புதுமையான ஆண் குழந்தைப்பெயர்கள் | New tamil boy names

ஆண் குழந்தைக்கு சூட்ட புதுமையான தூய தமிழ்ப்பெயர்கள்



ஏறன்

ஏறு என்றால் அரிமா அல்லது காளை. எறுழ் என்றால் வலிமை. வல்லோன் என்றுபொருள்

நீரன்

நீர்மை என்றால் ஒழுக்கம், தூய்மை, சிறந்த குணம்

சீரன்

சீர், சீர்மை என்றாலும் ஒழுக்கம், அழகு, நேர்த்தி

ஆரன்

ஆர் என்றால் நிறைவு, உயர்வு, திரட்சி

ஓரன்

ஓர்மை என்றால் சிந்தனை, நினைத்தல், குவியத்துடன் நினைத்தல்

ஈரன்

ஈரம் உடையவன், அருளாழன் compassionate person

நலன்

நலம் மிகுந்தவன்; எல்லா வகை நலனும் உடையவன்

குலன்

நல்லோர் குலத்தவன், குலவு என்றால் சேர்ந்திரு என்றும் பொருள், குமுகத்தோடு சேர்ந்திருப்பவன்

மீனன்

அடிப்படை உயிராகக் கருதும் ஒன்று, பாண்டியன் சின்னம், மீன் என்றால் விண்மீன் என்றும் பொருள், எனவே விண்மீனன் என்றும் பொருள்

மீகன்

மீகம் என்றால் யாவற்றையும் மீறிய உயர்ச்சி மிக்கது என்று பொருள். தேவாரத்தில் தமிழ்நூலின் மீகம் அறிவார் (தமிழ் நூற்களில் தனி மேன்மையை உணர்வார்) என்று ஆண்டிருக்கின்றார் திருஞான சம்பந்தர்

சேடன்

சேடு = அழகு

சேட்டன்

முத்தோன்

அளியன்

அளி = அன்பு, அருள்

வேழன்

யானை போல் வலிமை மிக்கவன்; பிழையாக வேலன் என்றாலும் பொருள் தரும்

சென்னி

chenni கூர்ந்த சிந்தனையாளன், சோழர்களில் பெயர்களுள் ஒன்று, சிறப்பு என்றும் பொருள், மேல் உச்சி என்று பொருள், தலை என்றும் பொருள். இதனைக் கொண்டு முன்னொட்டுகளோடு பல சொற்கள் ஆக்கலாம். நற்சென்னி, வல்+சென்னி வற்சென்னி, இன்சென்னி, பெண்பால் பெயராய் பூச்சென்னி, மலர்ச்சென்னி…

சே

சே என்றால் சிவப்பு, அழகு, செம்மையானது, செழிப்பானது, புதுமையானது

தென்னன்

தென் என்றால் தெற்கு என்று மட்டும் பொருள் இல்லை, அழகு, இசை இனிமை என்றும் பொருள்

தெண்ணன்

தெண் = தெளிவு; தெட்பம் = தெளிவு

ஒட்பன்

ஒளிபொருந்தியவன்; ஒட்பம் = அறிவு, அழகு, நன்மை

ஒள்ளோன்

ஒள் = ஒளி

தகை அல்லது தகையன்

தகை = அன்பு அழகு பொருத்தம், தகுதி, நன்மை. பெருந்தகை என்றால் பெருமை மிக்க ஒள்ளியர் என்று பொருள்

நன்னன்

நன்கோ, நற்கோ, நல்லோன்

நள்ளன்

நள் = நடு, நட்பு. நள்ளன் நண்பன் -அதாவது அன்பு உடையவன். நள்ளலர் என்றால் பகைவர் அன்பு இல்லாதவர்.; நள்ளுதல் நட்பு கொள்ளுதல்

பகவன்

திருக்குறலில் வரும் ஆதி பகவன். சங்க இலக்கியத்தில் முக்கோல் பகவர் என்று வரும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் பகவர் என்னும் சொல்லாட்சி உண்டு. பகவன் என்றால் ஒளிபொருந்தியவன், ஒளியூட்டியவன் என்று பொருள்; பகல் என்பது ஒரு நாளைப் பகுத்த ஒரு பகுதி என்றும், ஒளிப்பகுதி என்றும் பொருள். பகட்டு என்றால் பளபளக்க வெளிச்சமாக இருத்தல்; பகவன் என்பதற்கு பெண்பால் பகவதி, பெருமைப்பெயரும் பன்மையும் பகவர். இது ப’கவான் என்னும் சொல்லுடன் தொடர்புடையதன்று.

சேம்பன்

செம்மையானவன், நல்லவன்; சேம்பு = சிவப்பு

சேரன், சேறன்

வல்லின றகரத்துடன் வரும் சேறன் என்றால் செம்மையாய் நடப்பவன், இனிமையானவன் என்று பொருள்; சேறு என்றால் தேன், இனிமை தித்திப்பு, தேன்பாகு என்றெல்லாமும் பொருள். இன்புக்குக்குழைக்குச் சேறு என்று பொருள்

செழி

செழிப்பு, செழுமை

வள்ளியன்

வள்ளியம் என்னும் செருக்கு என்றார் திருவள்ளுவர். வள்ளியம் பெருஞ்செல்வம். வள்ளியன் = கொடையாளன், பெருஞ்செல்வமுடையோன்; வள்ளிசு என்றால் முழுவதும், முழுமையாக, நேர்த்தி என்றும் பொருள்

தண்ணன்

குளுர்ச்சியானவன்

தெள்ளன்

தெளிவானவன், அறிவானவன். தெள்ளியர் என்றால் அறிவுடையோர் தெள்ளுதல் ஏன்றால் கொழித்தல், ஆராய்தல், தெள்ளுதமிழ் = செந்தமிழ், தெள்ளிமை =அறிவு, தெளிவு

வென்றி

வெற்றி என்பதன் மற்றொரு வடிவம்

ஆகேறன்

ஆகேறு என்றால் கொன்றை மலர்ச்சரம், கொன்றை வேந்தன் என்னும் பொருள்

ஆணன்

வலிமை மிக்கவன், ஆண்மை மிக்கவன், ஆணேறு

அனலன்
ஆகன்

வெற்றியுடன் எதையும் முடிக்கும் திண்திறலோன்

ஆடலன்

ஆடல் வல்லான்

ஆர்த்தன்

பெரியோன்; ஆர்தல் நிறைதல், ஆர்த்தல் = கட்டுதல்

அருக்கன்

வெங்கதிரவன்; அருக்கன் என்றால் சுக்கு என்றும் பொருள்

அருகன்

இது சமண மத முனிவர் என்றும் பொருள் தரும், ஆனால் தமிழில் பக்குவம் மிக்கவன், நண்பன் என்றும் பொருள் தரும்

ஓசன்

குரு, ஆசிரியன்

ஓகன்

உயர்ந்தவன்; ஓக்கம் என்றால் உயர்ச்சி, பெருமை, எழுச்சி என்று பொருள்; ஓகை என்றால் உவகை அல்லது மகிழ்ச்சி. ஓகை என்றும் பெயர் வைக்கலாம், ஓகையன் என்றும் சொல்லலாம்

ஓதியன்

அறிவுடையவன், செறிவான ஞானம் உடையவன்

ஓர்பன்

ஓர்பு = ஆராய்ச்சி அறிந்தெடுத்தல், ஓர்ச்சி = ஆராய்ச்சி

ஓரி

வில் வித்தையில் சிறந்த ஓர் அரசன்; பேரரசன்; அறிவாளி

கடலன்

கடல் போல் அறிவாளி, கடற்கோ

கணி

கணிப்பவன், சிறந்த அறிவாளி; முதுகந்தண்டு என்றும் பொருள் கணுக்கணுவாய் இருப்பதால், ஆனால் இங்கு அடிப்படையானவன் என்று பொருள்


முகப்பு


பெண் குழந்தைக்கு சூட்ட புதுமையான தூய தமிழ்ப்பெயர்கள்