ஞானக்கூத்தன் கவிதைகள்

ஆகஸ்டு 15

இரண்டு விரல்களுக்கிடையில்

எச்சிலைக் காறித் துப்பிய

ஒணசல் மனிதன்

நுகத்தடியில் தன்னை மீண்டும்

பொருத்திக் கொள்கிறான்

சிறிய காற்றுக்கும் பெரிதும் அசைந்தன

சிறு மரங்கள்

உலோகத் தட்டில் உணவை முடித்து

வீட்டுக்குள்ளேயே கையைக் கழுவி

மதியத் தூக்கத்தில் சிலபேர் தங்களை மறந்தனர்

வேம்பில் பழக் குலையை எட்டிப் பிடித்துக் காக்கைகள்

ஒற்றைப் பழத்தை ஈர்த்துச் சுவைத்தன

இடித்துக் கட்டப்படும் வீடுகள்

முக்கோண வட்டச் சிதறலாய்க் கவிழ்ந்து

மீண்டும் எழுந்தன விண்ணில்

குறுக்கு நெடுக்கு

வளைவில் நெடுக்கு நெடுக்கில் வளைவு

சதுர வட்டக் கோண மயக்கம்

தூண்கள்

தூணில் துளை

துளையில் புகை

கம்பிக் கதவுகள் எந்திரச் சங்குகள்

கட்டிட நிழலில் கார்களின் வரிசை

தணிந்த சூட்டுத்தூறல் நடுப்பகலில் நினைத்தேன்

ஆண்டுகள் முப்பதுக்கு கீழே ஒரு நாள்

கேள்விப்பட்ட விடுதலை என்னும் கட்டுக்கதை

கூடவே இன்னமும் தொடர்ந்து வளர்ந்து

ஒருநாள் மெய்யாய்த் துடிக்கக் கூடுமோ?