மெசியாவின் காயங்கள் : ஜெ. பிரான்சிஸ் கிருபா

மெசியாவின் காயங்கள் – சிற்பி

என் களைத்த பெருமூச்சு
மலைராணியின்
சிரசிலடித்து எதிரொலித்தது

உச்சி நீவிய மேகங்கள்
என் வித்தையில் கண் பதித்து
மெச்சிக் கொண்டலைந்தன

உளியும் சுத்தியும் ஏந்திய மந்தியாக
தாவித் திரிந்தேன் நெட்டுயர்ந்த
கல்விருட்சத்தின் திரேகமேங்கும்

கல் நரம்புகளை இழுத்து முறுக்கினேன்
மத்தளங்களைச் செதுக்கினேன்
புல்லாங்குழலில் கண்கள் திறந்தேன்
சிற்ப சங்கீத சிருஷ்டி நிறைவுற்றது

அருவிக்காலமோ
நூறு பிறைகளுக்கப்பால்
நொண்டி நொண்டி வந்துகொண்டிருந்தது

பொறுமையின்றி
கற்பனை நதியைக் கொட்டிக் கவிழ்த்தேன்
பருவத்தின் வாசலில்
வெள்ளமும் நுரையுமாய்
சுழித்து ஓடி வர
குறுகின இசைக்கண்ணிகள்

பீறிட்டெழுந்தது
தாகத்தின் நித்திய சங்கீதம்
பிடிபட்டது ஒலியின் சிற்பம்
உளியின் துல்லியத்தில்

அதற்கென்றே மிச்சம் வைத்திருந்த
ஒரேயொரு சிறுபாறையில்
வடிக்கத் தொடங்கினேன்
கர்வம் படர்ந்த என் முகத்தை
உளியின் முதற்தீண்டலில்
மௌனம் கலைந்து
நடக்கத் துவங்கிற்று பாறை

Share with your friends !