சங்கர்ஷ் சந்தா : பங்குச்சந்தையில் 23 வயதில் 100 கோடி சொத்து – Sankarsh Chanda

பங்குச்சந்தை என்றாலே பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடும் சூழ்நிலையில் 17 வயதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்திடத் துவங்கி 23 ஆம் வயதில் 100 கோடி சொத்து வைத்திருக்கும் இளைஞர் தான் சங்கர்ஷ் சந்தா. மூத்த பங்குச்சந்தை முதலீட்டாளர் பட்டியலில் இணைந்திருக்கும் இவர் தான் அடுத்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என பெருமையாக பேசப்படுகிறார். யார் இந்த சங்கர்ஷ் சந்தா?

அண்மைய காலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்திட இளைஞர்கள் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சிலர் மட்டுமே செய்வது சிலருக்கு மட்டுமே ஆனது என்ற கருத்தாக்கம் தற்போது மறைந்துள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் தான் சாதித்துக்காட்டி இருக்கிறார் சங்கர்ஷ் சந்தா என்கிற இளைஞர். 17 வயதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்திடத் துவங்கிய இவர் தற்போது 100 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். அதோடு பங்குச்சந்தையில் முதலீடு செய்திட வேண்டும் என நினைப்போருக்கு வெற்றிகரமான ஆலோசனைகளை வழங்குவதற்கு Savart என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரது வெற்றிக்கதை பல இளைஞர்களை உத்வேகப்படுத்தலாம் உத்வேகப்படுத்தலாம். அதேபோல, வெற்றிகரமாக முதலீடு செய்வதற்கு என்னென்னெ புத்தகங்களை வாசிக்கலாம் என்ற சங்கர்ஷ் சந்தாவின் ஆலோசனைகளையும் இங்கே பார்க்கலாம்.

சங்கர்ஷ் சந்தா Success Story

சங்கர்ஷ் சந்தா ஹைதராபாத்தில் உள்ள Slate – The School என்ற பள்ளியில் பயின்றார். அவர் 12 ஆம் வகுப்பு பயின்றதற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு வாக்கில் வெறும் 2000 ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு பங்குச்சந்தையில் நுழைந்தார். அவர் முதன் முதலாக முதலீடு செய்தது 2000 ரூபாய் மட்டும் தான். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக அவர் முதலீடு செய்திட ஆரம்பித்தார். அவர் மொத்தமாக ரூ 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தார். அவர் முதலீடு செய்த பங்குகள் அவர் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக வளர்ந்தது. இரண்டு ஆண்டுகளில் ரூ 13 லட்சம் அளவிற்கு அது உயர்ந்து இருந்தது. 

அவர் 2017 ஆம் ஆண்டு குறிப்பிட்ட பங்குகளை விற்று அதன் மூலமாக கிடைத்த ரூ 8 லட்சத்தைக் கொண்டு ஒரு நிறுவனத்தை துவங்கினார். மீதமிருந்த பணத்தை தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மூலமாக மீண்டும் பங்குச்சந்தையிலேயே முதலீடு செய்தார். 

father of value investing என அழைக்கப்படும் பெஞ்சமின் கிரஹாம் தான் சங்கர்ஷ் சந்தாவின் முன்மாதிரியாக இருந்திருக்கிறார். 14 வயதில் பங்குச்சந்தையில் நுழைந்தவர் தான் பெஞ்சமின் கிரஹாம். அவரது கட்டுரைகளை வாசித்த பின்னர் தான் பங்குச்சந்தையில் நுழைந்தார் சங்கர்ஷ் சந்தா.

பங்குச்சந்தைக்கு வருவதற்கு முன்னதாக வாசிப்பில் அதிக நாட்டம் உடையவராக இருந்தார் சங்கர்ஷ் சந்தா. அது அவரை “மனிதர்கள் பணத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள்” என்பதை அறிந்துகொள்ள தூண்டியது.ஏற்கனவே, பணம் குறித்தும், முதலீடு குறித்தும் அதிகமாக வாசிக்கும் ஆர்வம் கொண்டிருந்த அவர் நண்பர்களிடத்தில் புத்தகங்களை வாங்கியும் நூலகங்களில் வாங்கியும் வாசித்துள்ளார். ஒருவேளை அவரே அந்தப் புத்தகங்களை வாங்கி வாசித்து இருந்தால் அந்தப் புத்தகங்களை வைப்பதற்கே இரண்டு மூன்று அறைகள் தேவைப்பட்டு இருக்குமாம். 

ஆரம்பத்தில், படிப்பதற்காக வெளிநாட்டிற்கு செல்லும் ஆர்வத்தோடு இருந்த இவர் பின்னர் Bennett University பி டெக் படிப்பில் சேர்ந்தார். அங்கு தான் அவர் பணத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வினை துவங்கினார். பலதரப்பட்ட பொருளாதார நிலையில் உள்ள மக்களோடும் இவர் கலந்துரையாடினார். அவர்கள் பணம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிந்து கொள்ள அவர் தீவிரமாக முயன்றார். தனது ஆசிரியர்கள் உதவியுடன் அவர் பெரிய நபர்களுடன் உரையாடினார். இதற்காக அவர் சுமார் 2000 பேரிடம் கருத்துக்களை பெற்று உள்ளார். பெரும்பான்மையான மக்கள் அனைவரும் பணம் மிகவும் முக்கியம் என்றே கருத்து தெரிவித்தார்கள். ஆனால், குடும்பம் முக்கியம், சந்தோசம் முக்கியம் என மக்கள் சொல்லுவார்கள் என்று தான் அவர் எதிர்பார்த்து இருந்தார். 

பணத்தை கொண்டிருக்கும் பலர் தங்களது நேரத்தை நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ நேரத்தை செலவு செய்வது இல்லை. அவர்களுக்கு பிடித்த விசயத்தில் கூட நேரத்தை செலவு செய்வது இல்லை. பலருக்கு பணம் வேண்டும். ஆனால் அதனை வைத்துக்கொண்டு என்ன செய்திட வேண்டும் என்பது தெரியவில்லை என்று கூறுகிறார் சங்கர்ஷ் சந்தா. 

ஒவ்வொருவரும் தங்களது செலவிற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அதற்கு அப்பால் இருக்கின்ற பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலமாக வேறு எந்த அதிகப்படியான வேலை எதுவும் செய்யாமலேயே பணத்தை பெருக்க முடியும் என்றும் அறிவுரை கூறுகிறார் சங்கர்ஷ் சந்தா. 

பங்குசந்தையில் நுழைய விருப்பம் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இவர் Savart  என்கிற நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். மொபைல் போனில் Savart மொபைல் ஆப்பை இன்ஸ்டால் செய்துகொண்டு ஆண்டு சந்தா கட்டினால் போதும். அவர்கள் தேவையான ஆலோசனைகள் அனைத்தையும் வழங்குவார்கள். இப்போது ஆண்டுக்கு கட்டணமாக ரூ. 4,999 ஐ வசூல் செய்கிறது இவரது நிறுவனம். 

முதலாம் ஆண்டில் இவரது நிறுவனம் 12 லட்சம் ரூபாயும் அடுத்த ஆண்டில் 14 லட்சம் ரூபாயும் மூன்றாம் ஆண்டில் 32 லட்சம் ரூபாயும் 2020 – 2021 ஆண்டில் 40 லட்ச ரூபாயும் லாபமாக ஈட்டியுள்ளது. 

மிக இளம் வயதில் பங்குச்சந்தையில் கொடி கட்டி பறக்கும் சங்கர்ஷ் சந்தா, புதிதாக பங்குச்சந்தையில் நுழைவோருக்கு பின்வரும் புத்தகங்களை பரிந்துரை செய்கிறார். 

The Intelligent Investor, 

Security Analysis

The First Three Minutes of the Universe

அதுமட்டுமல்லாமல் Financial Nirvana என்கிற முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம் ஒன்றினையும் அவர் எழுதி இருக்கிறார். எப்படி முதலீடு செய்திட வேண்டும், எப்படி பங்குச்சந்தையை புரிந்துகொள்ள வேண்டும் என மிகத்தெளிவாக அவர் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 

மக்கள் தங்களது செல்வத்தை கூட்டவும் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது மிகவும் அவசியம் என்ற நம்பிக்கை உடையவராக இருக்கிறார் சங்கர்ஷ் சந்தா. அதனை அவர் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் முயற்சி செய்து வருகிறார். 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *