ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதனை நீங்கள் எடைபோட விரும்பினால் அவர் சரியான கேள்விகளை கேட்கிறாரா என்பதை கவனியுங்கள். சரியான கேள்விகள் தான் அதற்கான “பதில்கள்”
பலவிதமான மனிதர்களைக் கொண்டது தான் இந்தச் சமூகம். கருத்துக்கள் தான் ஒரு மனிதனுக்கு அடையாளம் அளிக்கின்றன. அப்படி நாம் கொண்டிருக்கக்கூடிய கருத்துக்கள் சரியானவையா? உகந்தவையா? பிறருக்கு தீங்கு இழைக்கக்கூடியவையா? குறைந்தபட்சம் உண்மையானவையா என்பதைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாமல் தான் கொண்டிருக்கும் கருத்தில் ஆணி அடித்தது போல இருக்கும் பலரும் இருக்கவே செய்கிறோம். கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஏதோ ஒரு விசயத்தை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நம்பிக்கொண்டு இருப்போம்.
அறியாமையை நாம் பெரிய பொக்கிஷம் போல காத்து வருகிறோம்
இப்படி நாம் ஒரு விசயத்தை குறைந்தபட்ச கேள்விகளுக்குக் கூட உட்படுத்தாமல் பின்பற்றும் போது நம் வாழ்க்கைக்கும் நம்மை சார்ந்தவர்கள் வாழ்க்கைக்கும் பெரிய தொந்தரவாகவே அமைந்து விடுகிறது. [அப்படி நீங்கள் பின்பற்றும் ஒரு விசயத்தை கமெண்டில் பதிவிடுங்கள்]. நம்மில் சாதாரணமாக தொடங்கும் இவ்விசயம் நாளடைவில் ஒரு முறைமையாக [தவிர்க்க முடியாத பழக்கவழக்கமாக] மாறிப்போகும்.
நானும் இப்படி பல விசயங்களை கேள்விகளுக்கு உட்படுத்தாமல் பின்பற்றி வருகிறேன், அதற்கு உடனடி தீர்வு என்ன என நீங்கள் கேட்டால்,
நீங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுகிற அந்த விசயத்தை விட்டு சற்று தூரமாக பற்றுதலை புறந்தள்ளிவிட்டு செல்லுங்கள். தற்போது இணையம் இருக்கிறது, அதிலேயே நீங்கள் பல்வேறு தகவல்களை தேடிப்பெற முடியும். அதேபோல நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் விசயம் சார்ந்து இயங்கக்கூடிய பல நபர்கள் இருப்பார்கள் அவர்களை தேடிச்செல்லுங்கள். அவர்கள் சொல்லுவதை தலையாட்டி கேட்பதை விட்டுவிட்டு “உங்களுக்குள் எழும் சரியான கேள்விகளை கேளுங்கள்”.
உங்களுடைய சரியான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமையை உங்களுக்கு முன்னால் இருப்பவர் கொண்டிருந்தால் நீங்கள் சரியான நபரை அடைந்துள்ளீர்கள் என அர்த்தம். உங்களுடைய கேள்விகளைக்கண்டு அஞ்சினால் அல்லது கோபம் கொண்டால் உங்களைப்போலவே தான் அவரும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஒரு விசயத்தை நம்பிக்கொண்டு இருப்பவரே. அவரை விட்டு அகலுங்கள்.
நீங்கள் பின்பற்றும் ஒரு விசயம் குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான பதிலை உங்களால் கூற முடியவில்லை எனில் நீங்கள் பின்பற்றுகிற விசயம் சரியானது இல்லை
உங்களுடைய வாழ்க்கையில் சில விசயங்களை பின்பற்றலாம்,
1. நீங்கள் ஒரு விசயத்தை தவறாக புரிந்துகொள்வதற்கு காரணம் “அடிப்படை கேள்விகளுக்கு விடை தெரியாமல் நம்புவது தான்”
2. கேள்விகளுக்கு விடை தெரிந்தவர் தான் புத்திசாலி என்றில்லை. சரியான கேள்விகளை கேட்கக்கூடியவரும் புத்திசாலி தான்.
3. புதிய நாள் பிறந்தால் புதிதாக ஒரு விசயத்தை நாம் கற்றுக்கொண்டாக வேண்டும். புதிதாக நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டுமெனில் கேள்விகள் கேட்பதனை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. நமக்கு நாமாகவே பதில்களைக்கூறிக்கொண்டு, நாமே முடிவுகளை எடுத்துக்கொண்டு நாம் ஒரு விசத்தை நம்புவோமாயின் அது பிரச்சனையாக அமையும்.
5. நாம் நம்பிக்கொண்டிருக்கும் விசயங்கள் நமக்கு சாவகாசமாக இருக்கிறது என்பதாலேயே அதை ஏற்றுக்கொள்ளுதல் நல்லதல்ல.
6. அவர் பெரிய ஞானி ஆயிற்றே நான் மிக சாதாரணமானவன் ஆயிற்றே, நான் எப்படி எனது கேள்விகளை அவரிடத்தில் கேட்பேன் என எண்ணி அஞ்சுதல் வேண்டாம். உண்மையாலுமே அவர் ஞானி என்றால் உங்களது சரியான கேள்விகளால் அவர் ஆனந்தமே அடைவார்.
7. நீங்கள் பின்பற்றும் ஒரு விசயம் குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான பதிலை உங்களால் கூற முடியவில்லை எனில் நீங்கள் பின்பற்றுகிற விசயம் சரியானது இல்லை என்பதே எதார்த்தம். நீங்கள் அதற்கு என்ன சாக்குபோக்கு வேண்டுமானாலும் சொல்லி சமாளிக்கலாமே தவிர உண்மையாக இருக்காது.
இன்னும் பல்வேறு விசயங்கள் இருக்கின்றன. வரும் நாட்களில் அவற்றை காண்போம்.
சுய முன்னேற்றம் சார்ந்த கட்டுரைகளை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!