“தமிழக அரசியல் வரலாறு” – தமிழக அரசியல் வரலாற்றை துவக்கம் முதல் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் – முத்துக்குமார்

இன்றைய தலைமுறை தமிழ்நாட்டின் அரசியலை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளது. அப்படி சுதந்திரத்திற்கு பிறகு துவங்கி 2000 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசியல் களத்தை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் படிக்க வேண்டிய முக்கிய புத்தகமாக தமிழக அரசியல் வரலாறு பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு இருக்கும். இந்த புத்தகத்தை எழுதியவர் ஆர். முத்துக்குமார்.


ஆர். முத்துக்குமார் அவர்கள் “தமிழக அரசியல் வரலாறு” என்ற புத்தகத்தை இரண்டு பாகங்களாக எழுதி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாறு முதல் பாகத்தில் சுதந்திரம் பெற்றது முதல் எமர்ஜென்சி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசியல் வரலாறு இரண்டாம் பாகத்தில் எம்ஜிஆர் ஆட்சி முதல் 2000 ஆம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தை வாசித்த பலரும், இந்தப் புத்தகம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசியல் நிகழ்வுகளை பாரபட்சமின்றி நூலின் ஆசிரியர் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1


சுதந்திரத்திற்கு பிறகான 30 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் இந்த பாகத்தில் உள்ளன. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக தேர்வு, இந்தித் திணிப்பு பிரச்சனை, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவதற்கான முதல் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம், பிஎஸ் குமாரசாமி ராஜா முதல்வரானது, காமராஜரின் அழைப்பின்பேரில் 1952 ல் நடந்த முதல் தேர்தலில் ராஜாஜி தேர்தலில் பங்கேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றல், திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிரிதல், குலக்கல்வி திட்டத்திற்கான எதிரொலியால் ராஜாஜி பதவி விலகல், புதிய முதலமைச்சராக காமராஜர் ஆதல், காமராஜருக்கு பெரியார் தந்த ஆதரவு, மாநிலங்களவையில் அண்ணாவின் திராவிட நாடு முழக்கம்,காமராஜரின் கே பிளான் திட்டம் – பக்தவச்சலம் முதலமைச்சர் ஆனது, இந்திய சீனப் போர், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரிவு மற்றும் வளர்ச்சியின்மை ,நேரு இறப்பு -சாஸ்திரி பிரதமராக பதவியேற்பு, இந்தியா – பாகிஸ்தான் போர், சாஸ்திரி மரணம், இந்திரா பிரதமர் ஆனது ,மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு , தமிழ்நாடு எல்லை வரையறை மற்றும் பெயர் கோரிய போராட்டங்கள் முதுகுளத்தூர் படுகொலைகள், சாதிக்கலவரங்கள், இமானுவேல் சேகரன் படுகொலை, முத்துராமலிங்கத்தேவர் விடுவிப்பு, உணவு பஞ்சம் , ஈ வி கே சம்பத் திமுக கட்சியிலிருந்து வெளியேறுதல், இந்தி எதிர்ப்பில் தீவிர மாணவர்கள் போராட்டம், எம்ஜிஆர் துப்பாக்கி சூடு, திமுகவின் வெற்றி, காமராஜர் தோல்வி, தமிழ்நாடு பெயர் மாற்றம், படி அரிசி திட்டம், கீழ்வெண்மணிப் படுகொலைகள், அண்ணாவின் இறப்பு, கலைஞர் முதல்வராக எம்ஜிஆர் ஆதரவு,  1971 தேர்தல் திமுக மாபெரும் வெற்றி,எம்ஜிஆர் சுகாதார அமைச்சர் பதவி கோரிக்கை, திமுகவின் பிளவு, கச்சத்தீவு, எமர்ஜென்ஸி, சர்க்காரியா கமிஷன் என பல விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளை படம் பிடித்தது போல எழுதி இருக்கிறார் ஆர். முத்துக்குமார்.

ஒரு உதாரணம் : 

 

இன்று வரை தமிழக வாக்காளர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு கர்மவீரரின் தோல்வி. 1967 தேர்தலில் கர்மவீரர் காமராஜர், மாணவ தலைவர் பெ.சீனிவாசன் அவர்களிடம் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கிறார். இன்று வரை கர்மவீரர் தோற்கடிக்கப்பட்டார் என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் யாரிடம் தொற்றார்? அவர் யார் என்று கேட்டால் தெரியாது. அவர் யார் என்பதையும் அந்த கட்டுரைகளில் அறியலாம். அடுத்து 1967 இல் காங்கிரஸ் தோற்ற போது, முதல்வராக இருந்தவர் கர்மவீரர் இல்லை. பக்தவத்சலம் அவர்கள் தான் முதல்வர். இதுவும் பலருக்கு இதுவரை தெரியாது.

[காமராஜர் அவர்கள் விருதுநகரில் மாணவர் தலைவர் சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். திமுகவின் எழுச்சி மற்றும் அப்போதைய அரசியல் சூழல்கள் காமராஜர் அவர்களை தோற்கடித்தன]

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2


திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் தேர்தலுக்காக உருவாக்கிய கூட்டணி மற்றும் அதனால் கிடைத்த வெற்றி, எம்ஜிஆர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை கொண்டுவந்ததற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகள், மதுவிலக்கு, நெருக்கடி நிலையை மறந்து 1980 இல் இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏற்படுத்திய கூட்டணி, பாராளுமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, எம்ஜிஆர் ஆட்சி 356வது பிரிவின் கீழ் இந்திரா அரசால் கலைக்கப்பட்டது, ஆட்சி கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபத்தில் அதிமுக மீண்டும் வென்றது, எம்ஜிஆரின் மாற்றங்கள், பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30% இருந்து 50% என உயர்த்தியது, ஈழத்தமிழர்களுக்கு எம்ஜிஆர் உதவி, ஜெயலலிதா அரசியல் பிரவேசம், இந்திரா படுகொலை, அமெரிக்காவில் இருந்துகொண்டே எம்ஜிஆர் தேர்தலில் வென்றது, ராஜிவ் பிரதமர் ஆகுதல், ஈழத்தமிழர் விவகாரத்தில் மாறுபட்ட விதத்தில் செயல்படுதல், போபர்ஸ் ஊழல், விபி சிங் ஆட்சி என பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை திறம்பட எழுதி இருக்கிறார் ஆசிரியர்  ஆர். முத்துக்குமார்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *