உங்களுக்கு மகள் இருக்கிறாரா? இந்தத்திரைப்படம் பாருங்கள் | குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்

சமையல் செய்வதற்கும் குழந்தைகள் பெற்றுக்கொடுப்பதற்கும் மட்டுமே பெண் என பெரும்பாலானோர் நினைத்திருந்த காலகட்டத்தில் விமானத்தை ஓட்டியே தீர வேண்டும் என ஒரு குழந்தை ஆசைப்படுகிறது. விடாமுயற்சியும் தந்தையின் ஆதரவும் கனவு நிறைவேறிட காரணமாக அமைகிறது.

போர் நடக்கும் பகுதிக்குள் முதலில் ஹெலிகாப்டரை இயக்கிய முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு கரண் ஜோகர் தயரித்துள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு பெரிய ஆதரவை பெற்றுவருகிறது. இந்தத்திரைப்படத்தின் சாராம்சம் இதுதான். சிறு வயது முதலே விமானத்தை இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறாள் ஒரு பெண் குழந்தை. ஆனால் அம்மா,சகோதரன், சமூகம் என பல தடைகளைத்தாண்டி இந்திய விமானப்படையில் சேருகிறார். பெண் குழந்தையென்றும் பாராமல் அவளது கனவுகளுக்கு மதிப்பளித்து ஒவ்வொரு தருணத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுகிறார் குஞ்சன் சக்ஸேனாவின் அப்பா. 

யார் இந்த குஞ்சன் சக்ஸேனா? Kargil Girl Gunjan Saxena Biography in tamil

தற்போது 44 வயதாகும் குஞ்சன் சக்ஸேனா 1975 ஆம் ஆண்டு ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக பிறந்தார். இவருடன் பிறந்த இவரது சகோதரனும் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருக்கும் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்த இவர் Safdarjung Flying Club இல் சேர்ந்து விமானம் இயக்குவதில் ஆரம்ப கட்ட பயிற்சிகளை முடித்தார்.

முதன் முதலாக இந்திய விமானப்படைக்கு உருவாக்கப்பட்ட பெண்கள் குழுவில் குஞ்சன் சக்ஸேனா இடம் பெற்று இருந்தார். இவருடன் 25 பெண்களும் அந்த குழுவில் பயிற்ச்சி பெறுவதற்காக இருந்தனர். சிறப்பாக பயிற்சி பெற்ற குஞ்சன் சக்ஸேனா பணிக்காக ஜம்மு காஷ்மீரில் இருக்கும் உதம்பூரில் அனுப்பப்பட்டார். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான கார்கில் போரில் பங்கேற்கும் வாய்ப்பு குஞ்சன் சக்ஸேனா மற்றும் அவருடன் பயிற்சி பெற்ற ஸ்ரீதிவ்யா ராஜன் ஆகிய இருவருக்கும் கிடைத்தது.

அங்கே குஞ்சன் சக்ஸேனா போர்க்களத்தில் காயம்படும் அல்லது ஆபத்தான சூழலில் மாட்டிக்கொள்ளும் ராணுவ வீரர்களை மீட்கும் அணியில் இடம் பெற்று இருந்தார். கூடுதலாக இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறியும் பொறுப்பும் இருந்தது. மிகவும் ஆபத்தான சூழலில் காயம்பட்டுவிட்ட இந்திய வீரர்களை மீட்பதற்காக குஞ்சன் சக்ஸேனா ஹெலிகாப்டரில் சென்றார்.

அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளும் ஏவுகணைகளும் தங்களை தாக்கியதாக குறிப்பிடுகிறார். பெண்களின் உடல் வலிமை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெண்களை போர் பகுதிக்கு அனுப்புவதை இந்திய ராணுவம் பெரிதாக விரும்பாத சூழ்நிலை அது. ஆனாலும் விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு அதிக தேவை இருந்தபடியால் திறமையான பெண் விமானிகளும் பயன்படுத்தப்பட்டனர்.

முதல் முறையாக போர்ப்பகுதிக்கு சென்ற முதல் பெண் விமானி குஞ்சன் சக்ஸேனா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது செயலை பாராட்டி இந்திய அரசு சௌரிய சக்ரா விருது வழங்கியது. இவ்விருதை வாங்கிய முதல் பெண்மணியும் இவரே. குஞ்சன் சக்ஸேனா கார்கில் பெண் [Kargil Girl] என அழைக்கப்படுகிறார். 

ஒரு நல்ல அப்பாவாக இருந்திடுங்கள்

திரைப்படத்தில் வரும் காட்சிகள் நிகழ்காலத்தில் நடந்தவையோடு சற்று வேறுபட்டு இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அப்பாக்கள் நினைத்தால் மகள்களின் கனவுகளை நனவாக்கிட முடியும். இந்த சமூகம் எதிர்த்து நின்றாலும் அப்பா கொடுக்கிற ஆதரவும் அரவணைப்பும் மகள்களை சிகரத்தை நோக்கி பயணிக்க வைக்கும்.

திரைப்படங்கள் பொழுதுபோக்குக்காக என்பது பழைய பழமொழி. சில திரைப்படங்கள் பலரின் வாழ்வையே மாற்றிப்போடும் சக்தி வாய்ந்தவை. அந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தையும், பெண் குழந்தையை பெற்ற அப்பாக்களும் ஒரு தடவையேனும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. ராக்கர்ஸ் நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவார். பார்த்துவிடுங்கள்.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *