அர்த்தமுள்ள அந்தரங்கம் புத்தகம் – ஏன் வாசிக்க வேண்டும்?

மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, காமம், மனம் பற்றிய அறிவியல்பூர்வமான தகவல்களின் தொகுப்பே இந்நூல். ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்த ஐம்பத்திரண்டு அத்தியாயங்கள் தொகுக்கப்பட்டு ‘அர்த்தமுள்ள அந்தரங்கம்’ எனும் பெயரில் விகடன் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

நூல்: அர்த்தமுள்ள அந்தரங்கம்

ஆசிரியர்: டாக்டர். ஷாலினி

Click Here To Download/Buy

அர்த்தமுள்ள அந்தரங்கம் நூல் அறிமுகம்

‘அந்தரங்கம்’ என்ற தலைப்பைப் பார்த்ததுமே நம்முள் ஒரு இனம்புரியாத கூச்சமோ, முகச்சுளிப்போ ஏற்பட வாய்ப்புண்டு. அதற்காகவே ஆசிரியர் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘அய் அந்தரங்கம்!’ என்று ஆர்வம் தாளாமல் காமத்தைப் பற்றிய ‘கசமுசா புக்!’ என ஆசைஆசையாக இதை வாங்கிப் பார்த்து, பக்கங்களைத் திருப்பத் திருப்ப ‘அடடா…! வெறும் சிற்றின்பம்னு நினைச்ச செக்ஸுக்குப் பின்னால் இவ்வளவு மேட்டர் இருக்கா…! இத்தனை நாளா தெரியாம போச்சே!’ என்று நீங்கள் நினைத்து ஆச்சரியப்பட்டால்… இதற்காகத்தான் இந்தப் புத்தகம் எழுதினேன்.”

பன்னிரண்டு வகையான காமங்கள் உள்ளனவாம். அடிப்படைக் காரணமான இனப்பெருக்கம் ஆரம்பித்து, கணவன் – மனைவி உறவு நீடித்திருக்க, பொழுதுபோக்கிற்காக, இறுக்கம் தவிர்ப்பதற்காக, வெளியுலக அந்தஸ்திற்காக என நீளும் பன்னிரண்டு வகையான காமங்கள் பற்றி நூல் பேசுகிறது.

மனித மரபணுவின் கட்டமைப்பு, அதன் அடிப்படை அங்கமான ஜீன்கள், அவை மனித உடலில் தோற்றுவிக்கும் ரசாயனங்கள்… என யாவும் முழுக்க அறிவியல்பூர்வமாக விளக்கப்படுகின்றன.

உயிர்களின் படிப்படியான பரிணாம வளர்ச்சி, பறவைகள் மற்றும் பாலுட்டிகளின் குணாதிசயங்கள், குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் எவ்விதம் பிறரிடமிருந்து வேறுபடுகிறான் என்பனபோன்ற கேள்விகளுக்கு விடைகள் அத்தியாயங்களைக் கடந்துசெல்கையில் ஒவ்வொன்றாகக் கிடைக்கின்றன.

உலகில் முதன்முதலில் பெண்கள் மட்டும்தான் பிறந்திருந்தனராம். கால ஓட்டத்தில் மரபணுக்களின் தேவை கருதி, ஆண்கள் உருவாக்கப்பட்டனராம். ஆக, பெண்வழிச் சமூகமாகவே இந்தச் சமுதாய அமைப்பு முதலில் இருந்திருக்கிறது. அது எவ்விதம் ஆண்வழிச் சமூகமாக உருமாறியது என்பதற்கான காரணங்கள் அடுக்கப்படுகின்றன. 

மற்ற பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் வெறும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பெற்ற காமம், மனித சமூகத்திற்கு மட்டும் சற்று மாறுபடுகிறது. பிற உயிரினங்களுக்குக் கிட்டாத சுகமெனும் மந்திரம் மனிதனுக்கு மட்டும் காமத்தால் எப்படிச் சாத்தியமாயிற்று, மரபணுக்கள் அதற்காக மேற்கொண்ட சிரத்தைகள் என்னென்ன என்று தகவல் களஞ்சியமாக விரிகிறது நூல்.

மற்ற உயிரினங்களிளெல்லாம், குழந்தைகள் முழு மூளைவளர்ச்சி பெற்றே பிறக்கின்றனவாம், மனிதக் குழந்தை மட்டும், பாதி மூளை வளர்ச்சியுடன் பிறக்கிறதாம். அதற்கும் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

வீரியம் மிகுந்த குழந்தைகளை மட்டும் உருவாக்கும் ‘பாலியண்ட்ரி’, வீரியம் குறைந்த, ஆனால், எண்ணிக்கையில் அதிகமான குழந்தைகளை உருவாக்கும் ‘பாலிகைனி’, ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் ‘மோனோகேமி’ எனப் பலவித மாற்றங்கள் மனித சமூகத்தில் எவ்விதம் நிகழ்ந்தன என அலசி ஆராய்கிறது நூல்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி, காமம், மனம் ஆகியவை சம்மந்தமான அந்தரங்க விஷயங்களை அறிவியல்பூர்வமாக அறிய விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான நூல்தான் இது.

இந்தப்புத்தகத்தில் மொத்தமாக 52 தலைப்புகளில் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. அதிலே ஒரு கட்டுரையை மட்டும் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

உடற்பசியும்‌… அறிவுப்பசியும்‌…

மனிதக்‌ குழந்தைகள்‌ பாதி மூளையுடன்‌ பிறந்து மீதி மூளை வளர்ச்சியை பூலோகத்துக்கு வந்ததும்‌ முடித்துக்‌ கொள்கின்றன.

இப்படிப்‌ பாதி மூளையாக இருந்த பாப்பா,மீதி மூளையை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால்‌ அதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படும்‌? அதுவும்‌, வெறும்‌ வானர வம்சமாகவே இருந்திருப்பின்‌ ஏதோ செடி, கொடி, இலை, தழை, காய்‌, கனி… போன்ற சைவ உணவுகளைச்‌ சாப்பிட்டு உடம்பை வளர்த்து இருக்கலாம்‌.

ஆனால்‌, இந்த மனித மூளை மாமிசப்‌ புரதத்தால்‌ உருவானது. என்னது! மாமிசப்‌ புரதமா? மனிதர்கள்‌ பிறவியிலேயே சைவ உணவுக்காரர்கள்‌ இல்லையா? என்று நீங்கள்‌ வியந்தால்‌, உங்களின்‌ நம்பிக்கைகளின்‌ மற்றொன்றை உடைப்பதற்கு ரொம்ப ஸாரி. ஆனால்‌, மனிதர்கள்‌ சைவமாக இருக்கப்‌ படைக்கப்பட்டவர்கள்‌ அல்ல! குறிப்பாக மனித மூளை இருக்கிறதே அது முழுவதுமாக அசைவப்‌ புரதத்தால்‌ உருவானது.

சைவப்‌ புரதத்துக்கும்‌, அசைவப்‌ புரதத்துக்கும்‌ அப்படி என்ன பெரிய வித்தியாசம்‌ என்ற கேள்வி கேட்க தோன்றுகிறதுதானே? ஆமாம்‌, நிறைய வித்தியாசங்கள்‌ உள்ளன. சைவப்‌ புரதம்‌ மட்ட ரகமான புரதம்‌.

அடுப்புக்‌ கரியை வைத்துச்‌ சமைப்பது மாதிரி. நிறைய கரியைக்‌ கொட்டி ஊதி பற்ற வைத்து, தீரதீர மேலும்‌ கரியைப்‌ போட்டு மூட்டிக்கொண்டே இருப்பதுபோல நிறைய சைவ புரதம்‌ சாப்பிட்டால்தான்‌ கொஞ்சமாவது
உடம்பில்‌ ஒட்டும்‌.

ஆனால்‌, இந்த மாமிசப்‌ புரதம்‌ அப்படியல்ல. அது கேஸ்‌ அடுப்பு மாதிரி. சும்மா சிலிண்டரைத்‌ திறந்தாலே போதும்‌ குபுக்‌” என்று பற்றிக்கொள்ளும்‌. கொஞ்சம்‌ மாமிசப்‌ புரதத்திலேயே உடம்பு சும்மா கிண்‌ என்று ஆகிவிடும்‌. இதைத்தான்‌ Fuel Efficiency என்பார்கள்‌.

முந்தைய கால வானரங்கள்‌ பெரும்பாலும்‌ சைவ பட்சிணிகளாக இருந்தன. பழம்‌, பூ, கொட்டை, விதை, இலை, கிழங்கு… என்று பொதுவாக சைவ உணவுகளை உட்கொண்டாலும்‌ புழு, பூச்சி மாதிரியான சில அசைவ உணவையும்‌ அவ்வப்போது நொருக்கித்‌தின்றன.

ஒன்றரை மில்லியன்‌ ஆண்டுகள்‌ வரைக்கும்‌ மனிதர்களும்‌ இதே மாதிரி முக்கால்வாசி நேர சைவ பட்சிணிகளாகவும்‌, சந்தர்ப்பம்‌ கிடைத்தால்‌ அசைவ பட்சிணியாகவும்‌ மாறிக்கொள்ளும்‌ பழக்கத்தையும்‌ கடைப்பிடித்து வந்தார்கள்‌. சுமார்‌ ஒரு மில்லியன்‌ ஆண்டுகளுக்கு முன்னால்‌ உலகமே ஒரு பெரிய சைஸ்‌ ஜஐஸ்கட்டியாக உறைந்து போனது; பனியுகம்‌ ஆரம்பமானது!

என்னது பனியுகமா? என்று மறுபடியும்‌ ஆச்சரியப்‌ படாதீர்கள்‌. பூலோகத்தில்‌ அப்படி ஒரு விசேஷம்‌ அடிக்கடி நிகழ்ந்து கொண்டேதான்‌ இருக்கிறது. ஒரு மில்லியன்‌ ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த உலகமே பனி மூடி இருப்பதும்‌, இடையிடையே ஒரு பத்து பதினோராயிரம்‌ ஆண்டுகளுக்கு மட்டும்‌ பனி விலகி உஷ்ணமாவதும்‌ பூலோகத்துக்கு சகஜம்‌. இப்போது மனிதர்கள்‌ வாழ்வதும்‌ இது மாதிரியான ஒரு தற்காலிகப்‌ பனி விலகிய உஷ்ண Interglacial Period ல் தான்‌.

இந்தப்‌ பனியுகத்திற்கு இடைப்பட்ட காலமான சமீபத்திய பத்தாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமத்திய பகுதிகளைத்‌ தவிர, மற்ற எல்லாப்‌ பிரதேசங்களும்‌ பனி மூடியே கிடந்தன. இந்தப்‌ பனிக்‌காலத்தில்‌ வாழ்ந்த மிருகங்கள்‌ குளிருக்கு இதமாக அடர்ந்த ரோமமும்‌, தோலின்‌ அடியில்‌ கொழுப்பும்‌ கொண்டிருந்தன.

இப்படிப்‌ பிற பிராணிகள்‌ எல்லாம்‌ ரோமம்‌, கொழுப்பு என்று பனியிலிருந்து தம்மைத்‌ தற்காத்துக்‌ கொண்டனர்‌. ஆனால்‌, குளிரில்‌ மாட்டிக்‌ கொண்ட மனிதர்கள்‌ பாவம்‌ என்ன செய்வார்கள்‌? திடுதிப்பென்று நிறைய ரோமம்‌ வளர்த்திருக்கலாம்‌. ஆனால்‌, மனித ஜீன்கள் அதற்கும்‌ ஒரு படி மேலேபோய்‌ பெரிய மூளையை அவசரமாக உருவாக்கியது. இந்தப்‌ பெரிய மூளையை சைவப்‌ புரதத்தால்‌ உருவாக்குவது என்றால்‌ பல யுகங்கள்‌ பிடிக்குமே; அதனால்தான்‌ சட்டென அசைவப்‌ புரதத்துக்கு மாறி, அவசர அவசரமாகப்‌ புதிய பெரிய மூளையை மரபணுக்கள்‌ உருவாக்கின. அதுவும்‌ குளிரில்‌ எல்லாமே உறைந்து போயிருந்த அந்தக்‌ காலத்தில்‌ காய்‌ கனிகளைத்‌ தேடிப்‌ போவது கஷ்டம்‌. ஆனால்‌, கண்ணி வைத்து கால்நடையைப்‌ பிடிப்பது
ஈஸி.

அது மட்டுமல்ல, இந்தப்‌ புது மூளை ஒன்றும்‌ மலிவான சமாச்சாரம்‌ இல்லை. வெறும்‌ ஒன்றரைக்‌ கிலோ இருந்துகொண்டு இது உடம்பின்‌ மொத்த சக்தியில்‌ முழுவதாக 20 சதவிகிதத்தை அப்படியே எடுத்துக்கொள்கிறது. முன்பு இருந்த குரங்கு மூளையோ வெறும்‌ 5% சக்தியை உபயோகித்தது. இந்த மனித மூளைக்குத்‌ தேவைப்பட்ட கூடுதல்‌ 15% சக்தியை எங்கிருந்து எடுத்துத்‌ தருவதாம்‌?

எதற்கும்‌ சளைக்காத மரபணுக்கள்‌ இதற்கும்‌ ஒரு வழியைக்‌ கண்டுபிடித்தன. தாவர பட்சிணியாக இருந்தால்‌ தாவர நார்களை ஜீரணிக்க ரொம்ப நீளமான பெருங்குடல்‌ தேவைப்படும்‌. மாமிச பட்சிணியாக மாற்றிவிட்டால்‌ இத்தனை நீளமான பெருங்குடல்‌ தேவைப்படாது. அதனால்‌, மடமடவென இன்கள்‌ புதுப்புது ரசாயனங்களைச்‌ சுரக்க, மனிதர்கள்‌ சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறினார்கள்‌. பெருங்குடலும்‌ இரண்டு மீட்டர்‌ சின்னதாகிப்‌ போனது. இழந்த இரண்டு மீட்டருக்கு செலவு செய்யகூடிய சக்திகளை அப்படியே மூளைக்குத்‌ திசைத்‌ திருப்பி விட்டால்‌ மேட்டர்‌ ஓவர்‌! மாமிச எரிபொருளின்‌ சிக்கனமும்‌ கிடைத்தது; பெரிய சைஸ்‌ மூளையும்‌ உருவானது. மனித வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்‌ போனது.

ஒருவேளை, மரபணுக்கள்‌ மனிதர்களை மாமிச பட்சிணிகளாக மாற்றாமல்‌ இருந்திருந்தால்‌ என்ன ஆகியிருக்கும்‌? என்று நீங்கள்‌ கிராஸ்‌ கேள்வி கேட்க விரும்பினால்‌ அதற்கும்‌ ஒரு பதில்‌ இருக்கிறது.

மனிதர்களில்‌ ஒரு பிரிவினர்‌ முழு மாமிச பட்சிணிகளாக மாறாமல்‌, பெரும்பாலும்‌ சைவ உணவை உண்பவர்களாகவே வாழ்ந்தார்கள்‌. அந்த வகை மனிதர்களை Homosapiens Nean derthalensis என்கிறோம்‌.
பிடிவாதமான சைவப்‌ பழக்கம்‌ கொண்டிருந்த இவர்களால்‌ பனியுகத்தில்‌ குளிர்‌ தாங்க முடியாமல்‌ சுமார்‌ இருபத்தைந்து முதல்‌ முப்பதாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்‌ எல்லோரும்‌ கும்பல்‌ கும்பலாக இறந்தனராம்‌!

நல்ல வேளை Homo sapiens sapien என்ற வகை மனிதர்கள்‌ முன்பே உணவுப்‌ பழக்கத்தை மாற்றி மாமிச உண்ணிகளாக மாறியதால்‌, இன்றும்‌ மனித குலம்‌ என்ற ஒன்று பூலோகத்தில்‌ இருந்து வருகிறது.

அது சரி, மாமிசத்திற்கும்‌ காமத்திற்கும்‌ என்னங்க சம்பந்தம்‌ என்று யோசிக்க தோன்றுமே!

Click Here To Download/Buy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *