யானையின் மரணத்தில் மதவாதம்….

கொரோனா மரண எண்ணிக்கையை கண்டு உலகமே பிரமித்துப்போய் செய்வதறியாது திகைத்து நிற்க திடீரெனெ ஒரு கர்ப்பிணி யானையின் மரணம் திகைப்பை மேலும் கூட்டியது. யானை இறந்தது வருத்தமே என்றாலும் கூட அதிலும் கூட மதவாதத்தை புகுத்த துடிப்போரை நினைத்தால் வேதனை தான் வருகிறது.
கர்ப்பிணி யானை மரணம்

 

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒவ்வொருவரின் சமூக வலைதள பக்கங்களிலும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களிலும் பிரதான இடம் பிடித்தது “யானை இறந்ததற்கு நீதி கேட்கும் பதிவுகள்” தான். ஒவ்வொருமுறையும் எங்கேயேனும் பாதிப்புகள் அநீதிகள் நடந்தால் பொதுமக்கள் அவர்களது சார்பில் செய்யக்கூடிய அதிகபட்ச கவன ஈர்ப்பு தீர்மானமாக இதனைப்பார்க்கலாம். இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதிர்த்து குரல் கொடுக்கும் பெரும்பான்மையான சாதாரண பொதுமக்கள் எந்தவித உள்நோக்கமும் இன்றி உண்மையான வருத்தத்துடன் தான் பதிவிடுகிறார்கள்.

 

ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு மதவாதத்தை உள்ளிழுத்துக்கொள்கிறார்கள். மிகப்பெரிய பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு பற்றி பெருமை கொள்ளும் நம்மவர்கள் தான் ஒரு துயர சம்பவத்திற்கும் மதவாதத்திற்கும் முடிச்சு போடும் கேவலமான வேலையை செய்கிறார்கள். நாம் மிகவும் உயர்ந்தவர்கள் என நினைப்போரே இத்தகைய வேலைகளில் இறங்கும் போது தான் மேலும் வேதனையாக இருக்கிறது.

 

யானை எப்படி இறந்தது? மதவாதம் எப்படி நுழைந்தது?

கர்ப்பிணி யானை மரணம்

தற்போது வரைக்கும் பரவுகின்ற போஸ்டர்களில் யானை இறந்த இடமாக குறிப்பிடப்படுவது “கேரளாவை சேர்ந்த மலப்புரம்” ஆனால் உண்மையில் யானை இறந்தது “பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த மன்னார்காடு பகுதியில்”. மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு மிக முக்கியக்காரணம் “மலப்புரம்” என்பதுதான். காரணம், கேரளாவில் மலப்புரம் பகுதியில் தான் அதிக அளவில் முஸ்லீம்கள் இருக்கிறார்கள் என்பதுதான்.

தமிழகத்தை சேர்ந்த H ராஜா, மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி போன்றவர்களே கூட தவறான தகவல்களை தங்களது ட்விட்டர் கணக்குகளில் பகிர்ந்துள்ளனர். உயர்பதவிகளில் இருப்பவர்கள் நிச்சயமாக உண்மையான தகவல்களைத்தான் பரப்ப வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் எந்தவித கவலையும் இல்லாமல் செய்திகள் பரப்பப்பட்டன.

 

Central Government has taken a very serious note of the killing of an elephant in Mallapuram, #Kerala. We will not leave any stone unturned to investigate properly and nab the culprit(s). This is not an Indian culture to feed fire crackers and kill.@moefcc @PIB_India @PIBHindi

— Prakash Javadekar (@PrakashJavdekar) June 4, 2020

It's murder,Malappuram is famous for such incidents, it's India's most violent district.For instance, they throw poison on roads so that 300-400 birds & dogs die at one time: Maneka Gandhi,BJP MP&animal rights activist on elephant's death after being fed cracker-stuffed pineapple pic.twitter.com/OtLHsuiuAq

— ANI (@ANI) June 3, 2020

கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம் pic.twitter.com/PcePOMzdlP

— H Raja (@HRajaBJP) June 4, 2020

 

இது ஒரு எடுத்துக்காட்டுதான், இன்னும் பல்வேறு நபர்கள் யானை இறந்த விவகாரத்தை தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறெல்லாம் வெறுப்புணர்வை ஊட்டிட பயன்படுத்தியுள்ளனர்.

எப்படி ஒரு போலீஸ் ஒரு கறுப்பினத்தவரை கொன்ற நிகழ்வு ஒட்டுமொத்த அமெரிக்காவையும் பற்றி எரிய வைக்க முடியுமோ அதே மாதிரியான கரடுமுரடான சூழலைத்தான் நாம் இங்கே உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். எங்கேயேனும் ஒரு முஸ்லீம் மதத்தவர் ஒரு இந்து மதத்தவருக்கு இடையே நடக்கும் குடும்ப சண்டையை கூட ஒரு தேசிய அளவிலான பிரச்சனையாக மாற்றிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது எவ்வளவு பெரிய அபத்தம்.

 

பொதுமக்களே ஓய்வெடுங்கள்

ஒரு செய்தி வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டுக்கொண்டிருந்தால் அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். நீங்கள் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் அதற்குள் அந்த செய்தி பற்றிய உண்மை தெரிந்துவிடும். அதன்பிறகு பகிரலாமா வேண்டாமா என்கிற முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். நீங்கள் மதவாதத்தை தூண்டவில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சாதாரண பொதுமக்கள் 100 பேர் யானை இறந்துவிட்டது என பதிவு செய்வீர்கள். ஒரேயொரு நபர் இதற்கெல்லாம் அவர்கள் தான் காரணம் என பதிவிடுவார். மக்கள் இரண்டையும் தொடர்புபடுத்திக்கொள்வார்கள். இதுவே மனித இயல்பு.

இதுவரைக்கும் விசாரிக்கப்பட்டதில், காட்டுப்பன்றி போன்றவற்றை கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துடன் கூடிய அன்னாச்சிப்பழத்தை யானை சாப்பிட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. யானைக்கு வேண்டுமென்றே வெடிமருந்துடன் பழம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை. அப்படி செய்திருந்தால் அவர் எந்த மதம் எந்த சாதி ஆணா பெண்ணா என எதுவும் பார்க்காமல் தண்டிக்கப்படட்டும்.

யானை இறந்ததற்காக வருத்தப்படுகிறோம். ஆனால் அதனைவிட கொடுமையானது, அதனை மதவாதமாக்குவது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் லட்சக்கணக்கான உயிரினங்கள் தினந்தோறும் இறக்கின்றன. நாம் உண்மையாலுமே விலங்குகளின் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்போமேயானால் பிளாஸ்டிக் பயன்பாட்டினை சுயகட்டுப்பாட்டுடன் குறைத்துக்கொள்ள முயல வேண்டும். வருத்தத்தை விட நாம் எடுக்கும் அடுத்தகட்ட மாற்றம் என்ன என்பதுதான் முக்கியமானது.

 


Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *