காவல்துறையினர் சமூகத்தின் அங்கம் என்பதனை உணர வேண்டும்

போலீஸ் உங்களது நண்பன் என்ற வாசகத்தை உண்மையாக்க பல்வேறு முயற்சிகளை காவல்துறை செய்துவந்தாலும் கூட அவ்வப்போது நடைபெறும் சில நிகழ்வுகள் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை அதிகரிக்கவே செய்கின்றன.
காவல்துறையினர் சமூகத்தின் அங்கம் என்பதனை உணர வேண்டும்

 

பெரும்பான்மையான காவல்துறை அதிகாரிகள் மக்களுக்கு நெருக்கமான அதிகாரிகளாக இருக்கிறார்கள். காவல்நிலையத்திற்கு வரும் வழியில் பார்க்கின்ற மனிதர்களிடத்தில், கடைக்காரர்களிடத்தில் அக்கறையோடு நலம் விசாரித்துக்கொண்டு வருகிற பலர் இன்னமும் காவல்துறையில் இருக்கவே செய்கிறார்கள். பொதுமக்களும் அத்தகைய காவல்துறை அதிகாரிகளை மரியாதையோடும் அன்போடும் நடத்துகிறார்கள்.

எத்தனை நட்போடு பழகினாலும் கூட இன்னமும் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒருவித இடைவெளி என்பது இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதற்குக் காவல்துறையினருக்கு இருக்கும் அதிகாரம் காரணமாக இருக்கலாம், திரைப்படங்கள் காரணமாக இருக்கலாம், அவ்வப்போது காவல்துறையினரால் அரங்கேற்ற்றப்படும் வன்முறை குறித்த செய்திகள் காரணமாக இருக்கலாம், நமது சமூகம் காவல்துறையினர் பற்றி கட்டியெழுப்பி இருக்கின்ற அச்ச உணர்வு காரணமாக இருக்கலாம்.

ஆனால் அத்தனையும் தாண்டி காவல்துறை தொடர்ச்சியாக ஒரு முயற்சியை செய்துகொண்டே வருகிறது. ஆமாம், காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் எனவும் குற்றவாளிகளுக்கு மட்டுமே காவல்துறையினர் எதிரி எனவும் உணர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை காவல்துறை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வருவது போன்ற பல நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாகக்கூறலாம். ஆனால் அத்தனை முயற்சிகளையும் சாத்தான்குளம் போன்ற சில நிகழ்வுகள் நொடிப்பொழுதில் சுக்குநூறாக்கிவிடுகின்றன. 

காவல்துறையினரும் சமூகத்தின் அங்கம்

காவல்துறையினர் சமூகத்தின் அங்கம் என்பதனை உணர வேண்டும்

காவல்துறையினரில் சிலர் தங்களுக்கு கட்டற்ற அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொள்கின்றனர். காவல் உடுப்பை அணிந்தவுடன் அவர்கள் பெரும் சக்தி கொண்டவர்களைப்போல நடந்துகொள்கிறார்கள். அப்படி நடந்துகொள்ளும் சிலர் உண்மையை உணர்வது இல்லை. நாமும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் என்பதனை அவர்கள் மறந்துபோய் விடுகிறார்கள்.

நினைத்துப்பாருங்கள், இன்று சாத்தான்குளத்தில் தந்தை மகனை அடித்துக்கொன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்கள் இல்லாமலா இருப்பார்கள். அவர்களுக்கு இதே போன்றதொரு கொடுமை நடைபெற்றால் இந்தக்காவல்துறை அதிகாரிக்கு கவலை ஏற்படுமா படாதா?. பிறரை விடுங்கள், இதே காவல்துறை அதிகாரி ஓய்வு பெற்றபிறகு இவருக்கும் இவரின் மகனுக்கும் இதே போன்றதொரு நிகழ்வு இன்னொரு காவல்துறை அதிகாரியால் ஏற்பட்டால் என்ன செய்வார்?

சாத்தான்குளத்தில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரியின் பிள்ளைகள் நாளை பள்ளிக்கு செல்லும் போது அவர்கள் எத்தகைய விமர்சனங்களை சக மாணவர்களிடம் இருந்து பெறுவார்கள், மனைவி பிறர் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போது பிறரால் எத்தகைய விமர்சங்களுக்கு ஆளாக்கப்படுவார்.

இந்த சமூகத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு சூழலில் பிறரை சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். உங்களிடம் அதிகாரம் இருக்கும் போது நீங்கள் எப்படி நடந்துகொண்டாலும் கூட பிறர் உங்களை மதித்து நடப்பார்கள், மரியாதை கொடுப்பார்கள். ஆனால் நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள், அந்த மரியாதை உங்களுக்கானது அல்ல – உங்களுடைய பதவிக்கானது. அந்தப்பதவி போகும்போது உங்களை அவர்கள் எள்ளளவும் கூட மதிக்க மாட்டார்கள்.

அதிகாரம் ஒரு மனிதரிடம் இருக்கும் போது அமைதியாகவும் நிதானமாகவும் நடந்துகொண்டால் அவரே சிறந்த மனிதர். இதனை காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவருமே உணர்ந்துகொள்வது அவசியம்.

காவல்துறையினர் தாங்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் தான் என்பதனை உணர்ந்து செயல்பட்டால் “காவல்துறை உங்களின் நண்பன்” என்ற வாக்கியம் உண்மையாகும்.

 





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *