பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

18. ஜாதீய கீதம்‌ -1

(பங்கிம்‌ சந்திர சட்டோபாத்தியாயர்‌ எழுதிய “வந்தே மாதரம்‌” கீதத்தின்‌ மொழிபெயர்ப்பு)

இனியநீர்ப்‌ பெருக்கினை! இன்கனி வளத்தினை!

தனிநறு மலயத்‌ தண்காற்‌ சிறப்பினை!

பைந்நிறப்‌ பழனம்‌ பரவிய வடிவினை! (வந்தே)

வெண்ணிலாக்‌ கதிர்மகிழ்‌ விரித்திடும்‌ இரவினை!

மலர்மணிப்‌ பூத்திகழ்‌ மரன்பல செறிந்தனை!

குறுநகை யின்சொலார்‌ குலவிய மாண்பினை!

நல்குவை இன்பம்‌, வரம்பல நல்குவை! (வந்தே)

முப்பது கோடிவாய்‌ (நின்னிசை) முழங்கவும்‌

அறுபது கோடிதோளுயர்ந்துனக்‌ காற்றவும்‌

“திறனிலாள்‌’ என்றுனை யாவனே செப்புவன்‌?

அருந்திற லுடையாய்‌! அருளினைப்‌ போற்றி!

பொருந்தலர்‌ படைபுறத்‌ தொழித்திடும்‌ பொற்பினை! (வந்தே)

நீயே வித்தை, நீயே தருமம்‌!

நீயே இதயம்‌, நீயே மருமம்‌!

உடலகத்‌ திருக்கும்‌ உயிருமன்‌ நீயே! (வந்தே)

தடந்தோ ளகலாச்‌ சக்திநீ அம்மே!

சித்தம்‌ நீங்காதுறு பக்தியும்‌ நீயே!

ஆலயந்‌ தோறும்‌ அணிபெற விளங்கும்‌

தெய்விக வடிவமும்‌ தேவியிங்‌ குனதே! (வந்தே)

ஒருபது படைகொளும்‌ உமையவள்‌ நீயே!

கமலமெல்‌ லிதழ்களிற்‌ களித்திடுங்‌ கமலைநீ!

வித்தைநன்‌ கருளும்‌ வெண்மலர்த்‌ தேவிநீ! (வந்தே)

போற்றி வான்செல்வீ! புரையிலை நிகரிலை!

இனியநீர்ப்‌ பெருக்கினை, இன்கனி வளத்தினை

சாமள நிறத்தினை சரளமாந்‌ தகையினை!

இனியபுன்‌ முறுவலாய்‌! இலங்குநல்‌ லணியினை!

தரித்தெமைக்‌ காப்பாய்‌, தாயே! போற்றி! (வந்தே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *