இதுவரைக்கும் இந்திய அணிக்கு கிடைத்த கேப்டன்களில் சிறந்தவர் தோனி தான். நிச்சயமாக அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பல்வேறு விதங்களிலான போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுத்தந்தவர் ஆயிற்றே.
மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்லக்கூடிய தோனி அவர்களை பல நாட்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காண முடியாமல் தவித்து வருகின்றனர். நிச்சயமாக அவர் IPL போட்டிகளில் ஆடுவார் என நம்பலாம். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்போ “20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் அவர் ஆட வேண்டும்” என்பதுதான். இந்தியாவை உயர்ந்த தூரத்திற்கு அழைத்துச்சென்றவருக்கு தகுந்த மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடத்துவது தான் சிறந்தது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய ஏராளமான பண்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் இந்த இணையத்தளத்திலேயே குறிப்பிட்டு இருந்தோம் [இங்கே படிக்கலாம்]. ஒருவரிடத்தில் அனைத்துமே நல்ல பண்புகளாக இருந்துவிடாது நிச்சயமாக ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் தெரிந்துகொண்டு நம் வாழ்வில் அதை தவிர்த்துவிட்டோமேயானால் முன்னேறிச்செல்வதற்கு ஏதுவாக இருக்கும். அதற்காகவே இந்த பதிவு .
சேவாக் பேட்டி
தற்போது ரிஷப் பண்ட் ஆடும் 11 இல் இல்லாமல் இருக்கிறார். பலமுறை கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளாமல் போனதாலேயே சேர்க்கப்படவில்லை என்பது எதார்த்தம். இதுபற்றி சேவாக் அளித்துள்ள பேட்டியில் ” ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக பென்ச்சில் இருக்கிறார், அவரோடு முறையாக தகவல் பரிமாற்றம் நடக்கிறதா என தெரியவில்லை” என்று கூறினார். அதோடு, தாங்கள் ஆடிய காலத்தில் தோனியும் இப்படி நடந்துகொண்டார் என குறிப்பிட்டு “ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது சேவாக், சச்சின், காம்பிர் ஆகிய மூவரும் மாறி மாறி களமிறக்கப்பட்டனர். இதற்கு காரணமாக இன்னொரு வீரரை களமிறக்க வேண்டி இருக்கிறது என கூறப்பட்டது. அப்படித்தான் மூன்று மூத்த வீரர்களும் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தோனி, அவர்கள் மெதுவாக பீல்டிங் செய்கிறார்கள் என தெரிவித்துவிட்டார். தாங்கள் மெதுவாக பீல்டிங் செய்கிறோம் என்பதை ஒருமுறை கூட வீரர்கள் அறையில் தோனி குறிப்பிட்டதே கிடையாது. வெளியில் சொல்வதற்கு முன்னதாக எங்களிடம் அவர் அதுபற்றி பேசியிருக்க வேண்டும் என கூறியிருந்தார் சேவாக். அதேசமயம் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் போது வீரர்களுடன் பேசுகிறார் என்ற தகவல் கிடைக்கிறது, மகிழ்ச்சி என குறிப்பிட்டிருந்தார் சேவாக்.
உண்மையை பேசுங்கள்
நீங்கள் ஒரு விளையாட்டு அணிக்கு தலைமை தாங்குகிறீர்கள் அல்லது நீங்கள் ஒரு நிர்வாகத்தை வழிநடத்தி செல்கிறீர்கள் என வைத்துக்கொண்டால் உங்களுக்கு கீழ் பணியாற்றுகிறவர்கள் செய்கிற குறைகளை அவ்வப்போது தயங்காமல் அவர்களிடம் கூறுங்கள். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு உயர் அதிகாரிகள் மீட்டிங்கில் அல்லது பதவி உயர்வு சமயங்களில் நீங்கள் சரியில்லை என சொல்லாதீர்கள். அது உங்களுடைய தலைமைப்பண்மை நிரூபிக்க தவறிவிடும். அந்த நபரும் கூட “இதை அவர் முன்னரே சொல்லி இருக்கலாமே, இதுநாள் வரைக்கும் நம்மை பற்றி குறை ஏதும் சொல்லாமல் இப்போது அனைவரின் முன்னிலையிலும் சொல்கிறாரே” என எண்ணுவார். நீங்கள் ஒரு அந்த நபரின் நன்மதிப்பை இழந்துவிடுவீர்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!