பெகாசஸ் ‘வாட்டர்கேட்’ ஊழலுக்கு நிகரானதா? வாட்டர்கேட் ஊழல் என்றால் என்ன?
ஜனநாயகம் பல தூண்களால் ஆனது. அதில் ஏதேனும் ஒரு தூண் தன் பலத்தை இழக்கும் போதோ அல்லது தவறான முறையில் தன் பலத்தை செயல்படுத்தும் போதோ அதனை மற்ற தூண்கள் தடுக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அதற்கு மிகச் சிறந்ததோர் உதாரணம் தான் அமெரிக்காவில் நடந்த வாட்டர்கேட் ஊழல்.
இந்தியாவில் தற்போது பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள் என பலரது பெயர்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. முக்கிய பத்திரிக்கைகள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட்டு வருகின்றன. பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து அறிந்துகொள்ள பின்வரும் வீடியோவை பாருங்கள். மேற்கு வங்க முதல்வர் பெகாஸஸ் ஒட்டுகேட்பை வாட்டர்கேட் ஊழலை விடவும் மோசமானது என விமர்சித்து உள்ளார். பாஜகவில் இருக்கும் சுப்பிரமணியன் சாமி ‘மத்திய அரசு யார் இந்த செயலை செய்தது என மக்களுக்கு தெரிவிக்காவிடில் பாஜகவிற்கு இதுவொரு வாட்டர் கேட் பிரச்சனையாக வந்து சேரும்’ என எச்சரித்து உள்ளார். பெகாசஸ் ஒட்டுக்கேட்பை வாட்டர்கேட் ஊழலுடன் ஒப்பிடுகிறார்களே அதென்ன ‘வாட்டர்கேட்’ ஊழல்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அவர்களுக்காக இந்தப்பதிவு.
https://youtu.be/NzvURD87Sys
இந்தியா போன்றதொரு மாபெரும் ஜனநாயக நாடு தான் அமெரிக்கா. அமெரிக்காவில் தனி மனித சுதந்திரம் உள்ளிட்ட விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற பொதுப்பார்வையும் உண்டு. ஆனால் அதிகாரத்தின் உச்சியிலே அமர்கிறவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் அங்கே அனைத்தும் படு குழியில் ஆழ புதைக்கப்பட்டுவிடும் என்பதற்கு வாட்டர்கேட் விவகாரம் பெரிய உதாரணம். ஊழலுக்கு மட்டுமே வாட்டர்கேட் பெரிய உதாரணம் அல்ல. நாம் மேலே குறிப்பிட்டது போல, தவறை யார் செய்திருந்தாலும் அது தவறு தான் என்று தயங்காமல் சட்டத்தை காப்பற்றுகிற பொறுப்பை ஊடகவியலாளர்கள், நேர்மையான அதிகாரிகள் துணிந்து எடுக்கும் போது அங்கே ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது. அதற்கு சிறந்த உதாரணம், வாட்டர்கேட் விவகாரம்.
வாட்டர்கேட் ஊழல்
அமெரிக்காவில் குடியரசுக்கட்சியை சேர்ந்த ரிச்சர்ட் நிக்சன் 1969 இல் அதிபராக பொறுப்பேற்றார். அப்போதே அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுக்கொண்டுதான் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் நிராகரித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஜனநாயகக் கட்சியினர் செயல்பட்டு வந்த வாட்டர்கேட் என்ற வளாகத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நுழைந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது சாதாரண திருட்டு வழக்காக இருக்கும் என கருதிய காவல்துறையினருக்கு அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களில் ஒருவர் சி.ஐ.ஏ, மற்றொருவர் GOP இன் பாதுகாப்பு காவலர் என தெரியவந்தது. அப்போது தான் இதற்கும் அப்போதைய அதிபர் நிக்சனுக்கும் தொடர்பு இருக்கும் என தெரியவந்தது. காவல்துறையினர் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் என அனைவரும் இந்த விவகாரத்தில் பெரிய அக்கறை எடுத்து செயல்பட்டார்கள்.
இறுதியாக இந்த வழக்கில் ஒரு விசயம் மட்டும் ஊர்ஜிதம் ஆனது. குடியரசுக்கட்சியை சேர்ந்த நிக்சன், எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினரின் அரசியல் செயல்பாடுகளை கண்காணிக்க [தகவல்களை திருட] ஒட்டுக்கேட்பு கருவிகளை வாட்டர்கேட் அலுவலகத்தில் வைக்கவே அனுப்பினார் என தெரியவந்தது.
எதிர்க்கட்சிகள் நிக்சன் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினார்கள். நிக்சன் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஊடகத்துறை, புலனாய்வுத்துறை, காவல்துறை என அனைவரும் நேர்மையாக செயல்பட்டார்கள். இதனை விசாரித்த காங்கிரஸ் கமிட்டியோ விசாரணையின் முடிவில் அவரை பதவிநீக்கம் செய்திடும் முடிவுக்கு வந்திருந்தது. பல்வேறு இடங்களில் இருந்தும் அழுத்தங்கள் வரவே ‘தானே பதவி விலகும் முடிவுக்கு வந்தார் நிக்சன்’. அமெரிக்க வரலாற்றில் அதிபர் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டு அதனால் இடையிலேயே பதவி விலகியது அதுவே முதல்முறை.
அதனால் தான் இன்றளவும் கூட மிகப்பெரிய ஊழல்களை குறிப்பிடும் போது ‘கேட்’ என்பதை சேர்த்தே உச்சரிக்கிறார்கள்.
பெகாசஸ் : உண்மை வெளிவர வேண்டும்
பெகாஸஸ் ஒட்டுக் கேட்பு என்பது தனிமனித சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நிகழ்த்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய அநீதி. இதனை அரசின் அமைப்பு செய்திருந்தால், அதற்கு முறையான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். எதன் அடிப்படையில் நபர்களை தெரிவு செய்தார்கள், யார் உத்தரவின் பேரில் இது நிகழ்ந்தது என மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். இனிமேல் இப்படியொரு விசயம் நடைபெறாமல் இருக்க செய்திட வேண்டிய சட்ட திருத்தங்களையும் செய்திட வேண்டும். தனியார் அமைப்புகள் செய்திருந்தால் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
உண்மை வெளிவருமா?
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!