திராவிட கழகத்தில் ஆந்திரர், கன்னடத்தார், கேரளத்தார் சேரலாமா? ஹிந்துக்கள், இஸ்லாமியர் என்ற வேற்றுமை உண்டா? திராவிடர் கழகத்தின் கொள்கை என்ன? திராவிட நாடு கோரிக்கை என்பவை குறித்த அண்ணாவின் தெளிவான பார்வையை அறிந்துகொள்ள இந்தக்கட்டுரை உதவும்.
பாபா: சொல்லுங்கோ (தமிழில் சொன்னார்)
அண்ணா: (தமிழில் பேசியது கண்டு சிரித்தார்)
பாபா: (ஜெகந்நாதன் அவர்களைப் பார்த்து) எங்கே வசிக்கின்றார்?
ஜெகந்நாதன்: காஞ்சியில் வசிக்கிறார். சர்வோதய சம்மேளனத்தின் பொழுது திருச்சியில் அவரது இயக்க மாநில மாநாடு நடைபெற்றதால் சம்மேளனத்திற்கு வர இயலாது போய்விட்டது. அவருடைய கழக ரீதியான ஆதரவு பூமிதான இயக்கத்திற்கு வேண்டுமென்று அவரிடம் கேட்டிருக்கிறேன்.
அண்ணா: பல இடங்களில் எங்கள் இயக்க ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் பூமிதான் இயக்கத்தில் பணி செய்கிறார்கள்.
பாபா: உங்கள் கழகம் பூமிதான இயக்கத்தில் ஈடுபடலாமல்லவா?
அண்ணா: நாங்கள் கழக ரீதியாக பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டால் வேறு சில கட்சிகளுக்கு வருத்தமேற்படும்.
பாபா: அப்படியானால் உங்கள் கட்சியில் நான் சேர வேண்டுமென்றால் என்னென்ன செய்யவேண்டும்?
அண்ணா: எங்கள் கழகம் அகில இந்திய ரீதியில் நடைபெற வில்லை. குறிப்பிட்ட பிராந்தியத்தில் தானே நடைபெறுகிறது.
பாபா: வேறு மாகாணத்தினர் உங்கள் இயக்கத்தில் ஈடுபடக் கூடாது என்ற நியதியா?
அண்ணா: இல்லை தமிழர்கள் அதிகமாக இருப்பதால் தமிழர்கள் தான் எங்கள் கழகத்தில் அதிகம் சேர்ந்திருக்கிறார்கள்.
பாபா: ஆந்திரர், கன்னடத்தார், கேரளத்தார் சேரலாமல்லவா?
அண்ணா: நிச்சயமாகச் சேரலாம். திராவிடர் என்ற அடிப்படையில் இவர்கள் எல்லோரும் சேரலாம். அதுதான் எங்கள் கழகத்தின் எண்ணமும்கூட.
பாபா: ஹிந்துக்கள், இஸ்லாமியர் என்ற வேற்றுமையுண்டா?
அண்ணா: இல்லை. ஹிந்துக்கள், இஸ்லாமியர் என்றோ பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்றோ எந்தவிதமான வேற்றுமையும் எங்கள் கழகத்திற்குக் கிடையாது. எல்லோரும் சேரலாம்.
திராவிட நாடு:
பாபா: உங்களுடைய கொள்கையைப் பற்றிக் கூறுங்கள்.
அண்ணா: மத்திய அரசாங்கத்திடம் இன்று எல்லா அதிகாரங்களும் குவிந்திருக்கின்றன. மாகாண அரசாங்கங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. ஆதலால் ஆந்திரமும், கேரளமும், கன்னடமும், தமிழகமும் மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்ட திராவிடக் கூட்டு ஆட்சி அமைப்பது எங்கள் கொள்கை.
பாபா: மண்டலவாரி ராஜ்ய அமைப்பிற்கும் திராவிடநாடு பிரிவினைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
அண்ணா: மண்டலவாரி ராஜ்ய அமைப்பு என்பது வெறும் ஆலோசனைக்குழுவே ஆனால் நாங்கள் தனி நாடு வேண்டுமென்கிறோம்.
பாபா: ஆந்திர மாகாணத்தில் என்னுடைய 7 மாத சுற்றுப் பிரயாண அனுபவத்திலிருந்து ஆந்திரர்கள் தமிழர்களோடு சேர்ந்துவாழப் பிரியமில்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் எண்ணுகிறேன். ஆந்திரர்கள் தனித்துவாழவே ஆசைப்படு கின்றார்கள்.
அண்ணா: 6,7 வருடங்களாக ஆந்திரர்கள் தமிழர்கள் தங்கள் கையில் எல்லா அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். பாபா அவர்கள், ஆந்திரர்கள் தமிழர்கள் மீது இந்தத் தவறான எண்ணத்தினால் அதிக வெறுப்புக் கொண்டிருந்த நேரத்தில் சுற்றுப்பிரயாணம் செய்ததால் அவ்வாறு கூறுகிறாரென்று எண்ணுகிறேன்.
பாபா: தமிழர்கள் மீது ஆந்திரர்கள் அதிக வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறவில்லை. அவர்கள் தனி மாகாணமாக தனித்து வாழவே விரும்புகின்றார்கள்.
அண்ணா: ஆந்திரமும் கேரளமும் கன்னடமும் தமிழகமும் தனித்தனி மாகாணமாக அமைந்த ஓர் திராவிடக் கூட்டாட்சியைத் தானே நாங்களும் விரும்புகிறோம்.
அண்ணா: ஆந்திரமும் கேரளமும், கன்னடமும் தமிழகமும் தனித்தனி மாகாணமாக அமைந்த ஓர் திராவிடக் கூட்டாட்சியைத் தானே நாங்களும் விரும்புகிறோம்.
பாபா: அப்படியானால் வருங்காலத்தில் நடைபெறலாம். தட்சிணப்பிரதேசத்திற்கும், திராவிட நாட்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?
அண்ணா: திராவிடநாடு மத்திய அரசாங்கத் தொடர்பிலிருந்து தனித்து இயங்கும். தட்சிணப் பிரதேசம் மத்திய அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கும்.
பாபா: உங்கள் திராவிட நாட்டில் “பார்லிமெண்ட்” இருக்குமா?
அண்ணா: பார்லிமெண்ட் இருந்தாலும் அதிகாரம் முழுமையும் மாகாண அரசாங்கங்களின் கையில்தான் இருக்கும். வெளிநாட்டுத் தொடர்பு போன்ற சில காரியங்களே அவைகளின் கையிலிருக்கும். இன்றைய அரசியல் சட்டம்கூட தனியாகப் பிரிந்து செல்வதற்கு அனுமதியளிக்கின்றது.
பாபா: படை வைத்திருப்பீர்களா?
அண்ணா: வைத்திருப்போம்.
பாபா: அப்படியானால் திராவிட நாட்டுக் கற்பனை பாகிஸ்தானின் அமைப்பை ஒத்திருக்கிறது.
அண்ணா: திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கைக்கு எதிர்ப்பு வளர வளர பாகிஸ்தானின் அமைப்பைப் போலவே ஆகிவிடும்.
பாபா: தனிப்படை வைத்திருந்தால் தனிநாடு ஆகிவிடுமல்லவா?
அண்ணா: இந்திய பெடரேஷனுக்குள் தனித்த சப்பெடரேஷனாக இயக்கும்.
பாபா: வெளிநாட்டு விவகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கையிலிருந்தால் படையும் அவர்கள் கையில் தானே இருக்கும்.
அண்ணா: அப்படியில்லை. வெளிநாட்டு விவகாரங்களை இந்தியப் பெடரேஷன் சப்-பெடரேஷனுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் செய்யும்.
பாபா: அப்பொழுது திராவிட நாட்டு கற்பனை சிலோனை ஒத்திருக்கிறது. விருப்பத்தின் பேரின் திராவிடநாடு இந்தியப் பெடரேஷனுடன் வெளிநாட்டு விவகாரங்களைப்பற்றி யோசிக்கும்.
அண்ணா: ஆம்.
பாபா: ஆந்திராவில் திராவிடநாட்டுப் பிரிவினைக்கு ஆதரவு கிடைக்குமா?
அண்ணா: ஆந்திராவில் இதுவரை எம் முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலேயே இன்னும் எங்கள் வேலை சரிவர முடியவில்லை.
பாபா: ஆந்திரர்கள் டில்லியோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர் என்று நினைக்கிறேன்.
அண்ணா: இன்றைய சூழ்நிலையில் அவ்வாறு தெரியலாம். ஆனால் டில்லி ஐந்தாண்டுத் திட்டம் போன்ற பல திட்டங்களில் ஆந்திராவையும், மைசூரையும், தமிழ் நாட்டையும் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் கிடைத்திருக்கும் பங்கைப்போல உரிய பங்கு இவைகளுக்குக் கொடுக்கப்படவில்லை. இதுவரை ஆந்திரர்கள் தமிழர்களால் தான் தங்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று கருதினர். இனி பல வழிகளில் பல பிரச்னைகளில் ஆந்திரர்கள் டில்லியால் புறக்கணிக்கப்படுவதை உணரும் பொழுது எங்களோடு சேருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
பாபா: மத்திய அரசாங்கம் ஆந்திரர்களுக்கும் அநீதி செய்கிறது என்பதனால் இந்த நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. டில்லி நியாயமாக நடந்துகொண“டால் அவர்கள் உங்களோடு சேர மாட்டார்களல்லவா?
அண்ணா: இல்லை, மத்திய அரசாங்கம் ஒன்று இருக்கும் வரை இப்படிப்பட்ட அநீதிகள் நடந்துகொண்டேதான் இருக்கும். இப்பொழுது இருக்கும் சர்க்கார் அளிக்கும் சலுகைகள் கூட வடஇந்தியாவில் இனி வரும் சர்க்கார் அளிக்காது என்று எண்ணுகிறேன்.
பாபா: நீங்கள் சொல்லுவது சரி. உங்கள் காரியம் நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கின்றது. 4 மாகாணங்கள் ஒன்று சேர்ந்திருக்கும் பொழுது ஒரு மாகாணத்திற்கு நியாயம் வழங்காமல் போய் விட்டால் என்ன செய்வீர்கள்?
அண்ணா: ஒரு மாகாணம் தனக்குச் சரியான நியாயம் கிடைக்கவில்லை என்று உணர்ந்தால் அதற்குத் தனித்துச் செல்லும் அதிகாரம் இருக்கிறது.
பாபா: நீங்கள் அன்புடன் ஒன்று சேர்ந்து இருக்கலாம் என்று சொல்வது நன்றாக இருக்கின்றது. உங்கள் திராவிட நாட்டைப் போல், வங்காளமும், குஜராத்தும் அன்பின் அடிப்படையில் தனித்தனியே இயங்க விரும்பினால் இயங்கலாமல்லவா?
அண்ணா: நாங்கள் சொல்லும் தத்துவம் வளர்ச்சி பெற்றால் அங்ஙனம் நிகழலாம். ஆனால் அங்கிருக்கின்ற மக்களுக்கு அந்த உணர்ச்சி ஏற்படவேண்டும்.
அன்பின் அடிப்படையில் மொழிவாரி மாகாணங்கள்:
பாபா: நீங்கள் சொல்லுவதைப் புரிந்துகொண்டேன். அன்பின் அடிப்படையில் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்து செல்லலாம் என்று சொல்லுகின்றீர்கள்.
அண்ணா: நீங்கள் சொல்லுவது சரி. சொல்லளவில் நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கின்றோம் என்று சொன்ன பொழுதிலும் தற்பொழுதுள்ள அமைப்பில் மொழிவாரி மாகாணங்கள் ஒன்றின்கீழ் ஒன்றாகவே அமையப் பெற்றிருக்கின்றன. ஒரு மாகாணம் மற்றொரு மாகாணத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கின்றது. இவ்வித நிலை இருக்கக் கூடாது எனவும் கருதுகின்றோம்.
பாபா: உங்களுடைய கருத்து முற்றிலும் அஹிம்சையின் அடிப்படையில் இருக்கிறதல்லவா?
அண்ணா: ஆம் உண்மை.
பாபா: பலாத்காரமாக இரு மொழி பேசும் மாகாணங்களை இணைத்துவைக்க அதிகாரமில்லையென்று சொல்லுகின்றீர்கள்.
அண்ணா: தத்துவத்தில் கூட பலாத்காரம் இருக்கக் கூடாது என்று கூறுகின்றோம்.
பாபா: அதனை நானும் ஒப்புக்கொள்கிறேன். உதாரணமாக மகாராஷ்டிர ராஜ்யத்தில் ஒரு ஜில்லா மத்திய அரசாங்கத்தினிட மிருந்தும், தனித்துச் செல்ல விரும்பினால் தனியாகச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டுமல்லவா?
அண்ணா: கொடுக்க வேண்டும்.
பாபா: அப்படியானால் அஹிம்சைக் கொள்கையில் நம் இருவருக்கும் ஒற்றுமை இருக்கின்றது.
(மேலும் பாபா அவர்கள் கேட்டதாவது)
ஒவ்வொரு அரசாங்கமும் தனியாக படை வைத்துக் கொள்ள அனுமதித்தால் பெரிய நாடுகளால் சிறிய நாடுகளுக்கு ஆபத்துத் தானே?
அண்ணா: இப்பொழுது உலக அரங்கில் சிறிய நாடுகளும், பெரிய நாடுகளும் இருந்து வருகின்றன. அவைகள் சண்டையின்றி சமாதானமாக வாழ்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் சிறிய நாடுகளும், பெரிய நாடுகளும் சண்டையின்றி ஒன்றுபட்டு வாழ தங்களைப் போன்ற பெரியார்களின் அஹிம்சைப் பிரசாரம் நல்ல பலனளிக்குமென்று நம்புகின்றோம்.
பாபா: உங்களுடைய இந்தக் கருத்து மேலும் நம்மை ஒன்று படுத்துகின்றது; நம்முடைய ஒற்றுமையை அதிகமாக்குகின்றது. ஆனால் அஹிம்சையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பொழுது படையின் அவசியமென்ன?
அண்ணா: பண்டைக் காலத்திலிருந்து படை வைத்திருக்கும் பழக்கம் இருந்து வருகின்றது.
பாபா: அது கெட்ட பழக்கமல்லவா?
அண்ணா: கெட்டபழக்கம்தான். படை வேண்டாமென்ற கருத்தும், அஹிம்சை முறையில் அரசாங்கம் அமைக்க வேண்டுமென்ற கருத்தும் இப்பொழுது தான் பரவி வருகின்றது. ராஜேந்திர பிரசாத்கூட இப்பொழுதுதானே உங்களிடம் உபதேசம் பெற்றுச் சென்றிருக்கிறார்!
(காஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய சர்வோதய சம்மேளனத்தின் பொழுது பாபா அவர்கள் படையை குறைக்க வேண்டும் என்று ராஜன் பாபுவின் முன்னிலையில் பேசியதையே அண்ணாதுரை இவ்வாறு குறிப்பிட்டார்.)
பாபா: பத்து மொழி பேசும் மாகாணங்கள் தனித்தனியாக இயங்கினால் கஷ்டமேற்படாதா?
அண்ணா: பத்து வருடங்களுக்குப் பின்னால் கஷ்டமே விளையுமென்று தெரிந்தால் ஒன்று சேர்ந்து விடுவோம்.
பாபா: (அரியநாயகம் அவர்களைப் பார்த்து) இவர் (அண்ணாதுரை) மிகவும் கள்ளங்கபடமற்றவர்.
(சிரிப்பு)
சமுதாயக் கொள்கை:
பாபா: சமுதாய சம்பந்தமாக உங்கள் கொள்கை என்ன?
அண்ணா: ஜாதிப் பூசல்களுக்கோ சமயச் சண்டைகளுக்கோ இடமிருக்கக் கூடாது. திருமூலரின் மந்திரமான ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைக் கொண்டவர்கள்.
பாபா: ஜாதி இரண்டொழிய வேறில்லை! (தமிழில் கூறினார்) உங்கள் கருத்து நல்ல கருத்து.
பொருளாதாரக் கொள்கை:
பாபா: உங்களுடைய பொருளாதாரக் கொள்கையைக் கூறுங்கள்.
அண்ணா: எந்த அரசாங்கமாயிருந்தாலும் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவும் உடையும் வசிக்க இடமும் மக்களுக்குக் கிடைக்கவேண்டும். லாபம் பெறவேண்டுமென்ற நோக்குடன் இவற்றின் வியாபாரம் நடைபெறக் கூடாது.
பாபா: அதாவது சுரண்டலற்ற சமுதாயம் அமைக்க வேண்டுமென்கிறீர்கள்?
அண்ணா: ஆம்! சுரண்டலற்ற சமுதாயம் மட்டுமல்ல? லாப மனப்போக்கில்லாத சமுதாயம் காண விரும்புகின்றோம்.
பாபா: தனிச் சொத்துரிமை இருப்பதை விரும்புகிறீர்களா?
அண்ணா: நிச்சயமாக விரும்பவில்லை. அப்படியிருந்தால் லாபம் பெறவேண்டுமென்ற நோக்கம் வளர்ந்து விடுமே?
பாபா: கிராம நிலம் கிராமத்திற்குச் சொந்தகமாக இருக்க வேண்டுமல்லவா?
அண்ணா: ஆம்! கிராம நிலம் கிராமத்திற்குச் சொந்தமாக இருக்கவேண்டும். அத்துடன் ஒரு கிராமத்தில் விளைச்சல் குறைவாயிருக்கின்ற காலத்தில் அந்தக் கிராமத்திற்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டும்?
பாபா: விளைச்சல் அதிகமாயிருந்தால் என்ன செய்வது?
அண்ணா: பற்றாக்குறை கிராமங்களுக்குக் கொடுத்து உதவலாம்.
பாபா: உங்கள் கொள்கைக்கும் சர்வோதயக் கொள்கைக்கும் எந்தவிதமான வேற்றுமையும் கிடையாது. மிகுந்த மகிழ்ச்சி.
பூமிதான இயக்கம்:
பாபா: பூமிதான இயக்கத்திற்கு உங்களால் என்ன உதவி செய்ய முடியும்?
அண்ணா: பூமிதானப் பிரசாரம் செய்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் இன்றைய சூழ்நிலையில் எங்கள் உதவியால் பிறருக்கு வருத்தம் ஏற்படலாம்.
பாபா: தனிப்பட்ட முறையில் தங்கள் பங்கு என்ன?
அண்ணா: எங்கள் பகுதிகளில் உங்கள் கருத்துக்களைக் கூறலாம்.
பாபா: தங்கள் இயக்கத்திற்கு செல்வாக்கு இருக்கின்ற இடங்களில் கருத்துப் பிரசாரம் செய்யலாமல்லவா?
அண்ணா: ஏற்கெனவே பாபாவைப் பற்றி பல இடங்களில் எடுத்துக் கூறியிருக்கிறேன். அய்யா (பாபா) நல்ல காரியங்களை செய்துகொண்டு வருகின்றார். அவரை ஏமாற்றிவிடாதீர்கள் என்று கூறி வருகிறேன். (பாபா சிரித்தார்)
பாபா: உங்களுக்கு நடக்கும் பழக்கம் உண்டல்லவா (சிரித்துக்கொண்டே கேட்டார்)
அண்ணா: ஓ! உண்டு.
பாபா: உங்கள் மாகாணத்தில் தங்கியிருக்கிறேன். அடிக்கடி சந்தியுங்கள்.
அண்ணா: (ஜெகந்நாதன் அவர்களைப் பார்த்து) நான்கைந்து மாதங்கள் தங்குகிறாரல்லவா?
ஜெகந்: ஆம், அதற்கு மேலும் தங்கலாம்.
அண்ணா: (பாபாவைப் பார்த்து) அவசியம் சந்திக்கிறேன்.
(இறைவழிபாட்டுக் கூட்டத்திற்கு நேரமாகிவிட்டபடியால் பாபா இத்துடன் முடித்துக் கொண்டார். திரு.அண்ணாதுரை பாபாவிற்கு வணக்கம் செலுத்தி விடைபெற்றுக் கொண்டார்.)