ஞானக்கூத்தன் கவிதைகள்

ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்

வரங்கள் பெற்றான் அதன் முடிவில்

நீர்மேல் நடக்க தீபட்டால்

எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்

கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்

உடம்பில் பூசிச் சோதித்தான்

மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட

முனிவன் போனான் ஆற்றுக்கு

நீருக்குள்ளே கால்வைக்க

முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு

காலைப் போட்டால் நடைபாதை

சிரித்துக் கொண்டு கண்ணெதிரே

ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா

கிரியை எல்லாம் போயிற்று

வேர்த்துப் போனான். அத்துளிகள்

உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்

செத்துப் போக ஒரு நாளில்

தீயிலிட்டார். அது சற்றும்

வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்

தீயாலழியா திருப்பதற்கும்

வரங்கள் பெற்ற மாமுனிவன்

மக்கிப் போக நாளாச்சு