பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

19. ஜாதீய கீதம்‌

(புதிய மொழிபெயர்ப்பு)

நளிர்மணி நீரும்‌, நயம்படு கனிகளும்‌

குளிர்பூந்‌ தென்றலும்‌ கொழும்பொழிற்‌ பசுமையும்‌

வாய்ந்துநன்‌ கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற்‌ சிலிர்த்திடும்‌ இரவும்‌

தண்ணியல்‌ விரிமலர்‌ தாங்கிய தருக்களும்‌

புன்னகை ஒளியும்‌ தேமொழிப்‌ பொலிவும்‌

வாய்ந்தனை இன்பமும்‌ வரங்களும்‌ நல்குவை. (வந்தே)

கோடி கோடி குரல்கள்‌ ஒலிக்கவும்‌

கோடி கோடி புயத்துணை கொற்றமார்‌

நீடு பல்படை தாங்கிமுன்‌ ஸனிற்கவும்‌,

“கூடு திண்மை குறைந்தனை” என்பதென்‌?

ஆற்றலின்‌ மிகுந்தனை, அரும்பதங்‌ கூட்டுவை,

மாற்றலர்‌ கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)

அறிவுநீ, தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை

மருமம்நீ உடற்கண்‌ வாழ்ந்திடும்‌ உயிர்நீ;

தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.

ஆலயந்‌ தோறும்‌ அணிபெற விளங்கும்‌

தெய்வச்‌ சிலையெலாம்‌, தேவி, இங்குனதே. (வந்தே)

பத்துப்‌ படைகொளும்‌ பார்வதி தேவியும்‌

கமலத்‌ திகழ்களிற்‌ களித்திடும்‌ கமலையும்‌

அறிவினை யருளும்‌ வாணியும்‌ அன்னைநீ! (வந்தே)

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!

தீது தீர்ந்தனை, நீர்வளஞ்‌ சார்ந்தனை;

மருவு செய்களின்‌ நற்பயன்‌ மல்குவை

வளனின்‌ வந்ததோர்‌ பைந்நிறம்‌ வாய்ந்தனை;

பெருகு மின்ப முடையை குறுநகை

பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்யீடனை;

இருநி லத்துவந்‌ தெம்முயிர்‌ தாங்குவை,

எங்கள்‌ தாய்நின்‌ பாதங்கள்‌ இறைஞ்சுவாம்‌! (வந்தே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *