அண்ணாவின் “மனிதன்” கவிதை

1955 இல் எழுதப்பட்ட கவிதை இன்று உள்ள சூழலுக்கு மட்டுமல்ல, இனிவரும் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பேருண்மையை விளக்கி நிற்கிறது. அண்ணாவின் கட்சியை விடுங்கள், அவருடைய எண்ணத்தை போற்றுங்கள். அது சரியென பட்டால் பின்பற்ற துவங்குங்கள்.

அண்ணாவின் ஆங்கிலப்புலமை

ஒரு சமூகம் என்றால் படித்தவர் இருப்பார்கள், படிக்காத பாமரர்கள் இருப்பார்கள், பேசுவதை கேட்கும் வழக்கம் உடையவர்கள் இருப்பார்கள், கவிதை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் இருப்பார்கள், திரைப்படம் பார்க்கும் பழக்கம் உடையோர் இருப்பார்கள், நூல்கள் வாசிக்கும் பழக்கம் உடையோர் இருப்பார்கள். ஆக இத்தனை பேரையும் இணைத்து தான் ஒரு சமூகம் விளைந்து நிற்கிறது. ஒரு பேரியக்கத்தை கட்டியெழுப்ப நினைத்திட்ட அண்ணா இவர்கள் அனைவரையும் தனது கருத்துக்கள் சென்றைடைய அனைத்துவிதமான விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 

 

தினந்தோறும் மேடைகளில் பேசினார், கட்டுரைகள் எழுதினார், கவிதைகளை இயற்றினார், நூல்கள் எழுதினார், வசனங்கள் எழுதினார், பத்திரிக்கையில் எழுதினார் என மக்களை சென்றடைய கிடைத்த அனைத்து வழிகளையும் அண்ணா பயன்படுத்திக்கொண்டார். அதுதான் அவரை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. அத்தனையையும் செய்வதற்கு அண்ணாவிற்கு நேரம் எப்படி இருந்ததென தெரியவில்லை. ஒருவேளை கடவுள் நம்பிக்கையில்லாத அண்ணாவிற்கு கடவுள் மறைமுகமாக வந்து கூடுதல் நேரத்தை கொடுத்துவிட்டு போனாரோ என்னவோ தெரியவில்லை [நகைச்சுவை]

அப்படிப்பட்ட அண்ணா எழுதிய கவிதைகளில் “மனிதன்” என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. ஒருவர் எப்படி நடந்துகொண்டால் சமூகத்திற்கு நல்லது  அல்லது பிறரால் விரும்பப்படுவார் என்பது குறித்து வகுப்பெடுக்க பல்லாயிரம் பேர் தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். ஆனால் அண்ணா வெறும் 11 வரிகளில் ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கவிதை வடிவில் தந்திருக்கிறார். இதை இன்றிருப்பவர்கள் பின்பற்றினாலே போதும் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிட முடியும். 

மனிதன்

 

மனிதா!

நீ யாருக்கும் தலைவணங்காதே,

நிமிர்ந்து நட!

கைவீசிச் செல்!

உலகைக் காதலி!

செல்வரை, செருக்குள்ளவரை,

மதவெறியரைத் தள்ளிஎறி.

மனசாட்சியே உன் தெய்வம்!

உழைப்பே மதி, ஊருக்குதவு.

உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!

சிந்தனை செய்! செயலாற்று!

 

அறிஞர் அண்ணா இந்தக்கவிதையை திராவிட நாடு எனும் பத்திரிகையில் 12.06.1955 அன்று எழுதி இருக்கிறார். 

 

யாருக்கும் தலை வணங்கிட வேண்டிய அவசியம் உனக்கில்லை. நீ நிமிர்ந்து கைவீசி நடந்து செல். இந்த உலகையே நீ விரும்பிட வேண்டும். செல்வம் படைத்தவர்களை செருக்கு உள்ளவர்களை மதவெறி பிடித்தவர்களோடு நீ சேராதே. உன் உழைப்பை மதி, உன்னால் முடிந்ததை ஊருக்கு செய்து பழகு. எங்கேயோ இருப்பதாக சொல்லப்படும் கடவுளை பற்றி பொய்களை கூறாமல் மனசாட்சியே தெய்வம் என நினைத்து வாழ்ந்திடு. சிந்தித்துப்பார், செயல்பட துவங்கு. 

 

1955 இல் எழுதப்பட்ட கவிதை இன்று உள்ள சூழலுக்கு மட்டுமல்ல, இனிவரும் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பேருண்மையை விளக்கி நிற்கிறது. அண்ணாவின் கட்சியை விடுங்கள், அவருடைய எண்ணத்தை போற்றுங்கள். அது சரியென பட்டால் பின்பற்ற துவங்குங்கள். 

அண்ணா பற்றிய இன்னும் பல பதிவுகள் இங்கே இருக்கின்றன.Click Here

Share with your friends !