கலைஞராக இருப்பதன் முக்கியத்துவம் – என் ராம் எழுதிய கட்டுரை
பேசும் வார்த்தைகளுக்கும் எழுதும் எழுத்துகளுக்கும் உள்ள மதிப்பையும் வலிமையையும் உணர்ந்த தலைசிறந்த தேசியத் தலைவர்கள் வரிசையில் வருபவர் கலைஞர். திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா ஆகியோரின் வரிசையில் வைக்கத்தக்கவர் – என் ராம், தி இந்து.
சமூக வலைதளங்கள் அனைவரையும் செய்தியாளர்களாக்கிவிட்டதன் விளைவு எத்தகைய நபர்களைப் பற்றியும் நொடிப்பொழுதில் விமர்சனம் செய்துவிடுகிறோம். ஒருவரை புகழ்வதற்கு ஏதாவது ஓரிரண்டு நிகழ்வுகள் பற்றி தெரிந்திருந்தால் போதுமானது. ஆனால் ஒருவரை இகழப்போகிறோம் என்றால் அவரைப்பற்றிய அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பது அழகு.
இன்று ஜூன் 03, முன்னால் தமிழக முதல்வரும் திமுகவின் முன்னால் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த தினம். இக்கால தலைமுறையினர் அவர் பற்றி தெரிந்துகொள்வதற்கு பேருதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தி இந்து நாளிதழ் வெளியிட்ட தெற்கிலிருந்து சூரியன் என்ற புத்தகத்திற்காக என் ராம் அவர்கள் எழுதிய “கலைஞராக இருப்பதன் முக்கியத்துவம்” என்ற கட்டுரையை உங்களுக்கு தருகிறேன். படியுங்கள், நிதானமாக.
கலைஞராக இருப்பதன் முக்கியத்துவம்
இந்திய அரசியலின் மிக மூத்த ராஜதந்திரியும், பன்முகத்தன்மைக்கு வரலாற்று உதாரணமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அரசியல் களத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் இன்னொருவரால் எட்டவோ மிஞ்சவோ கூடியவை அல்ல. இந்தியாவில் வேறு எவரும் தன் கட்சிக்கு இத்தனை நீண்ட காலம் தலைமை வகித்தது கிடையாது. அண்ணா மறைந்ததிலிருந்து திமுகவில் எதிர்ப்பே இல்லாத தலைவராக நீடித்தவர். தமிழக முதல்வராக ஐந்து முறை அவர் பதவி வகித்ததோடு, இந்திய அரசியலிலேயே தனித்துவராக 60 ஆண்டுகள் தொடர்ந்து தான் போட்டியிட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் வென்றிருக்கிறார். அறிவார்த்தமும் இலக்கிய நயமும் வலாற்றுப் பின்னணியும் குத்தலும் நகைச்சுவையும் கொண்ட உணர்ச்சியூட்டும் அவரது பேச்சாற்றல் அவருடைய கட்சி, திராவிட இயக்கத்தைத் தாண்டி மாநிலத்துக்கான உரிமைகளைப் பெற்றிட தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெரிய சொத்து.
அரசியலைத்தாண்டி 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலை, இலக்கியம், இதழியல் துறைகளில் அவர் அளித்துவரும் பிரமிப்பூட்டும் பங்களிப்பு ஏனைய அரசியல் தலைவர்களிடமிருந்து அவரைத் தனித்துக்காட்டுவதாகும். 1968 ஏப்ரல் – மே மாதங்களில் முதல்வர் அண்ணா வாஷிங்டன் வந்திருந்தபோது கொலம்பியா பல்கலைக்கழக இதழியல் மாணவனாக நான் உடன் சென்றிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969 இல் புதிய முதல்வர் கலைஞரை ‘தி இந்து’ நாளிதழின் இளம் நிரூபராகச் சந்தித்தேன். அன்று தொடங்கி, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுவரை நெருங்கும் எங்கள் இடையேயான நட்பு ஒரு அரசியல் பத்திரிகையாளர் – அரசியல் தலைவர் இடையிலான தொழில்ரீதியிலான உறவுக்கு அப்பாற்பட்டது.
எல்லாக் காலகட்டங்களிலும் எளிதில் அணுகக்கூடியவராகவும் அவருடைய கருத்துக்களோடு உடன்பாடில்லாவிட்டாலும் விமர்சித்தாலும் நட்பு பாராட்டக்கூடியவராகவும் அவர் இருந்திருக்கிறார். அரசியல், வரலாறு, இலக்கியம், – சில வேளைகளில் கிரிக்கெட் என்று பலதும் அவருடன் விவாதித்திருக்கிறேன். பள்ளிப்படிப்பை முடிக்காதவராக இருக்கலாம். மிகச் சில அரசியல்வாதிகள்தான் அவரைப்போல ஆழ்ந்த படிப்பாளிகள், அயராத எழுத்தாளர்கள், கலைஞரின் வாசிப்பு ஆர்வம் காலையில் ‘தி இந்து’ நாளிதழில் தொடங்கி விரிவடையும். பேசும் வார்த்தைகளுக்கும் எழுதும் எழுத்துக்களுக்கும் உள்ள மதிப்பையும் வலிமையையும் உணர்ந்த தலைசிறந்த தேசியத் தலைவர்கள் வரிசையில் வருபவர் கலைஞர். திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா ஆகியோரின் வரிசையில் வைக்கத்தக்கவர்.
மேடைப் பேச்சாளர், பத்திரிகையாளர், திரைபட கதை – வசனகர்த்தா, கவிஞர் என்று பல முகங்களைக்கொண்ட கலைஞருக்கு எழுதுவது யோகா போல – தினமும் செய்ய வேண்டிய பயிற்சி. அவர் நிறுவிய முரசொலிக்கு அவர் எழுதியது மட்டுமே பல லட்சம் வார்த்தைகளைத் தாண்டும். திராவிட இயக்கத்தை அருகிலிருந்து கவனிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் எனக்குத் தொடக்கத்திலிருந்தே அரசியல் ரீதியான ஆர்வம் இருந்தது. 1979 பிப்ரவரி எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழில் திராவிட இயக்கம் தொடர்பாக நான் எழுதியிருந்த கட்டுரை நினைவுக்கு வருகிறது.
திமுக போன்ற கட்சிகள் பிராந்திய கட்சிகள் என்றும் இந்திய ஜனநாயகத்துக்கு இரண்டு கட்சி ஆட்சி முறைதான் நல்லது என்றும் ஆணவத் தோரணையில் தேசியர்கள் தெரிவித்த கருத்துக்களை அந்தக்கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தேன். மாநில உரிமைகளையும் சுயாட்சியையும் வலியுறுத்தும் திமுகதான் இப்படிப்பட்ட அதிகாரக் குவிப்புவாதத்துக்குச் சரியான ஜனநாயக பதிலடி என்றும் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிக உயர்ந்த சமூக, அரசியல், வரலாற்று முக்கியத்துவம் இருப்பதை என்னுடைய பல கட்டுரைகளில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆதிக்க சாதியினரின் அடக்குமுறை, மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனமான சமூகப் பழக்கவழக்கங்கள், பகுத்தறிவற்ற சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக முற்போக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் மீது எனக்கு மதிப்பு உண்டு.
கலைஞரின் தோள்களிலேயே இந்திய அரசியல் போக்குகளின் ஊடாக அடுத்தடுத்து மாற்றங்களைக்கொண்டு திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு தனித்த பாதையை அமைக்க வேண்டிய பிரதான பொறுப்பு ஏறியது. இந்தச்சவாலை நம்பிக்கை, துணிச்சல், இடையறாத முயற்சி, சிறந்த வியூக ஆற்றல் ஆகியவற்றோடு அவர் தொடர்ந்து எதிர்கொண்டார். அண்ணா தலைமையில் 1967 இல் திமுக பெற்ற வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் எப்படி ஒரு முக்கியமான நிகழ்வோ, அப்படி 1969 இல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசை கலைஞர் ஆதரித்ததும் முக்கியமான நிகழ்வானது.
அன்று தொடங்கிய தேசிய அரசியலுடனான அவருடைய கூட்டணி மன்மோகன் சிங் தலைமையிலான சமீபத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி வரையில் தொடர்ந்து இந்திய அரசியலின் பாதையையே மாற்றியிருக்கிறது. அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அவர் வல்லவர். தோழமைக் கட்சிக்காரராக அவர் காட்டும் நீக்குப்போக்கான அணுகுமுறையும் சமயங்களில் காட்டும் உறுதியும் கண்டிப்பும் மாநில தேசிய அரசியலை வழிநடத்தியுள்ளன.
ஒரு முதல்வராக நிர்வாகத் திறமை, பிரச்சனைகளை வேகமாகக் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், விரைந்து முடிவெடுக்கும் சுறுசுறுப்பு, அரசியல் நாகரிகம், எளிதில் அணுகக்கூடிய தன்மை, சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பலன் தரும் சமூகநலத் திட்டங்கள் போன்றவற்றுக்காக அறியப்படுபவர் கலைஞர். அரசியல்ரீதியாக அவரை விமர்சித்தவர்களும் எதிர்த்தவர்களும் அனேகம். ஆனால், அவர்களுடனும் நல்ல நட்பைத் தொடர்ந்துவந்தார். திமுகவிலிருந்து விளக்கப்பட்டபிறகு, அதிமுகவைத் தொடங்கி வெற்றிகரமாக வலம்வந்த எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இடையே நிலவிய பரஸ்பர அன்பும் மரியாதையும் கொண்ட நட்பையே ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
சட்டமன்ற நிகழ்ச்சிகளுக்குக் கருணாநிதி தரும் மரியாதையும் அதில் பங்கேற்பதில் அவர் காட்டும் ஆர்வமும் அசாதாரணமானவை. பேரவை விவாதங்களில் மாற்றுக்கருத்துக்களை நாசூக்காகத் தகர்ப்பதிலும் தன்னுடைய கருத்துக்களைப் புகுத்துவதிலும் சமர்த்தர். மாற்றுக்கட்சியினரின் கருத்துக்களை ஏற்பதிலும் தன்னுடைய கருத்துக்களை ஏற்க வைப்பதிலும் சிறந்த ஜனநாயகவாதி. மன்றத்தில் பேசுகையில் அவர் குரலில் ஆணவமோ ஆதிக்க உணர்வோ எள்ளலோ என்றைக்குமே எதிரொலித்ததே கிடையாது.
நாடு முழுவதுமே உள்ள முதல்வர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இந்த விஷயத்தில் அவர் நல்ல உதாரணர். கலைஞர் எப்போதும் முக்கியமானவர். வெறுப்பரசியலும் வகுப்புவாதமும் ஒற்றைக் கலாச்சாரமும் தலையெடுக்கும் காலகட்டத்தில் அவருடைய முக்கியத்துவத்தை நாடு மேலும் உணர்கிறது.
என் ராம் மூத்த பத்திரிகையாளர், தி இந்து பாதிப்புக் குழுமத் தலைவர்.
மேலும் சில கட்டுரைகள் : கருணாநிதியை பிடிக்காதவர்கள் படிங்க ஏன் கருணாநிதியை பிடிக்கிறது? காமராஜருக்கு இடம் தர கருணாநிதி மறுத்தது உண்மையா ? கருணாநிதி குறித்து தலைவர்கள் சொன்னது? கலைஞர் கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை
1976 ஆட்சி கலைக்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா?
Get Updates in WhatsApp
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!