மறக்கப்பட்ட தியாகி : அஞ்சலை அம்மாள் – ஜெயிலில் பிறந்த ஜெயவீரன் : ராஜா வாசுதேவன்

சுதந்திர போராட்டத் தியாகிகள் யார் என வளரும் தலைமுறைகளிடம் கேட்டால் காந்தி என ஆரம்பித்து பிரபல்யமான சில பெயர்களை சொல்லுவார்கள். அதில் நிச்சயமாக கடலூர் அஞ்சலை அம்மாள் என்ற பெயர் இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் அவரைப்பற்றிய பெரிய அளவிலான பதிவுகளோ புத்தகங்களோ எங்கும் இல்லை என்பது தான்.

அந்தக்குறையை போக்குவதற்கு ஊடகத்துறையில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திரு ராஜா வாசுதேவன் பெரும் முயற்சி எடுத்து கடலூர் அஞ்சலை அம்மாள் என்கிற மிக முக்கியமான சுதந்திரபோராட்ட வீராங்கனையின் வரலாற்றை நாவல் வடிவில் தந்திருக்கிறார்.

புத்தகம் : ஜெயிலில் பிறந்த ஜெயவீரன்

எழுத்தாளர் : ராஜா வாசுதேவன்

பதிப்பகம் : தழல்
பக்கம் : 320
விலை : ரூ 300

கடலூர் அஞ்சலை அம்மாள் குறித்த சில விசயங்கள்

அஞ்சலை அம்மாள் 1890 இல் பிறந்தவர். 1921ஆம் ஆண்டில் தனது 31வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். சென்னையில் கர்னல் நீல் என்பவனின் சிலையொன்று இருந்தது. இந்த நீல் முதல் சுதந்திரப் போரின் போது இந்திய மக்களுக்கும், சிப்பாய்களுக்கும் இழைத்த கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொடுங்கோலனின் சிலை சென்னை நகரத்தில் இருப்பது அவமானம் என்று கருதி இந்தச் சிலையை நீக்க ஒரு போராட்டம் நடந்தது. ந.சோமையாஜுலு போன்ற பெரும் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

1927இல் முதன் முதலாக அஞ்சலை அம்மாள் இந்த நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்திலும், 1933இல் சட்டமறுப்பு மறியலிலும், 1940இல் தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1941லும், 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவர் வாழ்க்கை பெரும்பாலும் சிறைவாசத்திலேயே கழிந்தது எனலாம். ஊர் சுற்றி பார்க்க இவர் அலைந்திருக்கிறாறோ இல்லையோ, பல ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஊர்களில் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகியவை அடங்கும். இவர் கர்ப்பவதியாக இருந்த காலத்தில் சிறை சென்று, பேறு காலம் வந்தபோது சில நாட்கள் வெளியே விடப்பட்டு, பிரசவம் ஆனதும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

1929ஆம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில் இவர் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் முருகப்பா, இவரும் பலமுறை சிறை சென்ற தியாகி. கணவன் மனைவி இருவருமே சிறையில் இருந்தபோது, இவர்களது மகள் லீலாவதி என்ன பாடு பட்டிருப்பார். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலும் இவர் கடலூரிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகள் லீலாவதி ஒன்பது வயதாக இருக்கும்போதே நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வயதிலேயே நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்றார். இவரது தேசப்பணியைக் கண்டு மகிழ்ந்த மகாத்மா காந்தி இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று வார்தா ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார்.

சுதந்திரப் போராட்டங்களில் நமது மூதாதையர்கள் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டார்கள். அதற்கு மிகச்சரியான சான்று, அஞ்சலை அம்மா அவர்களின் குடும்பத்தை சொல்லலாம். அஞ்சலை அம்மாள் அவர்களைப்போல இந்த சமூகம் மறந்துவிட்ட பல போராட்ட நாயகர்கள் கதை இங்கே இருக்கவே செய்கிறது. ராஜா வாசுதேவன் அவர்களைப்போல பல எழுத்தாளர்கள் புறப்பட்டு அந்தக் கதைகளை மக்களுக்கு அளித்திட வேண்டும்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *