21 வயதில் வறுமையைக் கடந்து ஐஏஎஸ் ஆன அன்சார் ஷேக் வெற்றிக்கதை
நான் மூன்று பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. நான் ஒரு பின்தங்கிய வளர்ச்சியடையாத பகுதியைச் சேர்ந்தவன், நான் ஏழை பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவன் மற்றும் நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன். இவற்றை நான் நேரடியாக அனுபவித்தவன் என்பதனால் அதனைக் களைய நான் செய்திட வேண்டிய செயல்களை செய்வேன் – அன்சார்
ஒவ்வொரு வருடமும் UPSC தேர்வில் லட்சக்கணக்கான பேர் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் பலருக்கு கோச்சிங் செல்லும் வசதி, நிம்மதியாக படிக்கும் வாய்ப்பு என அனைத்தும் இருக்கும். ஆனால் அவர்களால் பெற முடியாத வெற்றியினை நிம்மதியாக சாப்பிடுவதற்கே வசதியில்லாத ஒரு குடும்ப பின்னனியில் இருந்து வரும் சிலர் பெறுகிறார்கள். அவர்களால் எப்படி அந்த வெற்றியினை பெற முடிந்தது என ஆராய்ந்தால் அதற்கு பின்னே இருக்கும் ஒரே காரணம் “கடின முயற்சி” என்பது மட்டும் தான்.
இந்தப்பதிவில், மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்த அன்சார் ஷேக் [Ansar Shaikh] எப்படி 21 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம். மிக இளம் வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அன்சார் ஷேக் என்பது குறி ப்பிடத்தக்கது. இவரது வெற்றிக்கதை பலரை ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.
யோனுஸ் ஷேக் அகமது என்பவர் மஹாராஷ்டிராவில் ஒரு ஆட்டோ டிரைவர். இவருக்கு மூன்று மனைவிகள். வேலைக்கு சென்றால் தான் சாப்பிட முடியும் என்கிற சூழலில் உள்ள குடும்பம். இவரது இரண்டாவது மனைவிக்கு இளைய மகனாக பிறந்தவர் தான் அன்சார் ஷேக். இளமையிலேயே வறுமையை உணர்ந்ததாலோ என்னவோ இவர் படிப்பில் மிகவும் சிறந்து விளங்கினார். பத்தாம் வகுப்பில் 91% மதிப்பெண் பெற்றார். அதற்குப் பின்னரும் கல்வியை தொடர்ந்த அன்சார் ஷேக் புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் பொலிடிகல் சயின்ஸ் பயின்றார். அதிலே 73% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
அதற்குப் பிறகு அவர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் UPSC தேர்வுக்காக படிக்க ஆரம்பித்தார். அவருக்கு வழிகாட்டியாக அவரது ஆசிரியர் ராகுல் பாண்ட்வே இருந்தார். 30 வயதான அவரும் அதே UPSC தேர்வில் தேர்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்சார் ஷேக்கின் சகோதரர் குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு இடையிலேயே படிப்பை விட்டுவிட்டு மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். குடும்பம் வறுமையில் இருந்தபோதும் அன்சார் ஷேக்கின் உறுதியை புரிந்துகொண்ட குடும்பத்தினர் அவர் தனியார் கோச்சிங் செண்டரில் பயிற்சி பெற உதவி செய்தனர். இதற்காக அவர்கள் பெரிய தியாகத்தை செய்திட வேண்டி இருந்தது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் 361 ஆவது ரேங்கில் தேர்ச்சி அடைந்தார். அவர் மேலும் ஒரு சாதனையை செய்திருந்தார். ஆமாம், இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி அடைந்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இந்த வெற்றி குறித்து அவர் பேசும்போது “நான் மூன்று பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. நான் ஒரு பின்தங்கிய வளர்ச்சியடையாத பகுதியைச் சேர்ந்தவன், நான் ஏழை பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவன் மற்றும் நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன். இவற்றை நான் நேரடியாக அனுபவித்தவன் என்பதனால் அதனைக் களைய நான் செய்திட வேண்டிய செயல்களை செய்வேன்” என கூறினார்.
கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் விடாமுயற்சி இவை மூன்றும் சரியான விகிதத்தில் கலந்திருந்தால் யார் வேண்டுமானாலும் IAS தேர்வில் தேர்ச்சி அடையலாம். அன்சார் ஷேக்கால் முடிந்தது உங்களாலும் முடியும், நீங்கள் முயற்சி செய்திட வேண்டும் அவ்வளவு தான்.
கடினமான சூழலில் IAS அதிகாரிகளாக ஆனவர்கள் வெற்றிக்கதையை இங்கே படிக்கலாம்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
Superb