒருத்தி

பகிரங்கமாக்கிக் குளிக்கத் தொடங்கினான்.

பனம்பழங்கள் இரண்டு

என்மேல் வீழ

விழித்துக் கொண்டேன் எழுப்பினாற் போல.

விழித்துக் கொண்டு

தெருவைப் பார்த்தேன்

வெறிச் சென்றிருந்தது எங்கும்

இந்தக் கனாக்கள்

தெருவில் எங்கும் காணப்படாமல்.

திருப்தி

சஞ்சிகையைப் பிரித்தான். அங்கே

முப்பதாம் பக்கத்தைப் பார்த்தான்.

இரண்டு வரிகளில் ஒருகவிதை.

அதற்குக் கீழே இருந்த பெயரைப்

படித்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது.

கவிதை

எல்லோரும் நல்லவரே

அவரவர் நாட்டில் அவரவர் வாழ்ந்திருந்தால்

இரண்டு வார்த்தை ஆசிரியர்க்கு

எழுதிப் போடணும் ஆனால்

ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால்

நன்றாய் இருக்காது. தெரிந்து விடும்

எனவே எழுதினான்.

சென்ற இதழில் கொய்ராலா

படத்தைப் போட்டு அசத்திவிட்டீர்

வாசுவின் எழுத்தில் முதிர்ச்சி கண்டேன்.

இறைச்சி கவுச்சி ஓரினப்புணர்ச்சி

பற்றிய கட்டுரை மொழிக்குப் புதிது.

கதைகளில் மாவு தோசை படித்ததும்

நாக்கில் எச்சில் ஊறிற்று

நல்ல கவிதைகள் கிடைக்கவில்லையா?

உயர் மாகடல் உற்றொரு

சென்னை நகரத்தைச் சுற்றிப் பார்க்க

வந்தவன் போலிருந்தான்

கட்டியிருந்த வேட்டியை முழங்கால் வரைக்கும்

உயர்த்தியிருந்தான்

சாதாரணமான ஒரு சட்டை

ஒரு விலங்கின் வயிற்றை நினைவூட்டி

அவன் தோளில் தொங்கியது ஒரு பை

கடலைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம்

எதிரில் வந்தாரை எல்லாம் வழிகேட்டு

கடல் வந்தடைந்த சந்தோஷம்

கடலை நோக்கி அவன் பாடினான்

ஒரு ஊரின் அருமை பெருமை பற்றி

கடலிடம் சொல்லிக் கொள்ளும் ஒரு பாட்டு

கடலை நோக்கிக் கையைச் சுட்டியும்

உயர்த்தியும் அஞ்சலி செய்தும் பாடினான்

அவன் பிடிக்க வேண்டிய ரயில் வண்டி

நள்ளிரவில் தான் புறப்படும் போல

அப்படியானால் மதியச் சாப்பாட்டை

பக்கத்தில் எங்காவது முடித்துக் கொண்டு

மாலையும் கடலைப் பார்க்க அவன் வரலாம்

அப்போது கடல் மேல் நிலவு தோன்றலாம்

அவனும் பாடலாம் அதே பாடலை அல்லது

மற்றொன்றை, அல்லது சும்மா நிற்கலாம்

இப்போது அவன் சும்மா நிற்கிறான்

என்ன சொன்னதோ அவனிடம் கடல்

சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு

மருத்துவ மனையில் படுத்திருந்தான்

தலையில் கட்டுடன்.

நர்ஸ் வந்தாள்;

ஊசி போட்டாள். நான்கைந்து

மாத்திரைகள் தந்தாள். போனாள்

வழக்கம் போல அன்றும்

அந்தக் கதவை அவன் பார்த்தான்.

அடுத்த நிமிஷம் அந்தக் கதவு

விழுந்தே விட்டது அவன் மேல்.

அந்தத் தெருவில் அவ்வீட்டைக்

கடந்து சென்ற ஒவ்வொரு நாளும்

அவன் அதைப் பார்த்தான்.

மேலே இரண்டு

கீழே இரண்டென்று

நான்கு கதவுகள் கொண்ட

மாடிப் பக்கத்து ஜன்னல்

பச்சை வண்ணம் பூசப்பட்ட

சதுர ஜன்னல்.

ஜன்னல்களில் ஒன்று

கழன்று விழப் போவது போல

அபாயகர மாகத் தொங்கியது

என்றாவது ஒருநாள்

எங்கேனும் சற்று

உட்கார்ந்து போகும் பழக்கமுள்ள

பறவை ஒன்றின்கால் பட்டால் போதும்

ஜன்னல் கதவு தெருவில்

நடப்பவர் மேல் விழுந்துவிடும்

அந்தக் கதவு அவன் மேல்

விழுந்தே விட்டது.

அத்தனைக் காலம் காத்திருந்து

தன் தலை மேல் அந்தக் கதவு

விழுவானேன் எனஅறு யோசித்தான்

அப்போது அசரீரி சொல்லிற்று:

‘அந்தக் கதவைப் பார்க்கும் போதெல்லாம்

விழும் விழும் என்று நீதான்

எதிர்பார்த்தாய். பலித்தே விட்டது, போ.’

நம்மை அது தப்பாதோ?

1

ஓர் ஏழையின் சிரிப்பில்

அவனது அப்பாவைப் பார்த்தேன்

அவரும் ஓர் ஏழைதான்

அவரது சிரிப்பில்

அவரது மனைவியைப் பார்த்தேன்

அவளும் ஓர் ஏழைதான்.

அம்மா அப்பா பிள்ளை

மூன்று பேரும்

தனித்தனி யாக

நாடு நாடாகப்

பாசி மணிகளும் கருமணிகளும்

ஊசிகளும் விற்றார்கள்.

மான் கொம்பும்

புலிப் பல்லும் விற்றார்கள்

எருமைக் கொம்பில் செய்த

சின்னப் பல் பெரிய பல்

சீப்புகளும் விற்றார்கள்

நிறைய சம்பாதித்து

நாடு திரும்பினாள் அம்மா

அவளைப் பார்த்து சிரித்தார் அப்பா

அவரைப் பலநாள் கழித்துப் பார்த்ததால்

வெட்கப்பட்டாள் அம்மா

ஆனால் சிரித்தாள்.

தேசம் முழுதும் திரிந்தவள்தான். ஆனால்

அப்பா அவளை சந்தேகிக்கவில்லை.

தேசம் முழுதும் திரிந்தவர்தான். ஆனால்

அம்மா அவரை சந்தேகிக்கவில்லை.

பழைய மகாபலிபுரம் சாலையில்

வருகிற போகிற கார்கள் நிற்கும்போது

பாசிமணி விற்கிறாள் ஒரு பெண்.

கார் துடைக்கும் மஞ்சள் துணியைக் காட்டி

வாங்கிக்கொள்ள வேண்டுகிறாள்.

காரில் இருப்பவன் சிரித்துச் சொல்கிறான்

‘அழகாய் இருக்கிறாய் நீ’ என்று.

முகத்தைத் திருப்பிக்கொண்டு

போகிறாள் அந்தப் பெண்.

யாரைப் பார்த்தும்

அவன் சிரிக்கவில்லை.

அப்படி ஒருவேளை சிரித்திருந்தால்

அந்தச் சிரிப்பில்

தெரியப் போவது

யாராக இருக்கும் சொல்லுங்கள்.

2

என்னிடம் நீ சொன்ன ஒவ்வொரு

கெட்ட வார்த்தைக்கும் உனக்குத்

தண்டனை ஒன்று காத்திருக்கிறது.

தொலைபேசியில் சொன்ன வார்த்தைக்கு

ஒருவிதமாகவும் எனது

பாதையை மறந்து

நேரில் சொன்ன வார்த்தைக்கு

ஒருவிதமாகவும்

தண்டனை ஒன்று காத்திருக்கிறது

ஒரு பொருளை என் மீது

வீசி எறிந்தாயே அதற்கும்

கடக்கும் போதில் இடித்தாயே அதற்கும்

தண்டனை ஒன்று காத்திருக்கிறது.

எல்லோருக்கும் தெரிய வேண்டாம் என்று

இப்போது நிறுத்திக்கொள்கிறேன்.

நெடிது வளர்ந்த ஒரு மரத்தின் பின்னால்

கையிலே விளைந்த வில்லும் கம்புமாய்

கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது ஒரு தெய்வம்

நீ உனது இரண்டு சக்கர

வண்டியின் பெடலை

உதைக்கிறாய், உதைக்கிறாய், உதைக்கிறாய்.

3

பைகிராப்ட்ஸ் சாலையில் இன்று

வியாபாரம் மந்தம்

தேநீர்க் கடையிலும் கூட்டம் மந்தம்.

கோடம்பாக்கத்தின், ஜீன்ஸ் பழகாத

உதவி இயக்குநர் ஒருவர்

மேசை மேல் காசை வைக்கிறார்

தேநீர்க் கடை முதலாளியின்

தலைக்கு மேல் இருக்கும்

தும்பிக்கையானைக் கும்பிட்டார்

பார்த்தசாரதி கோயில் பக்கம்

நகர்கிறார் – ஒரு வாய்ப்பு பலிப்பதற்காக.

நடைபாதைத் துணிக் கடையில்

முகத்திரையை முதுகுப் பக்கம் தள்ளிக்கொண்ட

முஸ்லீம் பெண்ணொருத்தி

பேரத்துக் கிடையில் சிரிக்கிறாள்.

பழைய புத்தகத் தடையில்

படுத்துக் கிடக்கும் புத்தகக் கூட்டத்தில்

ரூபன் தாரியோ கவிதைத் தொகுப்பு

கிடைத்த சந்தோஷத்தில்

அம்பத்தூர்ப் பேருந்தின் படியேறி

கையசைத்தார் நண்பர் கவிஞர்

பாதையோரம் நின்றிருந்த நான்

உனக்கு எழுதப் போகும் கடிதத்தின்

உள்ளடக்கம் பற்றி யோசிக்கிறேன்

நின்றிருக்கும் யாரையாவது ஒருவரைத்

தொட்டுவிட்டு ஓடும்

அந்தப் பைத்தியக்காரன்

இன்றைக்குத் தொட்டுப் போனது என்னை.

4

சொன்னதைத் தாமதமாய்த்

திருப்பிச் சொல்கிறது

உனது குன்றம்

என்ற பாடலை

வீணையில் இசைத்தாள் ஞானாட்சரி

அப்புறம் நான்

நெடுநேரம்

சிரித்துக்கொண்டிருந்தேன்.

Share with your friends !
Exit mobile version