என் இனிய இயந்திரா | சுஜாதாவின் சூப்பரான புத்தகம் | Sujatha Book
அறிவியலையும் கற்பனையையும் மிகச்சரியாக கையாளக்கூடிய வித்தை தெரிந்த சிலரில் முக்கியமானவர் சுஜாதா. 1986 வாக்கில் என் இனிய இயந்திரா என்ற தொடர்கதையை சுஜாதா எழுதினார். அதன் கதைக்கரு, அடுத்த 40 ஆண்டுகளில் அதாவது 2021 இல் இந்த உலகம் எத்தகைய தொழில்நுட்ப மாற்றங்களை சந்தித்து இருக்கும் என்பது தான்
Download/Buy : என் இனிய இயந்திரா En Iniya Iyandhira
தமிழ் எழுத்துலகில் சுஜாதா அவர்களுக்கு என்றுமே ஓர் நிரந்தர இடம் உண்டு. அவர் சிந்திக்கும் விதமும் தொழில்நுட்பங்களை தனது கதைகளுக்கு உள்ளாக புகுத்திடும் விதமும் பலரையும் ஈர்த்தது. அப்படி, அவரது கற்பனை சக்தியின் பிரமாண்டத்தில் உருவானது தான் என் இனிய இயந்திரா என்ற தொடர்கதை. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனை தான் அறிந்த அறிவியல் அறிவைக்கொண்டு எளிய மக்களும் படிக்கும் விதத்தில் கதைக்களத்தை அமைத்திருப்பார் சுஜாதா. அடுத்த 40 ஆண்டுகளில் இவையெல்லாம் நடக்கலாம் என்ற சுஜாதாவின் பல கணிப்புகள் உண்மையாகிவிட்டன.
கதை சுருக்கம்
கி.பி 2021 இல் நடப்பதாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஜீவா எனும் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் இந்தியத் துணைக்கண்டம் இருப்பதாக கதையமைப்பு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் அந்த சர்வாதிகாரி பல கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதிக்கிறார். உதாரணத்திற்கு, குழந்தை பெறுவதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், அனைவரும் இரண்டு எழுத்திலேயே பெயர் வைத்துக்கொள்ள வேண்டும், அனைவருக்கும் ஐடி எண் கொடுக்கப்பட்டு எதற்கெடுத்தாலும் அந்த ஐடி எண்ணை கூற வேண்டும், வீடு குடிபெயர்ந்து போவதற்கு கூட அரசு தான் வீட்டை நிர்ணயிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் ரோபோக்கள் பயன்பாடு, தானியங்கி நடைமுறைகள், அரசை எதிர்த்து பேசினால் கடும் நடவடிக்கை என இப்படி சட்டங்கள் பல உண்டு.
நாட்டை இந்த சர்வாதிகாரியிடம் இருந்து மீட்க அமைக்கப்பட்ட ஒரு ரகசிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் ரவியும் மனோவும். அவர்களது முக்கிய நோக்கம் எப்படியாவது சர்வாதிகாரி ஜீவாவை கொன்றுவிட வேண்டும் என்பது தான். இதற்கிடையே, நிலா என்ற பெண்ணின் கணவர் சிபி காணாமல் போகிறார். ரவிக்கும் நிலாவுக்கும் அரசால் ஒரே வீடு ஒதுக்கப்படுகிறது. பிறகு, நிலாவும் ரவியும் இணைந்து சிபியை தேட ஆரம்பிக்கிறார்கள். இதில் ரவியின் செல்லப்பிராணி ஜீனோ எனும் இயந்திர நாயும் இணைகிறது !
ஜீவாவை கொல்லும் வேலையில் நிலாவும் இணைக்கப்படுகிறாள். அப்போது இயந்திர நாய் ஜீனோ வுடன் நட்பாகிறாள் நிலா. ஜீனோ அதீத அறிவை பெற்றுள்ளதால் புதிய புதிய திருப்பங்கள் தருகிறது. மேலும் நம் குழுவில் உள்ளவர்கள் போலவே ஜீனோவும் ஒரு புத்தகப்புழு என்பதால் புத்தகம் வாசிப்பை அடிக்கடி மேற்கொள்ளும்.
இயந்திர நாயாக இருக்கும் ஜீனோ தானாக சிந்திக்கும் திறன் பெற்று விடுகிறது. இதனால் எதிரிகள் அதிகமாகின்றனர். ஜீனோவை டிஸ்மான்டில் செய்ய நினைக்கின்றனர். நிலாவின் கணவர் சிபி கிடைத்தாரா? ரவி மனோ இருவரின் திட்டம் வென்றதா? ஜீவா கொல்லப்பட்டாரா? ஜீனோ நிலா இருவரின் நிலை என்ன…என்பதே இறுதிக்கதை.
1980 களில் தமிழ் எழுத்தாளர் ஒருவர் இவ்வளவு கற்பனா சக்தியுடன் தொழில்நுட்பம் பற்றி சிந்தித்து கதை எழுதியிருக்கிறார் என்பது வியப்பை தருகிறது. ரஜினி அவர்கள் நடித்த எந்திரன் திரைப்படம் இதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்றுகூட சொல்லலாம்.
மேலும் நூல்கள் பற்றி படிக்க….
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்