ஜோதிடம் ஒரு கலை என்ற அளவில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை
இன்று பலரது படிப்பு, திருமணம் உட்பட பல விசயங்களில் ஜாதகம் ஆதிக்கம் செலுத்துகிறது. கேள்விகளுக்கு உட்படுத்தப்படாத பொக்கிஷமான விசயமாக மக்கள் ஜாதகத்தை கருதுகிறார்கள். தெய்வ நம்பிக்கை கொண்ட கலாம் அவர்கள் ஜாதகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் இங்கே உங்களுக்காக.
கேள்விகளை ஒதுக்குவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல் எனவும் அப்படி செய்திட கூடாது எனவும் வலியுறுத்தி கடந்த பதிவில் நான் எழுதியிருந்தேன். இந்தப்பதிவும் கூட, நாம் கேள்விகளுக்கு உட்படத்தாமலேயே ஒவ்வொருவர் வாழ்விலும் பின்பற்றிவரக்கூடிய ஒரு விசயம் பற்றியது தான். ஆம், ஜாதகம் தான் அது. ஒரு குழந்தை பிறந்தவுடனேயே எழுதுவதில் துவங்கும் ஜாதகத்தின் பங்கு அந்த மனிதரின் படிப்பு, திருமணம் உட்பட வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளிலும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
கேள்விக்கு உட்படுத்தாத பொக்கிஷம் ஜாதகம்
எனது அனுபவத்தின்படி ஜாதகம் பார்க்கிறவர் சொல்லிறபடி நடந்துவிட்டால் அவரைப்பற்றி ஆகா ஓகோ எனப்பேசும் மக்கள் அதே ஜாதகப்படி நடக்காவிட்டால் லாவகமாக மறந்து செல்கிறார்கள். இதனைத்தான் “கேள்விகளை புறந்தள்ளுதல்” என குறிப்பிட்டிருந்தேன். எந்தவொரு விசயமானாலும் அது குறித்து சந்தேகம் எழுப்புவதோ ஆக்கபூர்வமான கேள்விகளை கேட்பதோ நிச்சயமாக நியாயமானதே. புனிதம் என்ற போர்வைக்குள் கேள்விக்கு பயந்துகொண்டு ஒளிந்துகொள்ளும் எந்தவிசயமும் பின்பற்ற உகந்தது அல்ல.
ஜாதகம் பற்றி பல கருத்துக்கள் இங்கே இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் அக்னி சிறகுகள் புத்தகத்தில் கலாம் அவர்கள் ஜாதகம் குறித்து எழுதியிருக்கும் கருத்துக்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. சராசரி மனிதர்களைவிடவும் இறை நம்பிக்கையும் அனைத்து மதங்களின் உயர்வையும் உணர்ந்தவர் நம்முடைய முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள். அவர் ஜாதகம் பற்றி இப்படித்தான் குறிப்பிடுகிறார்….
சூரியக்குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும் அக்கறையும் வந்திருக்கிறது? அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்க்காகப் இப்படி பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிகமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை. ஜோதிடம் ஒரு கலை என்ற அளவில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரகங்கள், நட்சத்திர மண்டலங்கள், துணைக்கோள்கள் பற்றியெல்லாம் கூட எப்படி மக்களுக்கு மாயை பிறந்தது? தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப்படைகின்றன என்று எப்படி மக்கள் நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.
விண்கோள்களின் அசாதாரணமான இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளை கூட்டிக் கழித்துப்பார்த்து இட்டுக்கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. இதோ என் கண்ணெதிரே தெரிகிற பூமிதான் அபார சக்தி கொண்ட ஆற்றல் நிறைந்த கிரகம். இழந்த சொர்க்கம் என்ற காவியத்தில் ஜான் மில்டன் இதைப்பற்றி எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார் என்று பாருங்கள்
…கதிரவனும், மற்ற விண்மீன்களும் உலகின் மையமாக இருந்தால் என்ன… நிலையாகச் சுழல்வதுபோல் தோன்றும் பூமிக் கிரகம், அறிவார்ந்த முறையில் மூன்று வெவ்வேறு இயக்கத்தில் சுழல்கிறதா?
முடிவுக்கு வருவோம்
அறிவியல் என்பது எந்த சூழ்நிலையிலும் மாறாதது. அதுவே உண்மை என்பதும். குழந்தையென்றால் ஆண் அல்லது பெண்ணாக பிறக்க வாய்ப்புண்டு. இதில் ஒன்றைக்கூறி நடந்தால் கொண்டாடுவது இல்லையேல் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது எப்படி சரியான விசயமாக இருக்க முடியும்.
கேள்விகளை எழுப்புவோம்
உண்மைகளை அடைந்திடுவோம்
கலாம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக ஜோதிடத்தை நம்ப வேண்டாம் என்று கூறவில்லை. அது உண்மையென நம்புகிறவர்கள் உண்மைத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துங்கள் அதன் மூலமாக நீங்களாகவே உண்மையை உணருங்கள் என்பதே நமது கருத்து
இதையும் படிங்க
அப்துல்கலாம் அவர்களை இளமையில் செதுக்கியவர்கள் இவர்களே
இன்னும் அப்துல்கலாம் ஐ மறக்க முடியவில்லையே ஏன் ?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!