“சுதா சந்திரன்” இளமையில் காலை இழந்தாலும் உத்வேகத்தோடு போராடி வென்ற போராளி

வில் வித்தையில் சாதனை படைக்க நினைப்பவருக்கு கண் முக்கியமானது, ஓட்ட போட்டியில் சாதனை படைக்க நினைப்பவருக்கு கால் முக்கியமானது. இப்படி, ஒரு துறையில் சாதனை படைக்க ஏதாவது ஒரு உடல் அங்கம் முக்கியமானதாக இருக்கும். சாதனையின் பக்கத்தில் வந்து நிற்கும் போது மிக முக்கியமான உடல் அங்கத்தை இழக்க நேரிட்டால் மனது மனநிலை எந்த அளவிற்கு மோசமடையும் என்பதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆனால், எத்துனை தடைகள் வந்தாலும் தான் அடைய நினைத்த இலக்கை துரத்தி பிடிக்கும் சாதனையாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஓர் சாதனையாளர் தான் நடிகை, நடன கலைஞர் “சுதா சந்திரன்”. இவரை பலருக்கு நடிகையாக மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், அவருக்கு பின்னால் உள்ள வலி நிறைந்த பயணத்தை விவரிக்கிறது இந்தக்கட்டுரை.

மேலும் கட்டுரைகள் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சுதா சந்திரன் இளமைக்காலம்

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு நடிகையாக மட்டுமே அறியப்பட்ட சுதா சந்திரன் மும்பையில் தெலுங்கு பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். குழந்தையாக இருக்கும் போதே நடனம், நடிப்பு உள்ளிட்டவற்றில் அதீத ஆர்வத்தோடு இருந்தார். இதனை கவனித்த அவரது அப்பா, சிறுமியாக இருந்தபோதே ஒரு நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். 3 வயதிலேயே நடனம் ஆட கற்றுக்கொண்ட சுதா சந்திரன், தன்னுடைய 8 ஆம் வயதில் அரங்கேற்றம் செய்தார். நடனத்தில் எப்படி சிறந்து விளங்கினாரோ அதைப்போலவே கல்வியிலும் சிறந்து விளங்கினார். 16 வயதாக இருக்கும் போதெல்லாம் நடன உலகில் மிகப்பெரிய ஸ்டாராக வளம் வந்தார். அப்போதைய சூழலிலே 75 அரங்கேற்றங்களை அவர் செய்திருந்தார்.

எதிர்பாராத பேருந்து விபத்து

தனது 16 வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பேருந்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் அவரது வலது காலில் சில வெட்டுக் காயங்களுடன் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்தின் போது அவசர அவசரமாக சிகிச்சையை செய்துகொண்டு இருந்தார்கள் மருத்துவக்குழுவினர். அப்போது பயிற்சியில் இருந்த மருத்துவ குழு சுதாவிற்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. அவர்கள் காலில் இருந்த வெட்டுக்களை கவனிக்காமல் POP பிளாஸ்டரால் அவளது காலைச் சுற்றினர். இது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட காயங்களில் நோய் தொற்று ஏற்பட்டது. 

மேல் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தான் இதனை கவனித்தார்கள். ஆனால், அப்போது காலம் கடந்திருந்தது. நோய் தொற்று மேலும் பரவிவிடக்கூடாது என்பதற்காக அவரது வலது காலை முழங்காலுக்கு 7.5 அங்குலத்திற்கு வெட்டுவதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள். உயிரை காப்பாற்ற வேறு வழி எதுவும் இல்லை என்றபடியால் காலை அகற்ற ஒப்புக்கொண்டார்கள். நடன உலகில் சாதிக்க வேண்டும், மிகப்பெரிய பெயரை பெற வேண்டும் என்கிற கனவு அன்று சிதைத்து போனது. 

எதிர்மறை எண்ணங்கள் – மனச்சோர்வு, கோபம், விரக்தி என அனைத்தும் அவரை சூழ்ந்து கொண்டது.

மீண்டு எழுந்த சுதா சந்திரன்

நடனம் ஆட வேண்டும் எனில் கால்கள் அவசியம். நடன உலகில் சாதிக்கும் எல்லைக்கு பக்கத்தில் வந்த பிறகு காலை எடுக்கும் சூழல் உண்டானதை எண்ணி எண்ணி அவர் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தார். இனி அவ்வளவு தான், நமது நடன வாழ்க்கை இதோடு முடிந்தது என எண்ணினார். இந்த சூழலில் தான் அவருக்கு வழக்கமான மனநல மருத்துவரின் ஆலோசனை மற்றும் பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டன. இந்த ஆலோசனை மற்றும் பயிற்சிகள், கால்கள் இல்லாவிட்டாலும் தன்னால் மீண்டும் நடன உலகில் உச்சம் தொட முடியும் என்ற நம்பிக்கையை அவருக்குள் ஏற்படுத்தின. 

இதனை அடுத்து அவர் செயற்கை காலை பொருத்தி அதனைக்கொண்டு நடக்க முதலில் பழகிக்கொண்டார். பின்னர், அதே காலை பயன்படுத்தி நடனம் ஆட முயற்சி செய்தார். பல நேரங்களில் அவரது காலில் காயமும் இரத்தமும் கூட வந்தன. ஆனால், அவர் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சி செய்தார்.

ஜனவரி 28, 1984 அன்று மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நேரடி மேடை நிகழ்ச்சியை அவர் வழங்க திட்டமிட்டிருந்தார். மீண்டும் சுதா சந்திரன் நடன மேடைக்கு வரப்போகிறார் என்கிற செய்தியை முக்கிய நாளேடுகள் பாராட்டின. அவரது நடனத்தை காண அரங்கம் நிரம்பி வழிந்தது. பல முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தியால் சுதா சந்திரன் உற்சாகம் அடைந்தார். பழைய சுதா சந்திரன் எப்படி ஆடுவாரோ அப்படியே இப்போது தானும் ஆட வேண்டும் என அவர் நினைத்துக்கொண்டு அரங்கேற்றம் செய்தார். நடனம் முடிந்த போது அரங்கமே ஆர்ப்பரித்தது. சுதாவின் அப்பாவே தனது மகளின் நடத்தைக்கண்டு வியப்படைந்தார். 

இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது சர்வதேச ஊடகங்களும் இவரை ஆற்றலைக்கண்டு பாராட்டி வியந்தன. இந்த நிகழ்ச்சியைக்காண வந்திருந்த ராமோஜி ராவ் மயூரி (1985) என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை வழங்கினார். இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பல அரங்கங்கள் இவரது நடத்தைக்கான அழைப்புகளை அனுப்பிக்கொண்டே இருந்தன. இன்னொரு பக்கம் சினிமாவும் இவருக்கு வாய்ப்புகளை வழங்கியது. சினிமாவைத் தொடந்து நாடங்களிலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் புகழ் பெற்றார். அதோடு, நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். 

தற்போது, சுதா சந்திரன் அகாடமி ஆஃப் டான்ஸ் என்ற பெயரில் நடனப் பள்ளிகளை நடத்தி வருகிறார். மும்பை மற்றும் புனேவில் பல கிளைகளைக் கொண்டுள்ளது. அவரது கணவர் இந்தப் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இயக்குநராக உள்ளார், அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுதா சந்திரன் அங்கு கற்பிக்கிறார்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது….

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் போது எதிர்பாராத தடைகள் நமக்கு வரலாம். அப்படி வரக்கூடிய தடை, நாம் இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட கடின உழைப்பு, முயற்சி என அனைத்தையுமே சிதைக்கும் ஒன்றாகக்கூட இருக்கலாம். அப்படி ஏற்படும் சிக்கலில் சிக்கிக்கொண்டு நாம் நமது முயற்சியை விட்டுவிட்டால் நாம் தோற்றுவிடுவோம். அதேசமயம், நம்மை நாமே தேற்றிக்கொண்டு நமது இழப்பை சரி செய்துகொள்ள ஒரு வழியை கண்டுபிடித்து, அதிக உத்வேகத்தோடு போராடினால் வெற்றி நமக்கு கிடைத்தே தீரும். இலக்கை நாம் அடைந்தே தீருவோம். அதற்கு, வாழ்வியல் சான்று சுதா சந்திரன். வாழ்த்துக்கள் மேடம்!

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *