நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதைகள்
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே”
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ,
கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா!
பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் (ஜய பேரிகை)
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான். (பகைவ)
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்கு
கந்தர்வா விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு
சூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை.