க/பெ ரணசிங்கம் : எப்படி இருக்கிறது படம்?

பெயர்போடும்போதே ஒலிக்கின்ற பாடல் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறவர்களின் வலியை பற்றிய படமிது என்பதை உணர்த்துகிறது . சொந்த ஊரில் ஆட்டுக்குட்டிகளை விற்று வெளிநாட்டில் ஒட்டகம் மேய்க்கப்போறியா எனும் பாடல்வரிகள் அற்புதம் .

படம் ஆரம்பித்தவுடன் சில நிமிடங்களில் படத்தின் நாயகன் ரணசிங்கம் வெளிநாட்டில் இறந்த செய்தி கிடைக்கிறது . இனி படத்தின் கதைதான் என்ன என பார்க்கும்போது தான் ‘வெளிநாட்டில் இறந்துபோன கணவரின் உடலை சொந்த ஊருக்கு  கொண்டுவந்து கடைசிக்காரியங்கள் செய்திட வேண்டும் என்ற அடிப்படை உரிமைக்காக ஒரு மனைவி எவ்வளவு போராட்டங்களை நடத்தவேண்டி இருக்கின்றது’ என எடுத்துரைக்கிறது .

32000 + பேர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது . அதில் பல குடும்பங்களுக்கு உடல்கள் வந்துசேரவில்லை , தவறான உடல்கள் வந்திருக்கின்றன , பல மாதங்கள் கழித்து உடல் வந்திருக்கின்றன என்பது போன்ற பல விசயங்கள் மனதை உலுக்குகின்றன .

ரணசிங்கத்தின் உடலை கொண்டுவருவதற்கு அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் போராடிடும் மனைவியின் வலியினை அதிகாரிகள் உணராமல் அலைக்கழிக்கும்போது நெஞ்சு பதறுகிறது. ஓரளவிற்கு தைரியமான பெண்ணாக இருப்பதனாலும் இறுதியாக ஒரு பெண் நிருபரின் உதவியினாலும் பிரதமரை அணுகும் வாய்ப்பு கிடைக்கிறது .

பிரதமரும் பொறுமையாக விவரத்தை கேட்டறிந்து நகரப்போவதில்லை பிரச்சனை முடியும்வரை என முடிவெடுக்க துபாயில் இருந்து ரணசிங்கத்தின் உடல் அவசர அவசரமாக அனுப்பப்படுகிறது .

இறுதியாக ரணசிங்கத்தின் உடல் வந்துவிட்டதே என ஆறுதல் அடையும்போது தான் , மனைவியான அரியநாச்சி அவருடைய பெயர் வந்த பிணத்தின் கைகளில் பச்சைகுத்தப்படாதது குறித்து கண்டறிகிறார் . ஆம் , அது ரணசிங்கத்தின் உடல் அல்ல .

பிரதமர் இந்த பிரச்சனையில் தலையிட்டபின்னரும் கூட இந்திய அதிகாரிகள்  தனியார் நிறுவனத்துடன் இணைந்து இப்படியொரு தவறை நிகழ்த்திட முடியுமென்பது ஆச்சர்யமாக இல்லை , அதுவே எதார்த்தமான உண்மை என்பதனை கதை வலியுறுத்துகின்றது .

உத்தரவு எவ்வளவு பெரிய இடத்திலிருந்து வந்தாலும்கூட நிறைவேற்றவேண்டிய அதிகாரி மனது வைக்காதவரை பொதுமக்களுக்கு உண்மையான பலன் கிடைக்காது என்பதற்கு மிகச்சரியான உதாரணம் .

இதுதவிர பல அரசியல் விசயங்களை அற்புதமாக பேசியிருக்கிறது திரைப்படம் , விஜய் சேதுபதியின் எதார்த்தமான குரலும் நடிப்பும் வலுசேர்க்கிறது . ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் . 

வெளிநாடு வாழ்க்கை வலிநிறைந்தது .

பார்க்க வேண்டிய திரைப்படம் கணவர் பெயர் ரணசிங்கம் .

பாமரன் கருத்து 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *