Site icon பாமரன் கருத்து

முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி? | Self Motive in Tamil

முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி

சில இழப்புகளுக்கு பின்னர் வாழ்க்கை கேள்விக்குறியாய் மாறி நிற்கும். போவதரியாது மனம் இருண்டிருக்கும். ஆனால் வாழ்க்கை என்பது முடங்கிப்போவது அல்ல, முயற்சித்து மீண்டு எழுவது, வாழ்வது.


எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ? இப்படி நீங்கள் பலரிடம் புலம்பியிருக்கலாம் அல்லது பிறர் உங்களிடம் வந்து புலம்பியிருக்கலாம். ஆக இந்தப் புலம்பல் நீடித்த ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. நமக்கு மட்டுமே இப்படி நடப்பது கிடையாது, உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழலில் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன என்ற எதார்த்தத்தை நாம் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக இப்படிப்பட்ட புலம்பல்களை தவிர்த்துவிடுவோம்.

பின்வரும் அனைத்தையும் நாம் நிச்சயமாக சந்தித்து இருப்போம்,

நாம் கவலைப்படுகிறோம்.

நாம் ஏமாற்றமடைகிறோம்.

நாம் அதிகமாக மிகைப்படுத்திக்கொள்கிறோம்.

அனைத்தையும் இழப்பதை போல உணர்கிறோம்.

நிம்மதி போதுமானதாக இருப்பதில்லை.

அதிகமாக சொத்துக்கள் இருக்க விரும்புகிறோம்

வேலை தனித்துவம் மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்

வாழ்க்கையில் எல்லாம் எளிதாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

சில நிகழ்வுகள் நடந்துவிட்டால் “வாழ்க்கையே முடிந்து போயிற்று” என எண்ணுகிறார்கள். மீளமுடியாத பிரச்சனை என எண்ணுகிறவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அப்படி தங்களது வாழ்க்கையே முடிந்துபோனதாக கருதுகிறவர்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் துவங்க முடியும் என்பதை வலியுறுத்தவே இந்தப்பதிவு. 

உதாரணம் 1 : உலகில் அதிக கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என அறியப்படுகிறவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒருசமயம் அவரது தொழிற்சாலை எரித்து நாசமாய்ப்போனது.எடிசனின் பல்வேறு சோதனைகள் மற்றும் அதன் தரவுகள் அங்கே தான் இருந்தன. ஆகவே பலரும் பதைபதைப்புடன் காணப்பட்டார்கள். இந்த நிகழ்வை எடிசனின் வாழ்வில் நடந்த பெரும் துயரமான நிகழ்வாக அனைவரும் பேசிக்கொண்டார்கள்.

ஆனால் தீப்பிடித்து எரித்த சில மணி நேரங்களுக்கு பிறகு எடிசன் அளித்த பேட்டியில் என்ன கூறினார் தெரியுமா? “கடவுளுக்கு நன்றி என்னுடைய தவறுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன, நான் புதிதாக ஆய்வுகளை துவங்கலாம்” எனக் கூறினார் நம்பிக்கையோடு.

பல நாட்கள் முயற்சி செய்து உருவாக்கிவைத்த பல கண்டுபிடிப்புகள் தீக்கரையானபோதும் மனம் தளராதவராக இருந்தார் எடிசன். இதைத்தான் நாம் அனைவரும் உணர வேண்டும். இழப்புகளை ஒரு பாடமாக வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

உதாரணம் 2 : தொழிலில் நஷ்டம், கடன் கட்ட முடியாமை உள்ளிட்ட காரணங்களுக்காக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறவர்கள் அதிகம். ஒரு தொழிலை துவங்கும் போது அதில் நஷ்டம் ஏற்பட்டால் தன்னுடைய முதலுக்கு மோசம் ஏற்படாதவாறு திட்டமிட்டு துவங்க வேண்டும். அப்படி இல்லையேல் மிகப்பெரிய பிரச்சனையாகவே அது அமைந்துவிடும்.

அப்படி தலைக்குமேல் கடன் ஏறிவிட்டால் வாழ்க்கை முடிந்துபோய்விட்டது என அர்த்தமா? நிச்சயமாக இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த அனில் அம்பானி கடந்த வாரத்தில் தான் திவாலாகிவிட்டதாகவும் தனது வங்கிக்கணக்கில் சில லட்சங்களே இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார். சிலர் இதனை வாங்கிய கடனை கட்டமுடியாததற்கு இப்படி கூறுகிறார் எனக்கூறலாம். தற்சமயம் அதற்குள் செல்லாமல், இந்தியாவின் முன்னனி பணக்காரர் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் பாருங்கள், அவர் எதிர்வரும் நடவெடிக்கைகளை சந்திக்க தயாராகவே இருக்கிறார்.

பணம் இன்று வரும் நாளை போகும். நாளை யாருடைய நிலைமை என்னவென்பது யாருக்கும் தெரியாது. ஆகவே கடன் தொல்லைக்கெல்லாம் பயந்துபோகாதீர்கள். 

உதாரணம் 3 : நீங்கள் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படம் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். வெறும் திரைப்படம் என்பதைத்தாண்டி அந்த திரைக்கதை பெரும் உள்ளர்த்தத்தை கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த படத்தின் கதையையும் பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் ‘எந்தப்பக்கம் காணும் போதும் வானம் ஒன்று” என பாடலில் வைத்திருப்பார். விஜய் சேதுபதி தான் காதலிக்கும் பெண் தற்கொலை செய்துகொண்ட பிறகு வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைப்பார். பிறகு அவரது கல்லூரித்தோழியாக வரக்கூடிய தமன்னாவை தேடிப்பிடிப்பார்.

அவரும் இதே போன்றதொரு சிக்கலில் மாட்டி பின்னர் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பார். இருவருக்கும் புதிதாக ஒரு வாழ்க்கை பிறக்கும். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் நீ தற்கொலை போன்ற முடிவுககளை எடுக்காதே ‘இன்னொரு ஊரில் இன்னொரு பேரில் வாழ்ந்துவிடு’ என்பதை வைரமுத்து பாடலில் அழகாக கோர்த்திருப்பார். இதுதான் எதார்த்தம்.

எங்கேயோ சென்று புதிய மனிதராக புதிய பெயரிலாவது வாழ்ந்துவிடுங்கள். மூன்று உதாரணங்களும் நீங்கள் முடிந்துபோனதாய் நினைக்கும் வாழ்க்கையை மீண்டும் துவங்க உந்துசக்தியாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

வாழ்ந்திடுங்கள் !

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

சுய முன்னேற்றக் கட்டுரைகள் பல இங்கே
6 தலைமைக்கான சிறந்த பண்புகள்

Share with your friends !
Exit mobile version