கண்ணதாசன் கவிதைகள்

காக்கை குருவியைப்போல்

காக்கை குருவியைப்போல்

கவலையின்றி நீயிருந்தால்

யாக்கை கொடுத்தவனை

யார்நினைப்பார் இவ்வுலகில்

சட்டியிலே வேகின்ற

சத்தெல்லாம் சரக்கானால்

மட்டின்றிப் படித்துவந்த

மருத்துவர்க்கு வேலையென்ன

கடலருகே வீற்றிருந்தும்

கடுந்தாகம் வரும்பொழுதே

கடவுளெனும் ஒருவனது

கைசரக்கு நினைவுவரும்

இன்னதுதான் இப்படித்தான்

என்பதெல்லாம் பொய்க்கணக்கு

இறைவனிடம் உள்ளதடா

எப்போதும் உன்வழக்கு

எல்லாம் அவன்செயலே

என்பதற்கு என்ன பொருள்

உன்னால் முடிந்ததெல்லாம்

ஓரளவே என்று பொருள்.

 

—————-

கண்ணதாசனுக்கு கண்ணதாசன் பதில்!

அறிவியல் வளர்ந்த பின்பும்

அணுவையும் துளைத்து மேவும்

பொறியியல் மிகுந்த பின்பும்

புதுமைகள் நிறைந்த வீர

நெறிபல கண்ட பின்பும்

நிகரிலாத் தலைவ னென்றே

துறவியைக் காட்டும் வீணர்

தொலைந்தன ரிலையே தோழா!

சங்கராச்சாரியார்தான்

தலைவராம் உலக மாந்தர்

பொங்கியாச் சாரி காலில்

போய் விழல் தரும வாழ்வாம்!

இங்குளர் இளித்த வாயர்

என்பதால் துறவி யான

சங்கராச் சாரி யாரை (த்)

தாங்குவோர் உளரே இன்னும்!

வகுத்ததோர் உலகின் வாழ்க்கை

வழியறி யாத மாந்தர்

பகுத்தறி விழந்து போனார்!

பண்பினை மறக்கலானார்!

தொகுத் தறியாத தாலே

துறவிகளானோர் பாதம்

வழித் தெறிகின்றார்! அந்தோ வாழுமோ தமிழர் பூமி!

Share with your friends !