குரு தரிசனம் – பாரதியார் கவிதைகள்


அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.

அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *