“சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது” இளையோர் வாசிக்க வேண்டிய புத்தகம்

சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது : இந்தப்புத்தகத்தில் காமம் குறித்தும், பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கும் உளவியலையும், ஆண்கள் எப்போதும் பெண்களை “ஆண்” என்ற இடத்திலிருந்து பார்ப்பதனால் ஒரு பெண்ணையும், பெண்ணின் உடலையும் புரிந்துகொள்ளவே முடியாது என்பதையும், பெண்கள் ஆண்களிடம் என்ன மாதிரியான காதலை எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்ற பல உணர்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.


மனிதர்கள் இயல்பாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள். அதிலும், சில விசயங்களை ரகசியமென மறைத்து வைத்தால் அது பற்றி தேடி அறிந்துகொள்ள மனிதர்களுக்கு இன்னும் ஆர்வம் கூடும். அப்படி நெடுநாளாக ரகசியமாக காத்து வைக்கப்பட்டு இருக்கும் விசயம் “காமம்”. ஒவ்வொருவரின் வாழ்விலும் நிச்சயமாக கடந்துபோகும் இந்த விசயத்தை இந்த சமூகம் இளையோருக்கு தகுந்த முறையில் கற்பிக்காமல் ரகசியமாக வைத்துக்கொண்டிருப்பதன் விளைவு தங்களுக்கு கிடைத்த வழிகளில் அது பற்றி அறிந்துகொள்கிறார்கள் இளையோர்கள். இது பல சமயங்களில் தவறான புரிதலை அவர்களிடத்தில் ஏற்படுத்தி விடுகிறது. பெண்கள் குறித்தான பார்வையையும் அது மாற்றிவிடுகிறது. “Sex Education” குறித்து பலமுறை விவாதித்துக்கொண்டு இருந்தாலும் ஆக்கப்பூர்வமான முறையில் இன்னும் இளையோருக்கு அறிமுகப்படுத்திடவே இல்லை. வாழ்வின் முக்கியமான அங்கமான “காமம்” குறித்து சரியான விதத்தில் இளையோருக்கு கற்பிக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதன் ஒரு முயற்சி இந்த புத்தகம். 

சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது புத்தகம் குறித்து ப்ரியா வெங்கடேசன் அவர்கள் இந்த புத்தகத்தை வாசித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது விமர்சனம் இங்கே உங்களுக்காக தரப்பட்டுள்ளது. இந்தப்புத்தகத்தை வாங்கி படியுங்கள். 


ஆபாச வார்த்தைகளால் நிறைந்து கிடக்கும் பதின் உலகம், உடல் மீதான இச்சைகளால் மூழ்கிக் கிடக்கும் கல்லூரிக் காலம், காமத்திற்கும் காதலுக்கும் இடையே விரிக்கப்பட்டிருக்கும் மாய ரேகையில் பயணிக்கும் இளமைக்காலம் பற்றியெல்லாம் நூலாசிரியர் தன் முன்னுரையிலேயே குறிப்பிட்டு விடுவதால், கதைக்கரு என்னவாக இருக்குமென்கிற யூகத்துடன் கதைக்குள் நுழைய ஏதுவாகிறது.

எடுத்தாண்ட காமத்துப்பால் சார்ந்த இக்கதைக்களத்திற்கேற்ப, கதாப்பாத்திரங்கள் தன்னியல்பான ஆங்கிலம் கலந்துப் பேச வேண்டியிருந்தாலும், கதாசிரியரின் விவரிப்புகளில் அழகுத் தமிழ் மிளிர்கிறது. அதனால்தானோ என்னவோ, நுனிநாக்கு ஆங்கிலமும், ஆழ்ந்த தமிழும் கலந்து, அழகிய முரணுடன், “சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது” என, இந்நூலுக்குப் பெயரிட்டிருக்கிறார்.

எந்தத் திணையிலிருந்தாலும், ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ தானே, விடலைகளின் தலையாயக் கற்பனை..?! அந்தக் கற்பனைகள், நிஜ வாழ்வில் எப்படியெல்லாம் தாக்கங்களையேற்படுத்துமென்பதையும்; முதல்முறை உறவு கொள்பவரின் திருப்தி பற்றிய வரையறைகளையும், ஆண்-பெண் உறவு பற்றியச் சமூகத்தின் போலியான கற்பிதங்களையும் எள்ளி நகையாடி, காதலின் ஆழமான உணர்வை அழகான கவிதையைப் போல் விளக்குகிறது இப்புத்தகம்!

‘காட்சி இயக்கி’, ‘முதன்மை சாலை’, ‘முறைசாரா பாணி’, ‘உயிர் நீர்மம்’, ‘வெப்ப அளவு’, ‘அடுமனை’, ‘சுற்றத்தின் வில்லைகள்’, ‘எல்லோன்’, ‘உடுக்கள்’… என நவீன தமிழர்கள் உச்சரிக்கத் தயங்கும் வார்த்தைகளையும் ரசிக்கும்படி, வர்ணனைகளினூடாக நுழைத்து எழுதியிருப்பது நூலின் சிறப்பு. இப்படியான திகட்டாத தமிழ்ப்படுத்தல்கள், நூலாசிரியர் தரணி ராசேந்திரன் மீதான மதிப்பையும் உயர்த்துகிறது.

“..த்தா… எத எதையோ தெரிஞ்சி வச்சிருந்த மொத தடவ உட்டா போகாதுனு தெரியலையே. ஸ்கூல்ல கூட சொல்லி தரலையே.” எனும் வார்த்தைகளில், சமூகத்தின் கல்விச் சூழலையும் செக்ஸ் கல்வியின் தேவை பற்றியும் போகிறப்போக்கில் நக்கலும் நையாண்டியும் கலந்து சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

அடி – இஞ்ச் – சென்டிமீட்டர் வித்தியாசங்கள் புரியாமல், சந்திர சூடன், சிவா, மகேந்திரன் மூவரும், ‘அளவெடுக்க’ அல்லல் படுவதெல்லாம் வேற ரகம்! எதை அளவெடுக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அது, அவர்களின் சந்தேகத்தைத் தீர்த்த, கணக்கு வாத்தியாருக்கே தெரியாத ரகசியம்..!!

சான்வெஜ்.., கஜக் முஜக்.., மேட்டர்.., பிட்டுப் பேச்சு.. என்றே ஓடிக்கொண்டிருக்கும் கதை, எந்த நேரத்தில் சீரியஸாகிறதென வாசகர் உணராத வகையில், அத்தனைப் பக்குவமாக மேலெழும்பும் கதையின் போக்கு ரசிக்க வைக்கிறது. அதிலும், பிள்ளைத்தாச்சி வயிற்றின் வரி தழும்புகளைக் குறிக்கும், “குழந்தை தீட்டிய முதல் ஓவியம்” என்ற ‘வரி’கள், இக்கதைக் களத்தில் யாரும் எதிர்பாராத கவிதை!!

“வந்த உடனேவா. கொஞ்ச நேரம் போட்டும்.” “நாங்களான் கேப்பே இல்லாம பதினஞ்சி வருசமா இதயே தான் பேசிக்கிட்டிருக்கோம். போவியா. என்ன ஆனாலும் சரி உள்ள உட்டே ஆகனும்.” “என்ன மேட்டரு இவ்வளவு மொக்கையா இருக்கு. இதுக்கா இவ்வளவு பிள்டப்பு” இப்படியான உரையாடல்களுக்கிடையே, “.. நீங்க நேசிக்கலனு யாரும் சொல்லல. ஆணா இருந்து நேசிக்கிறிங்க. ஒரு ஆணா அவ மேல அன்பு செலுத்துறிங்க. அது யாருக்கு வேணு. ஆண்லந்து இறங்கி வாங்க சார். அவள அவ உணர்வோட பாருங்க. அவ தேவ என்னனு கேக்காதீங்க புரிஞ்சுக்கோங்க..” என்பன போன்ற உரையாடல்களும் வருகிறதென்பதே ஆச்சர்யம் தான்!


“வந்த உடனேவா. கொஞ்ச நேரம் போட்டும்.”

“நாங்களான் கேப்பே இல்லாம பதினஞ்சி வருசமா இதயே தான் பேசிக்கிட்டிருக்கோம். போவியா. என்ன ஆனாலும் சரி உள்ள உட்டே ஆகனும்.”

“என்ன மேட்டரு இவ்வளவு மொக்கையா இருக்கு. இதுக்கா இவ்வளவு பிள்டப்பு”

இப்படியான உரையாடல்களுக்கிடையே,

“.. நீங்க நேசிக்கலனு யாரும் சொல்லல. ஆணா இருந்து நேசிக்கிறிங்க. ஒரு ஆணா அவ மேல அன்பு செலுத்துறிங்க. அது யாருக்கு வேணு. ஆண்லந்து இறங்கி வாங்க சார். அவள அவ உணர்வோட பாருங்க. அவ தேவ என்னனு கேக்காதீங்க புரிஞ்சுக்கோங்க..” என்பன போன்ற உரையாடல்களும் வருகிறதென்பதே ஆச்சர்யம் தான்!

 

“அவளின் பிறப்புறுப்பிலிருந்து வழிந்தோடிய கழிவுகளில் சிறு வயது முதல் இதுவரை அவன் பெண் உடலை பற்றியும் மனதை பற்றியும் கட்டி வைத்திருந்த பொய்மைகளும் எலக்காரங்களும் துடைத்தெறியப்பட்டன..” இப்படிப்பட்ட சீரியஸான வரிகளை, உச்சுக் கொட்டாமல் ரசிக்க வைப்பது இவருடைய எழுத்தின் பலம்!

கதைக்களம் சென்னை என்பதால் மிக இயல்பாகப் பல இடங்களில் கெட்ட வார்த்தைகளை மேய விட்டுள்ளார், கதாசிரியர்.

 

‘ங’கர வரிசை, ‘கூ’ வரிசை உள்ளிட்ட பல எழுத்துக்களை, தொடக்கக்கல்விக்குப் பிறகான  வாழ்நாளில் நாம் உச்சரிப்பதேயில்லை. அக்குறையைப் போக்கி, அந்த எழுத்துகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில், வட தமிழகத்துக்  கெட்டவார்த்தைகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 

 

அவ்வகையில், அதிகமாகப் புழங்கி வரும் ‘ங்கோத்தா’ எனும் சொல்லை, அதன் நேட்டிவிட்டி மாறாமல் உச்சரிப்பது தானே அழகு?! ஆனால், கதையின் பல இடங்களில் ‘ஓத்தா’ (‘ங்கொம்மாள’ க்கு பதில் ‘ஒம்மாள’) என்றே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வடதமிழகம் தவிர்த்த பிற பகுதிகளிலிருப்போரும், புதிதாக ‘அவ்வார்த்தை’யைச் சொல்லிப் பழகுவோரும் தான், சற்றே தயக்கத்துடன் மென்று விழுங்கி… ‘த்தா’ என்று ஆரம்பிப்பார்கள். ஆனால்.., இதுவரை எவரும் சொல்லாத பாணியில் காமத்தை அச்சு அசலாக எழுதத் துணிந்த தரணி ராசேந்திரனுக்கு ஏனிந்தத் தயக்கமோ..?!

 

நூலாசிரியருக்கு மஞ்சள் நிறத்தின் மீது அதீதக் காதல் போலும்! கதை முழுவதிலும் மஞ்சள் வண்ணத்தைத் தூவிக்கொண்டேயிருக்கிறார்.. ஒளியோவியப்பாணியிலான சிந்தனை பல இடங்களில் தெரிவதால், கதாசிரியரை மீறிய ஒரு திரைத்துறையார்வளர் ஆங்காங்கே வெளிப்பட்டு விடுகிறார்.

 

படிக்கத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே திடீரென நான்குப் பக்கங்கள் (17 – 20) இடைச்செருகல் போலிருந்தது. ‘கண்ட இடத்துல பக்கங்களை மாத்தி வெச்சிருக்காங்களே..’ என்கிற ஆதங்கத்திலிருக்க, அதேபோல் வேறு சில இடங்களிலும் வரவே, இந்நூலாசிரியர், திரைப்பட இயக்குராகவும் இருப்பதால், ‘நான்-லீனியர்’ பாணியில், புதுசா எதையோ சொல்ல வருகிறாரோவென நினைத்துக்கொண்டேன், சுஜாதாவின் “மளிகைக் கடை லிஸ்டையும் பிரசுரிக்க” கேட்பதைப் போல…

 

முழுவதுமாகப் படித்துப்பார்த்த பிறகே, அவை பக்கங்கள் மாறித்தான் பைண்ட் செய்யப்பட்டிருந்தன என்பதை உணர முடிந்தது. ஆனாலும், சுவாரசியத்துக்குக் குறைவில்லை!. (என்னுடைய ‘பிரேம்-பிரியா-பிரேமம்’ கதையின் சாட்டிங் அத்தியாய நினைவுகள்..!)

 

ஆங்காங்கே தென்படும் ஒற்றுப் பிழைகளும், ஆக’ணு’ம், தரணும் போன்றவற்றில் ‘ன’கரம் பயன்படுத்தியிருப்பதும் நெருடல். இவற்றை அடுத்தப் பதிப்பில் மாற்றினால் நூல் இன்னும் மெருகேறும்.

இக்கதையைப் படித்து முடிக்கும் ‘சிறுவர்’கள், சந்திர சூடன் சொல்லித் தரும் ‘யோகா’வைப் பண்ணுவதிலோ.., ‘பெரிய’ பிள்ளைகள், கம்பீரமாய் உணர்வதிலோ..,. வயது வந்தோர் தன்னம்பிக்கையுடன் புணர்வதிலோ எந்தப் பாதகமுமில்லை. ஆனால்.., முதலிரவில் ரத்தம் வரவில்லையென்றோ, உள் நுழைவில் சிரமம் இல்லையென்றோ, பெண்ணைச் சந்தேகிக்கும் பழமைவாதிகளுக்குத்தான் பிரச்சனையாகக்கூடும். பாவம்.., இதைப் படித்துவிட்டுப் போய், அவங்க சாண்விச் பாழாகாமலிருந்தால் சரி!!

புணர்தலின் உண்மைத்தன்மையையும், காதல் எனும் உணர்வையும் நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லியிருப்பதால், இந்நூலை ஒரு பாலியல் கல்வியாகவே பாவித்து வாசிக்கலாம்.

மேலும் பல புத்தகங்களின் அறிமுக கட்டுரைகளை இங்கே கிளிக் செய்து வாசிக்கலாம்

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *