ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்;
தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்;
வானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி!
எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்!
முப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்;
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;
ஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே.
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்
கணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.
பாரதியார்
மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here