ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள், சாகித்ய அகாடமி விருது வென்ற புத்தகம்

தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளரும் ஊடகவியலாளருமான மாலன் அவர்கள் மொழிபெயர்த்துள்ள “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்” என்ற புத்தகத்திற்காக சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். ஒருபக்கம் இது கொண்டாடப்படுகிறது, மறுபக்கம் இது விமர்சிக்கப்படுகிறது.

புத்தகத்தின் பெயர் :ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் – Oru Pinaindhthookiyin Varalatru Kurippugal
விலை : 310
ஆசிரியர் :சைரஸ் மிஸ்திரி [தமிழில் : மாலன்]

Click Here To Download/Buy

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் புத்தகம்

பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய நாவல் “Chronicle of a Corpse Bearer” 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதை பெற்றது. அதனை மாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்” என்ற புத்தகத்திற்காக சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.

 

புத்தகம் பற்றி மஞ்சுநாத் என்பவர் எழுதிய குறிப்பு : உலகில் பல்லாயிரக்கணக்கான மதங்கள் இருந்தாலும்  மிக தொன்மை வாய்ந்த மதங்களில் ஒன்றாக (Zoroastrianism) சொராஷ்ட்ரியம் மதமும் கருதப்படுகிறது. கி.மு 50000 – 20000 இடையில் இம்மதத்தின் வரலாற்று சாட்சியங்ளும் குறிப்புகளும்  கிடைப்பதாக கூறுவதில் நம்பகத்தன்மையின் உறுதி குறைந்தாலும் கி.மு  522-486 ஆகிய காலக்கட்டத்தில் ஈரானிய அரசர்கள் பின்பற்றிய மதமாக சொராஷ்ட்ரியம் இருந்ததற்கான வலுவான தடயங்கள் கிடைத்துள்ளன.  

 

படையெடுப்புகள் ஒரு மதத்தின்  அடிவேரைக் கூட விட்டு வைக்காமல் அறுப்பதும், அது முடியாத போது அதன் தொண்மை பண்புகளில் கலப்பு செய்வதும் இயல்பாகவே நிகழ்ந்துள்ள நிகழும் வரலாற்று சாத்தியம். 

 

கி.மு 633 முதல் 654 வரை தொடர்ச்சியாக நிகழ்த்த   இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்புவரை   சொராட்டிரியமே பாரசீக பேரரசுகளின் அதிகாரபூர்வ மதநெறியாக இருந்தது

 

கிறித்துவரோம பேரரசு பாரசீக அரசுகளுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவுக்குப் பின் கி.பி முதலாம் நூற்றாண்டு முடிவில், அங்கு கிறித்தவம் மெல்ல மெல்ல பரவி சொராட்டிரியத்தை முற்றாக வீழ்ச்சியடையச் செய்தது. எனினும் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரை இம்மதம் இரண்டாவது பெரும் மதமாகவே நீடித்து வந்தது.

கி.பி 7ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் வலிமை மிக்க படையெடுப்பால் பாரசீகம் வீழ்ச்சியடைந்த போது சொராட்டிரிய அரசுடன் சேர்ந்து அவர்களது மதமும் வீழ்ந்தது.  உமையா கலீபாவின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு சிறப்பு சலுகை பறிக்கப்பட்டது. படிப்படியாக நிகழ்ந்தேறிய இஸ்லாமிய மயமாக்கத்தின் பாதிப்புக் காரணமாக கடும் சூழல் நிலவியது. இருப்பினும் தங்கள்  மத நறியை  இறுக்கிப் பிடித்துக்கொண்டு அதனுடன் தங்கள் பிழைப்பு நிலைத்திருக்க  உலகின் சில பகுதிகளில் இம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். அதிலும் குறிப்பாக அவர்கள் விரும்பி குடியேறிய  நாடு பாரதம். குறிப்பாக  இதன் இருபெரும் சமூகத்தில் ஒன்றாக கருதப்படும் பார்சி இனத்தினர் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தங்கள் பாதங்களை நம் நாட்டில் வலுவாக ஊன்றிக் கொண்டனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைந்து போயிருந்தாலும் தேசத்தின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில்  முன்னிலை வகிக்கின்றனர்.(இது குறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்)

பார்சி மக்கள் தீவிரமான மதக்கட்டுபாடுகள் மற்றும் இனம் கலவாத திருமண முறைகளை நடைமுறைப் படுத்துவதில் தீவிரம் கொண்டவர்கள். குறிப்பாக அக்னியை தங்கள் கடவுளாக வணங்கும் இச்சமூக மக்கள் பஞ்சபூதங்களின் தூய தன்மையை போற்றுகின்றனர். தங்கள் மதநெறிகள் படி  மரணமடைந்தவர்களின் உடல்களை மலைகள் மற்றும்  பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட உயரமான கோபுரங்கள் மீது வைத்து கழுகுகளுக்கு உணவாக்கி விடுகின்றனர். இந்த மாறுபட்ட பழக்கமுறைக்கு நவீன விஞ்ஞாணம் தடையாக  உள்ளதாக கருதுவதற்கு பின்னால் மறைந்திருக்கும்  சூழலியல் அபாய எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

 

பூச்சிக்கொல்லி மருந்துகளில் அதிகமாக கலக்கப்படும் டைக்ளோஃபினாக் இரசாயணத்தால் பிணந்தின்னிக் கழுகுகள் பெரிய அளவில் குறைந்து அரிதாகி விட்டது. (இப்பொழுது பிணந்தின்னி கழுகுகள் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை…) குறிப்பாக இந்தியாவில் குஜாராத் , மும்பை பகுதிகளில் அதிகம் வசிக்கும் பார்சி இன மக்கள் பின்பற்றும்  இந்த இறுதி சடங்கு முறை கேள்விக்கும் விவாதத்துக்கும் உரியதாக தொடர்ந்து வருகிறது.

 

பார்சி இன மக்களின் பூர்வீக வரலாற்று ஆய்வும், மாறுபட்ட இறுதிச்சடங்கு கலாச்சாரம் முறைகள் குறித்தும் இங்கு இப்போது ஏன் பேசுகிறோம் …? ஏனென்றால்  பெரும்பாண்மையாக இருந்த  ஒரு மதம் சிறுபாண்மையான போதும் பொருளாதாரத்தில் பின்னடையாமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அதேசமயம்  தன்னுள் கிளைவிட்ட தமது இனத்தின் உட்பிரிவு சிறுபாண்மை  மக்கள் மீது எவ்விதமான பார்வையை வீசுகிறது என்பதை  புரிந்து கொள்ளவதற்கும் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் கவனிப்பதற்கும் வரலாறு அவசியமாகிறது.

 

மரணம் என்பதை பொதுவாக  வாழ்விலிருந்து தனித்து   வைக்கப்பட்ட சிந்தனையாகவே பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.  மரணமடைந்தவர்களை கையாளும் மனிதர்களை தாழ்வானவர்களாக கருதும் பெரும்பாலான பொதுசமூகத்தின்   கருத்தோட்டத்தின்படி இந்த பழமையான மதமும் இயங்குகிறதா…? இந்நாவல் இச்சமூகத்தின் இருள் நிறைந்த  பிணந்தூக்கிகளின் வாழ்வை  தெளிவாக காட்சிபடுத்தியுள்ளது.

 

உயர்குல பார்சி ஒருவன் கதகதப்பு தரும்  நெருப்பு கடவுளின் சேவையை விட  கழுகுகளுக்கு இரையாகும் பிணங்களை தூக்கும் சேவையை தனது காதலுக்காக விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறான். தொழில் ரீதியான பாகுபாட்டின் துவேஷத்தையும் அடக்கு முறைகளையும்  எதிர்கொள்கிறான். 

 

குலமுறையில் பின்தங்கியவர்கள் என சமூக நிராகரிப்புக்கு உள்ளானவர்கள் மீது புனையப்படும் இலக்கியங்களில் அவர்களை கண்ணியக் குறைவாக சித்தரிக்கும் பிற்போக்குத்தனமான சிந்தனை மரபுக்கு மாறாக பிணந்தூக்கியின் நாயக பிம்பம் மாறுபட்டதாக உள்ளது. இந்நாவலின் நாயகன் சிந்திப்பவன் மட்டுமல்ல வாழ்வின் மீது தேடலும் விசாரமும் கொண்டவன்.

 

“நம் வாழ்க்கையில் படும் துன்பம் ஒவ்வொன்றும் நம் குணங்களில் உள்ள குறைகளை வெற்றி கொள்வதற்காக மிகத்துல்லியமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு” என்றே அவன் கருதுகிறான். புடம்போட்டுக் கொள்ள உதவும் இம்மாதிரி சிந்தனைகளால் அவன் நாசி சாவின் துர்நாற்றத்தை சுவாசித்தாலும் வெளியேற்றும்  தருணத்தில் அது  நறுமண காற்றாகவே நம்முடன் சங்கமித்து விடுகிறது.

அறிமுகம் இல்லாத புதிய மதம், மக்கள், கலாச்சாரம் மற்றும்  வாழ்க்கை முறைகள் என முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்கும் இந்நாவல் ஒரு ஆவணம் என்றே சொல்லலாம். பிசிறில்லாத புரிதலுக்கு மொழிப்பெயர்ப்பாளர்  மாலன் அவர்களின் தனித்துவமான மொழியாக்க நடை  சீர்மை தருவதுடன் வாசிப்பின் வேகத்தையும் கூட்டுகிறது.

வரவேற்பும் விமர்சனமும்

மாலன் அவர்கள் அண்மைய காலமாக ஒரு சார்பு அரசியல் குறித்து பேசிவருகிறார். கூடவே, அவர் சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018-ம் ஆண்டு முதல் இப்போது வரைக்கும் இருந்து வருகிறார். ஆகவே, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. 

மற்றொரு புறம் அவரது எழுத்துக்களை வாசித்து மகிழ்ந்தவர்கள் அவருக்கு விருது வழங்கப்பட்டிருப்பதை கொண்டாடி வருகிறார்கள்.  


மேலும் நூல்கள் பற்றி படிக்க….

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *