இறையுதிர் காடு புத்தகம் | போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய படிக்கலாம்

புத்தகத்தின் பெயர் : இறையுதிர் காடு

ஆசிரியர் பெயர் : இந்திரா சௌந்தர்ராஜன்

பதிப்பகம் : விகடன் பிரசுரம்

பக்கங்கள் : 1104

விலை : ₹1375

Click Here To Download/Buy

 

இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு திரு சேதுராமன் அவர்கள் முகப்புத்தகத்தில் விரிவாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துக்கள் அப்படியே உங்களுக்காக….

அசைவில் தான் உலகம் இயங்குகிறது. கோள்கள், பூமி, காற்று, ஆறு என எல்லா இயற்கை சார்ந்த அசைவுகளே கால ஓட்டத்தை நகர்த்திச் செல்கிறது. அப்படி அசைய அசைய மனிதன் தனது செயல்களை செய்கிறான். செயல்கள் நன்மையோ அல்லது தீமையோ புரிகின்றது. அதற்கேற்ப கர்மங்களில் சிக்கி இந்த காற்றடைத்த உடலையும், மலஜலம் புரியும் சரீரத்தையும் மனிதனின் ஆன்மா சுமந்துகொண்டு திரிகிறது. அந்த அசையும் தன்மையே விடுத்து அசையா தியானத்தில் அமர்ந்து தன்னையே அறிதல் என்னும் நிலையை அடைவதே சித்தம் எனப்படும். அத்தகைய மனிதத்துவத்தை கடந்த மாமனிதர்களை நாம் சித்தர்கள் என்கிறோம்.

 

அத்தகைய சித்தர்களின் பின்புலத்தை மையமாக வைத்து புனையப்பட்ட ஒரு அமானுஷ்ய த்ரில்லர் புதினம் தான் இந்த இறையுதிர் காடு. பழனி முருகன் சிலையை நவபாஷாணத்தால் உருவாக்கிய போகர் சித்தரின் நோக்கம் குறித்தும், அதன் பின்புலத்தை குறித்தும், நடப்பு காலத்தில் இதுபோன்ற சித்துக்களை அறிய முயலும் நவநாகரீக மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் சித்த ஏடுகளின் மூலம் சில ரகசியங்களை தெரிந்து கொண்டு அதை சுயநலத்திற்கு பயன்படுத்த நினைக்கும் ஒரு கதையை இந்த புத்தகம் விவரிக்கிறது.

ஆசிரியர் கதையை இரண்டு கோணத்தில் இரண்டு முனைகளாக நெருக்கிக் கொண்டே வந்து இறுதியில் இருமுனைகளையும் இணைந்திருப்பார். அது ஆசிரியரின் ஒரு தனித்த நடைமுறை. அவரது புத்தகங்கள் பெரும்பாலும் இதே பாணியை கொண்டிருக்கும்.


முதலில் முற்காலத்தில் நடந்த கதையாக போகர் நவபாஷாண சிலையை செய்ய மேற்கொள்ளும் முயற்ச்சிகளையும் அதனை செய்ய முற்படும் முன் ஒரு நவபாஷாண லிங்கத்தை செய்து பிறகு முருகன் சிலையை செய்ததாகவும் ஆசிரியர் கூறியிருப்பார். மற்றொரு முனையில் தற்காலத்தில் அந்த சிவலிங்கத்தை கைப்பற்ற துடிக்கும் ஒரு கூட்டத்தையும் அந்த சிவலிங்கத்தை போகரிடமே சேர்க்க போராடும் நாயகி பாரதி என்ற பெண்ணின் கதையையும் கூறி, இறுதியில் இந்த இரு முனை கதையையும் ஒரு முனையில் முடித்திருந்தார் ஆசிரியர்.

 

அதாவது நான் இந்த இருமுனை கதையை இரண்டு பிரிவாக பிரிக்க நினைக்கிறேன். ஒன்று அருட்பிரிவு மற்றொன்று பொருட்பிரிவு. இந்த அருட்பிரிவு எனப்படும் போகர் வரலாற்றை சித்த தத்துவ பெருங்கடல் என்று கூறலாம். அந்த அளவிற்கு போகர் தன் சீடர்களுக்கு உபதேசிக்கும் தத்துவங்களையும் மூலிகை ரகசியங்கள் மற்றும் இயற்கை பரிணாம கருத்துக்களையும் நிறைந்து தருகிறது இந்த பகுதி.

 

மற்றொரு முனையான பொருட்பிரிவில் தற்கால த்ரில்லர் அமானுஷ்ய கதைப்போக்கில் கதையை நகர்த்தியிருப்பார் ஆசிரியர். இதில் ஒவ்வொரு அத்தியாயமும் முதலில் “அன்று” என அருட்பிரிவையும் “இன்று” என்ற பொருட்பிரிவையும் இணைந்தே பயணித்து வரும்படி புத்தகத்தை ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

 

போகர் தான் உருவாக்கிய நவபாஷாண முருகன் சிலையை பொதினி மலையில் நின்று அருளும் சிலையாகவும், அதே நவபாஷாணத்தில் செய்த சிவலிங்கத்தை 12 வருடத்திற்கு ஒருவரிடம் வீதம் மாற்றி மாற்றி பூஜித்து வரும்படியும் ஏற்பாடு செய்திருப்பார். அந்த லிங்கத்தோடு இணைந்த ரசவாதம் பற்றிய குறிப்பு அடங்கிய சுவடி, காலபலகணி என்ற காலத்தை கணிக்கும் சுவடி, முதுமையை தடுக்கும் சுவடி, பல கற்ப சூத்திரங்கள், பல மருத்துவ சுவடிகள், மூலிகை இரசமணிகள் என பல சுவடிகளும் பொருட்களும் அடங்கிய ஒரு பெட்டிதான் 12 வருடத்திற்கு ஒருவரிடம் அளிக்கப்படும்.

 

அப்படி தொடர்ந்து ஆள் மாறி கை மாறி வரும் பெட்டியானது தற்காலத்தில் ஒரு சித்தராகிப்போன ஜமீன்தார் பங்களாவில் இருப்பதை கைப்பற்ற அதனை அடைய முயற்சிக்கும் மனிதர்களின் கதையையும் கலந்து தந்திருக்கிறார் ஆசிரியர்.

 

இதில் ஆசிரியர் எதையும் மேம்போக்காக கூறாமல் போகர் பிரான் வாழ்க்கை சரிதத்தையும் அவரின் நூல்களை வைத்தும் அடிப்படையாக கூறியிருப்பார். என் தனிப்பட்ட தேடலில் நவபாஷாண சிலையாக தற்போது பழனியில் உள்ள முருகன் சிலை மட்டுமல்லாது கூடவே பல தேடல் நிறைந்த அறிஞர் பெருமக்களும் கூறும் கருத்துக்களில் சித்தர்கள் வசம் இருக்கும் ஒரு சிவலிங்கமும் எங்கேயாவது இடம்பெற்று விடுகிறது.

அதாவது ஒருசிலர் அதை மானசலிங்கம் என்றும், ஒருசிலர் அதை ஜெகவல லிங்கம் என்றும் இன்னும் பலபெயரால் மறைமுகமாக குறிப்பிடுவதை என்னால் அறிய முடிகிறது. இதுபோன்ற ஒரு அதிசய லிங்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு முன் இதை  மறைமுகமாகவாவது அல்லது புனைவுக்காகவாவது இதுபோல் ஒரு சிவலிங்கத்தை பற்றி இதே சித்தவியல் ஆய்வில் ஈடுபடும் பலரும் சிலபல நூலாசிரியர்களும் தொடர்ந்து குறிப்பிட்டுக் கொண்டே வருகின்றனர். இதன் காரணம் சில பழமையான ஏடுகளில் பலவற்றிலும், சித்தர்களின் நூல்களிலும், சதுரகிரி, பொதிகை மலை, கொல்லிமலை போன்ற சித்தர்கள் வசிக்கும் பகுதியாக நம்பப்படும் பகுதிகளிலும் இதற்கான மறைகுறிப்புகள் இருப்பதால் அதனை குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்கலாம்.


கதையின் நாயகியாக வரும் பாரதி, உண்மையை மட்டுமே நம்பும் ஒரு எதார்த்தவாதி, பாரதி ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்லாமல்  எம்பி ராஜமகேந்திரனின் மகளாகவும் வருகிறாள். கதையில் பல கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்துவமான இடம் உள்ளது. பாரதியை சுற்றி நடக்கும் பல விடையில்லாத சம்பவங்கள் கதையில் சுவாரஸ்யமாக ஆனால் பின்னால் தெளிவாக விடையளிக்கும் சம்பவங்களாக நடக்கிறது.

 

சிவலிங்கம் மற்றும் சித்த ரகசியங்கள் நிறைந்த சுவடிகள் அடங்கிய, எப்போதும் விபூதி வாசம் உடைய ஒரு பெட்டி, அதனை எப்போதும் தொடர்ந்து நிற்கும் ஒரு ராஜநாகம், உறையை விட்டு எப்போது வெளியே எடுத்தாலும் ரத்தக்காயம் வாங்கும் ஒரு பழமையான வாள், ஜமீன் பங்களா விற்கப்பட்டவுடன் நடக்கும் திடீர் மரணங்கள், பாரதியின் தந்தை உட்பட மூவர் திடீரென விபத்தால் ஆபத்து நிலையை அடைவது என கதை முழுக்க முழுக்க ஒரு த்ரில்லர் அனுபவத்தை தருகிறது. இதில் பெட்டி, அதை காவல் காக்கும் பாம்பு என்ற பழைய சந்திரமுகி கதை போல அல்லாமல் போரடிக்காமல் கதையை நகர்த்தியது சாமர்த்தியம்.

 

ஆனால் இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு போகர் சித்தர் தன் சீடர்களுக்கு கூறும் உபதேசங்களும், புலிப்பாணி உட்பட சீடர்கள் அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு போகர் அளிக்கும் பதில்களும் நிறைந்த பகுதியை படிக்க சற்று சலிப்புடன் இருக்கலாம். அதே சமயம் தற்காலத்தில் நடக்கும் கதையாக கூறப்படும் மற்றொரு முனை கதை விருவிருப்பாக இருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் முதல் பாதியில் வரும் போகர் கதையை சலிப்புடனோ அல்லது விரைந்தோ படித்து அடுத்த பாதி அத்தியாயத்தில் வரும் சஸ்பென்ஸ் கதையை படிக்க ஆர்வமாகும் மனநிலைக்கு பலரும் வரக்கூடும்.

 

ஆனால் இப்புத்தகத்தின் உண்மையான சிறப்பே போகர் வரும் பகுதிகள் தான். ஒரு புனைவு கதையை த்ரில்லர் அமானுஷ்ய சஸ்பென்ஸ் கதையை எழுதுவதும் படிப்பதும் பெரிய வியப்பன்று. ஆனால் சித்தத்தையும் சித்தவியலையும் பற்றி எழுதியிருக்கும் விதம் ஆழ்ந்து படித்தாலோ அல்லது சித்தர்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இருந்தாலோ அவர்களுக்கு மேற்சொன்ன போகர் இடம்பெறும் பகுதிதான் உண்மையில் விருவிருப்பாக இருக்கும். 

 

வனத்தை பாதுகாத்தல், இயற்கையான தாவரங்களை மருந்தாகவும் சித்துக்களை பெற பயன்படுத்தும் முறையையும், மனிதன் என்பவர் யார் அவன் பிற உயிர்களையும் மரம் செடிகொடிகளையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், பிரபஞ்சம் என்றால் என்ன, எண்ணங்களில் அலைவரிசை என்ன செய்யும், வேதியியல் என்றால் என்ன, உலகம் அடையும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என்ன, என்ன நோய்க்கு என்ன மருந்து, எந்தவிதமான சிகிச்சை, ஒவ்வொரு தாவரங்களின் மருந்துத் தன்மை விஷத்தன்மை என்னென்ன என்பதுபோன்ற பல விசயங்களை சித்தர்களின் நூல்கள் அடிப்படையில் போகர் வரலாற்றில் ஆசிரியர் கூறியிருப்பது மிகச் சிறப்பு.

 

சதுரகிரி, கொல்லிமலை போன்ற சித்தர்கள் வசிக்கும் காடுகள் வெறும் இலைகளை மட்டும் உதிர்க்கவில்லை, இறையையும் உதிர்க்கின்றன. அதுதான் இறையுதிர் காடு.



மேலும் நூல்கள் பற்றி படிக்க….

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *