அழிவுப் பாதை
சொல்லப் பட்டது போலில்லை அழிவுப்பாதை
அண்மையில் அல்லது சேய்மையில்
ஏதோ ஒன்றுக் கேற்ப அஃதிருந்தாலும்:
பறவையின் சாதி உடன்வந்தழைக்க
காலுக் கடியில் பூமி குழைய
நாளையின் வாயில் பெருகிய கானம்
வருகையில் இருப்பவர் பெருமையை விரிக்க
சொல்லப்பட்டது போலில்லை அழிவுப் பாதை
எந்தக் கணமும் கழுத்தில் இறங்க
வானவில்லொன்று எதிரே நகரும்
தாரகை கடந்த ஒருபெரும் விசும்பில்
முடிவின் அருள்முகப் புன்னகை பொலியும்…
நடக்கலாம்; இருக்கலாம்; நிற்கலாம்; படுக்கலாம்
அனைத்தும் ஒன்றுதான் அழிவுப் பாதையில்
முதலடி பதியுமுன் அடுத்ததின் வரவு
அதற்குள் மகுடியின் நாக சங்கீதம்
மகுடியின் தலையே ஒருநாக பூஷணம்
நீல நித்திலத் திராவக மயக்கம்
மகுடியின் துளைவழி பிராணனின் நடனம்:
மகுடி நாதா! வேண்டாம் என்பதா
கேளாமல் கிடைத்து நெளியும் உன் பாடலை:
மகுடி நாதா சுற்றி உள்ளோரை
ஒருமுறை நன்றாய்ப் பார்க்கச் சொன்னாய்
சுற்றி உள்ளோரில் ஒருவனாகிய நானும்
சற்றைக்கு முன்பே நின்றிருந்தேனே.
என் அது கண்டாய் என்னிடம் அப்போது?
அத்தனைப் பேர்களில் என்னை அழைத்தாய்
அழைத்த மாத்திரம் வெளியில் வந்தேன்.
வந்த மாத்திரம் நின்றிருந்த இடத்தை
அருகில் இருந்தவர் நகர்ந்து நிரப்பினார்
தலைக்கு மேல்தலை அதற்கும் மேல் தலை
தலைமேல் விழுந்தலை தோளில் விழும் தலை
இடுப்பில் விழும்தலை காலிடுக்கில் தலை
சுவரில் பதித்த விரட்டிக் கூட்டம்
அத்தனைக் கிடையில் மகுடி நாதா
வெட்டாமல் விழுந்தது என் தலை மண்ணில்
சுற்றிலும் ஒருமுறை பார்க்கச் சொன்னாய்.
கண்டேன் அந்தச் சித்திரம் பெரிதும்
மாற்றப் படுவதை எப்படிக் கூறுவேன்.
மேயக் குனிந்த மாடு மாற்றிற்று
உட்கார்ந்திருந்தவன் எழுந்து மாற்றினான்
பறந்த கூளம் விழுந்து மாற்றிற்று
ஓடி மாற்றிற்றுத் தொலைவிற் றண்ணீர்
கனன்றும் அவிந்தும் தீமாற்றிற்று
மூக்குத் துளைகள் விரிந்து மாற்றின
ஒவ்வொரு மூலையில் ஒவ்வோரிடத்தில்
மாற்றித் தீர்ப்பதே கடமையாய்க் கிடந்ததால்
சித்திரம் முழுவதும் மாற்றப்படுகிறது
உன் மகுடியின் சப்தச் சிலந்திகளில்
நீலம் இறங்கி நிலவு தெளிகிறது
முழுவதும் என்னைப் புகையால் உடுத்தி
அதற்குள் இருப்பதாய் மற்றோர் எண்ண
இல்லாதாகிய என்னை நீ
அழைத்தால் திரளும் ஒரு பொருளாக்கிக்
கேட்கிறாய்: அங்கே இருப்பதைக் கூறு
வானில் தொங்கும் குபேரக் காசொன்று
பக்கம் இரண்டையும் புரட்டிக் காட்ட
அங்கே அங்கே அங்கே பார்க்கையில்
மாற்றிச் சொல்ல வன்மை செய்கிறாய்
மகுடி நாதன் சொல்லிக் கொண்டிருந்தான்
சுற்றி நின்றவர் கேட்டுப் பார்த்தனர்:
புகையில் என்னைக் கூப்பிட் டெடுத்தான்
சித்திரத்தை மாற்றத் தொடங்கினேன் நானும்
உன்னை வீட்டில் தேடுகிறார்கள்
ஆம்:
தான்யம் வேண்டுமே அமுது படிக்கு