பேட்ட ரஜினி : அரசியலுக்கு வர மாட்டேன்னு சொல்லு…


நேற்று டிசம்பர் 09, 2018 அன்று ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. ரஜினி இன்று என்ன பேசுவார்? அரசியல் வருகை பற்றி என்ன பேசுவார்? என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அரசியலை பற்றி கொஞ்சமும் பேசாமல் திரைப்படத்தை மட்டுமே பேசி சென்றிருக்கிறார் திரு ரஜினிகாந்த்.

 

திரைப்பட விழாவில் அரசியல் பேசலாமா?

 

என்னப்பா திரைப்பட விழாவில் அரசியல் பேசினாலும் தப்புனு சொல்லுறீங்க, பேசலைனாலும் தப்புனு சொல்லுறீங்க

 

எங்கு மேடையேறினாலும் அங்கு அரசியல் பேசுவதென்பது வழக்கமாகவே மாறியிருக்கிறது. பல திருமண விழாக்களில் கூட மேடை அமைத்து அங்கே அரசியல் பற்றி பேசுவதை நாம் கண்டிருக்கிறோம். திரைப்பட விழாக்களிலும் அப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது. இதனை நாம் ஆதரிக்கவும் இல்லை.

 

 

ஆனால் ரஜினி அவர்கள் இங்கு ஏன் அரசியல் பேசவில்லை என்பதில் தான் சிக்கலே இருக்கிறது, உண்மையிலேயே சினிமா நிகழ்வில் அரசியல் பேசுவது தவறு என்ற எண்ணத்திலா அல்லது நாம் பேசினாலே அதில் குற்றம் காணுகிறார்கள், அப்படி பேசி திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வந்துவிட கூடாது என்பதனாலா? இங்கு ரஜினி அவர்கள் எந்த நோக்கத்தில் அரசியல் பற்றி பேசுவதை தவிர்த்தார் என்பதை தான் கவனிக்க வேண்டும்.

 


 

கஜா புயலை பற்றி ரஜினி பேச்சு?

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து அவர்களின் வாழ்வு மேம்பட உதவிட வேண்டும், அரசு மட்டுமே அனைத்தையுமே செய்துவிட முடியாது என பேசினார்.

 


அரசியலுக்கு வர மாட்டேன்னு சொல்லு…

 

ரஜினி அவர்கள், தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது அனைவருமே அறிந்தது. ஆனால் உண்மையாலுமே ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டாரா? அவருக்கு அதில் உண்மையாலுமே விருப்பம் இருக்கிறதா? என்ற கேள்விகளை முன்வைத்தால் அதற்க்கான உறுதியான பதிலை நம்மால் கூற முடியவில்லை.

இதற்கான வலுவான காரணங்களாக நாம் பார்ப்பது….

கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கஜா புயலில் களமிறங்கி அவர்களால் இயன்றதை செய்தார்கள். மக்களுடன் நெருங்குவதற்கான வாய்ப்பு இந்த தருணத்தில் கிடைத்தது என்பதே உண்மை. உதவிடும் எண்ணத்தோடு செய்திருந்தாலும் அதில் அரசியல் ஆதாயம் இல்லாமல் இருந்திருக்காது.

 

ஆனால் அப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பினை ரஜினி அவர்கள் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். ரஜினி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதல்ல இங்கு பிரச்னை, அவருக்கு அரசியல் நாட்டம் இல்லை என்பதே இங்கு பிரச்னை. இல்லையென்றால் “மக்களுடன் துணை நிற்பேன்” என்பதனை நிரூபித்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டிருக்க மாட்டார். இது விவரம் அறியாதவர் செய்த செயல் அல்ல, விவரம் தெரிந்தவர் செய்த செயல்.

அடுத்ததாக இந்த பிறந்தநாள் அன்று தான் சென்னையில் இருக்கப்போவது இல்லை என கூறியிருக்கிறார். தனது ரசிகர்களை, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு “உற்சாகம்” ஊட்ட கிடைத்த நல்ல சந்தர்ப்பம் ரஜினி பிறந்தநாள். ஆனால் இந்தமுறை இங்கிருக்க மாட்டேன் என கூறியிருப்பதன் மூலமாக தவிர்த்து இருக்கிறார் ரஜினி.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ எதார்த்தனமானதாக நடப்பது அல்ல. வயதான காலத்தில் திரைப்படத்தில் ரஜினி கஷ்டப்பட்டு நடிப்பதாக இயக்குனர்கள் கூறுகிறார்கள். உண்மையாலுமே ரஜினி அவர்களுக்கு பேரார்வம் இருந்தால் நிஜ உலகிலும் கஷ்டங்களை அனுபவிக்க முயன்று இருப்பார். ஆனால் இதுவரை அவர் அப்படி செய்யவில்லை.

ரஜினி அரசியலுக்கு வருவதும் வராமல் போவதும் அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் அதனை அவரது ரசிகர்களுக்கும் அமைப்பினருக்கும் தெளிவுபடுத்திட வேண்டியது அவரது கடமை.

 


பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *