Personal Finance இல் சிறந்து விளங்கி உங்கள் குடும்பத்தை உயர்த்துவது எப்படி?

 

பணம் எவ்வளவு சம்பாதிக்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமே அல்ல. நாம் சம்பாதிக்கும் பணத்தை எப்படி கையாளுகிறோம், எப்படி நிர்வகிக்கிறோம், எப்படி திட்டமிடுகிறோம் என்பது தான் முக்கியம். ஆங்கிலத்தில் இதனை Personal Finance என்று சொல்லுவார்கள். நன்றாக படித்த, மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்கும் பலர் கூட இன்று Personal Finance இல் போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் கூட பண நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார்கள். இதனை தவிர்க்க இங்கே 7 எளிய யோசனைகளை தந்துள்ளோம். அதனை உங்களது வாழ்க்கையில் செய்து பார்ப்பதன் மூலமாக சிறந்த முன்னேற்றத்தை உங்களால் எட்டிட முடியும்.



1. Personal Finance இன் அடிப்படைகளை தெரிந்துகொள்ளுங்கள்

 

நீங்கள் மிகப்பெரிய பொருளாதார நிபுணர் அளவிற்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், அடிப்படைகளை தெரிந்துகொள்வதன் மூலமாக உங்களால் மிகப்பெரிய மாற்றத்தை உங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திட முடியும். 

 

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம்? எவ்வளவு செலவு செய்கிறோம்? எதிர்காலத்தில் நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? அதற்காக நாம் இப்போதில் இருந்தே எவ்வளவு சேமிக்க வேண்டும்? எவற்றில் முதலீடு செய்தால் நாம் எளிதாக அந்த இலக்கை அடைய முடியும்? என்ற சில கேள்விக்கான அடிப்படை பதில்களை தெரிந்துகொண்டால் போதும்.

2. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நிதி நிர்வகிப்பு பற்றி விவாதிக்கவும்

 

பல குடும்பங்களில் முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களை இளையோர் அழித்து ஒன்றுமில்லாத நிலைக்கு கொண்டுவந்து விடுவார்கள். இதற்க்கு முக்கியக்காரணம், நமது இந்திய குடும்பங்களில் பலர் பணம் மற்றும் நிதி மேலாண்மை பற்றி விவாதிப்பதை தவிர்க்கிறார்கள். ஆனால் அங்கே தான் நாம் மிகப்பெரிய தவறை செய்கிறோம். பல குடும்பங்களில் யாரோ ஒருவர் தான் பணத்தின் மீதான உரிமை அனைத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறு. 

 

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பணம், முதலீடுகள் பற்றி விவாதியுங்கள். இதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே பணம் பற்றிய புரிதல் ஏற்படும். நீங்கள் இல்லாத சூழலிலும் நிதி மேலாண்மையை அவர்களால் மேற்கொள்ள முடியும். எதிர்காலத்திலும் உங்களது குடும்பம் செல்வாக்குள்ள குடும்பமாக செழித்து வளர அது வாய்ப்பாக அமையும்.



3. பெண்களை பங்கேற்க ஊக்குவிக்கவும்

 

 

பெண்களை நிதி பற்றிய விவாதங்களில் அதிகமாக பங்கேற்க செய்திட வேண்டியது மிகவும் அவசியம். குடும்பத்தை நிர்வகிப்பதில் பெரிய பொறுப்பு என்பது பெண்களுக்கே இருக்கிறது. ஆனால், பல குடும்பங்களில் பண விசயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. அது மிகப்பெரிய தவறு. பெண்களை நிதி பற்றிய முடிவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக சிறந்த பொருளாதார முடிவுகளை எடுக்க முடியும். 

4. முதலீடுகள் பற்றிய தகவல்களை முறையாக பராமரியுங்கள்

 

 

பல குடும்பங்களில் நடைபெறக்கூடிய மிகப்பெரிய சிக்கல் டாக்குமென்டுகளை முறையாக பராமரிக்காதது தான். உதாரணத்திற்கு பல குடும்பங்களில் LIC காட்டுவார்கள். அதிலே பெயர் தவறாக இருக்கும் அல்லது பல மாதங்கள் கட்டாமல் விட்டுவிடுவார்கள் அல்லது கட்டியதற்கான ரசீதை முறையாக வைத்துக்கொள்ள மாட்டார்கள். இறுதியாக பணத்தை எடுக்கும் போது பல சிக்கல்களை சந்திப்பார்கள். இதை நீங்கள் உங்களது வாழ்வில் செய்துவிடாதீர்கள். ஒரு ரூபாய் முதலீடு செய்தாலும் அது பற்றிய தகவலை முறையாக பராமரியுங்கள். 

5. கூட்டு வங்கிக்கணக்கு (Joint Bank Account) கூட்டு முதலீட்டுக்கணக்கு மிக முக்கியம்

 

ஒரு குடும்பத்தின் முக்கிய அங்கம் கணவன், மனைவி. இப்போது பல வங்கிகள் கூட்டு வங்கிக்கணக்கு வசதியை வழங்குகின்றன. அதேபோல பல முதலீட்டாளர்கள் கூட கூட்டு முதலீட்டுக்கணக்கு வசதியை வழங்குகின்றன. ஆனால் பலர் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை. இந்த வசதிகளை பயன்படுத்தும்போது ஏதோ ஒரு சூழலில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் கூட பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

6. இன்சூரன்ஸ் எடுப்பதில் அதிக கவனம் தேவை

 

நடுத்தர குடும்பங்களில் இன்சூரன்ஸ் எடுப்பது இப்போது அதிகமாகி இருக்கிறது. இது வரவேற்பிற்கு உரிய விசயம் தான். ஆனால், அந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும் போது அது குறித்த தெளிவு பலருக்கு இல்லாத காரணத்தால் அந்த பாலிசிகளுக்கான தேவை ஏற்படும் போது அதனால் பலன் இல்லாமல் போய்விடும் ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. ஆகவே, இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்கும் போது உங்களுக்கு எந்த சூழலுக்கு வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு எடுங்கள். யாரோ சொல்கிறார்கள் என்று எடுக்காமல் நீங்கள் எடுத்திருக்கும் பாலிசி குறித்த தெளிவை கொண்டிருங்கள்.

7. இளமையிலேயே முதலீடு செய்திடுங்கள்

 

பல வெற்றியாளர்களின் முக்கிய மந்திரமே இளமையில் முதலீடு செய்வது தான். 40 வயதிற்கு பிறகு தான் சேமிப்பின் அக்கறையே பலருக்கு ஏற்படுகிறது. ஆனால் அந்த வயதில் தான் நமக்கு செலவினங்கள் அதிகமாக ஏற்படும். ஆனால் இளம் வயதில் சேமிப்பதும் முதலீடு செய்வதும் தான் மிகவும் எளிது. ஆகவே, உங்களது சிறுவயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். இதனை உங்களது குடும்பத்தில் உள்ள இளையோரிடம் பேசுங்கள். அவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உரையாடல்கள் மூலமாக புரிய செய்திடுங்கள்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *