6 ஜெயமோகன் சிறந்த புத்தகங்கள் | 6 Jeyamohan Best Books
தமிழ் வாசகர்கள் தவறவிட முடியாத ஒரு சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன். இவர் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. ஜெயமோகன் அவர்கள் பல நாவல்கள், கட்டுரைகள், கதைகள் எழுதி இருக்கிறார். அவற்றில் சிலவற்றை உங்களுக்கு இங்கே அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருடைய புத்தகங்களை நீங்கள் வாங்கி படிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். வாங்கிப்படிக்க இயலாதவர்களுக்கும் அவரது எழுத்துக்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காக சில புத்தகங்களின் PDF இணைக்கப்பட்டுள்ளது.
1. அறம்: உண்மை மனிதர்களின் கதைகள்
நாம் வசிக்கும் இதே சமூகத்தில் வாழ்ந்த பல மனிதர்கள் அறத்தை தங்கள் உயிர்போல பின்பற்றி வந்துள்ளார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 12 கதைகள் நமக்கு விளக்குகின்றன. குறிப்பாக, யானை டாக்டர், அறம் போன்ற கதைகள் நம் மனதில் பெரிய மாற்றத்தை விதைக்கும் வல்லமை கொண்ட கதைகள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களின் வரிசையில் இந்தப் புத்தகத்தையும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. உப்புவேலி
வரலாற்று நிகழ்வுகள் குறித்து படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம் இது. 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி உப்புக்கு வரி விதித்தது. இந்தியாவின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு உப்பு பரிமாற்றம் நடக்க கூடாது என்பதற்காக இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது போல ஒரு வேலியை அவர்கள் போட்டார்கள். பல வரலாற்று புத்தகங்களில் இந்த வேலி பற்றிய குறிப்பே இல்லை. வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம் இந்த வேலி குறித்து அறிந்து அதனை ஆவணப்படுத்தினார். இந்தப்புத்தகம் உப்பின் மகத்துவத்தை அறியவும் அந்நியர்களின் கொடுமையை அறியவும் உதவுகிறது.
3. பின்தொடரும் நிழலின் குரல்
1991 தமிழகச் சிந்தனையில் சில நெருக்கடிகள் உருவான ஆண்டு. அவ்வாண்டு சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ச்சியடைந்தது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். தொடர்ச்சியாக இலங்கை உள்நாட்டுப்போரில் சகோதரக்கொலைகள் குறித்த செய்திகள் வெளிவந்தன.வன்முறை சார்ந்த புரட்சியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த சிந்தனையாளர்கள் பலர் ஆழ்ந்த உளச்சோர்வை அடைந்தனர். அது தொடர்ந்து தமிழக அரசியல் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அரசியல் சார்ந்து செயல்பட்ட பலர் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாக மாறினர். பண்பாட்டரசியல் பற்றிய கேள்விகள் உருவாயின. 1991ல் கருக்கொண்டு 1997ல் எழுதி முடிக்கப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் அந்த சிந்தனைக் கொந்தளிப்புகளை புனைவில் விரித்தெடுக்கிறது. கருத்தியலின் வன்முறையைப் பேசும் நாவல் இது. ஒரு கருத்தியலை நம்பி அதை தன் இலட்சியவாதமாகக் கொள்பவன் எப்படி அதனால் முழுமையாக அடிமைப்படுத்தப்படுகிறான் என்றும், எந்த அறத்தையும் மீறி எதையும் செய்பவனாக அவன் எப்படி ஆகிறான் என்பதையும் ஆராய்கிறது. கருத்தியலுக்கு அப்பாலுள்ள அழிவற்ற இலட்சியக் கனவுகள் என்ன என்று பார்க்கிறது. தமிழின் அரசியல்நாவல்களில் முதன்மையானது என விமர்சகர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்ட இப்படைப்பு பல்வேறு உச்சகட்ட புனைவுத்தருணங்கள் வழியாக ஓரு தீவிர வாசிப்பனுபவத்தை அளிப்பது.
4. வெள்ளை யானை
மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.
5. பனி மனிதன்
இது குழந்தைகள் வாசிக்க வேண்டிய நாவல். இந்த நாவல் குறித்து ஜெயமோகன் கூறியது, இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும். இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவம், ஆன்மிகம், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.
6. உரையாடும் காந்தி
ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் மஹாத்மா காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில் ஒன்று காந்தி. காந்தி இடைவிடாது உரையாடிக்கொண்டே இருந்தார். பல்வேறு தளங்களில் பலதரப்பட்டவர்களுடன். அந்த உரையாடல் வழியாக அவர் கற்பித்தார், கற்றுக்கொள்ளவும் செய்தார். இந்த இரண்டாவது அம்சம்தான் விந்தையானது. மார்க்சியம் பற்றி பியாரிலாலுக்கும் காந்திக்கும் இடையிலான உரையாடலை வாசித்தபோது எண்ணிக்கொண்டேன், காந்தி இவ்வகையில்தான் கற்றுக்கொள்ள முடியும் என. அவர் வாசகர் அல்ல, ஆனால் பேரறிஞர். காந்தியின் காதுகள் மிகப்பெரியவை, அவை கேட்கும் வல்லமை மிக்க யானையின் காதுகள். ஜே.சி.குமரப்பா முதல் வெரியர் எல்வின் வரை அவருடைய அத்தனை மாணவர்களும் அவருக்குக் கற்பித்தவர்களும்கூட. காந்தியைப்பற்றி அறிவதற்கும் உகந்த முறை உரையாடுவதுதான். காந்தியை தன் கைகளால் விவசாயம் செய்யும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஓர் அரசியல்நிலைபாட்டாளர் புரிந்துகொள்ள முடியாது வெவ்வேறு தளங்களில் காந்திபற்றிய உரையாடல்களை நான் நிகழ்த்தினேன். உரைகள், கேள்விபதில்கள், குறிப்புகள் என. அவற்றின் தொகுதி இது காந்திக்குச் செல்லும் பாதையை இந்நூல் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.