ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)
கண்ணன் முகம் மறந்துபோனால் – இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)
பாரதியார்
மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here