“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

வரலாற்றில் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க பலருக்கும் ஆர்வம் இருக்கும். நெருக்கமாக அவர்களை அறிந்துகொள்ள அது உதவும். கலைஞர் நெஞ்சுக்கு நீதி எழுதியது போல அவரது மகன் முக. ஸ்டாலின் தன் வரலாற்றை “உங்களில் ஒருவன்” புத்தகமாக எழுதியுள்ளார். 

 

புத்தகத்தின் பெயர் : உங்களில் ஒருவன்

ஆசிரியர் : முக. ஸ்டாலின்

விலை : ரூ 499


 

 

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள், இளமைப்பருவம், அரசியல் துவக்கம், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என அவரது 23 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். பூம்புகார் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் விலை ரூ 500. குறிப்பாக, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள நினைத்தால் அதற்கான நல்வாய்ப்பாக இந்தப் புத்தகம் இருக்கும். 

 

இந்தப்புத்தகம் குறித்து வாசகர் நாகராஜன் பொன்னுசாமி அவர்கள் எழுதியுள்ள கருத்து உங்களுக்காக….

 

●  ஜோசப் ஸ்டாலின் மறைவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ‘ நினைவேந்தல் ‘ கூட்டத்தில் கலைஞரும் பங்கேற்றார்.  கலைஞர், ” என் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுகிறேன் ! “…என எல்லோர் முன்னிலையிலும் அங்கு அறிவித்தார். அப்படி மக்கள் மத்தியில் பெயர் சூட்டப்பட்டு உதித்தவர்தான் – முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ! கலைஞர் தனது மகனுக்கு ‘ அய்யா துரை ‘ என பெயர் சூட்ட ( தந்தை பெரியாரின் – அய்யா என்பதையும், அண்ணாதுரையின் – துரை என்பதையும் இணைத்து அய்யாதுரை ) எண்ணிக் கொண்டிருந்தாராம். ஆனால் அது மாறிப்போனது !

 

●  மு.க. ஸ்டாலினின் இந்த நூல் – பல சுவையான தகவல்களுடனும் நிறைய புகைப்படங்களுடனும், நல்ல விதத்தில் கட்டமைக்கப்பட்டு, எளிய நடையில் சுவை குன்றாமல் , 1953 முதல் 1976 வரையிலான அவரது வாழ்க்கை அனுபவங்களை, தெளிந்த நீரோடை போன்று ஒரு பயனுள்ள படைப்பாக வெளியாகியுள்ளது !

 

●  ஸ்டாலின் மனதில் கலைஞர் நிறைய உள்ளதால், அவர் பற்றி நிறைய எழுதியுள்ளார். கலைஞர் அவருக்கு அப்பா மட்டுமல்ல தலைவரும் தானே ! அவரைப் பார்த்து, பார்த்து ஏன் பயந்து, பயந்து வளர்ந்திருக்கிறார் ! கலைஞரைவிட முரசொலி மாறனிடம் தான் நெருக்கமாக இருந்தாராம். மாறனையும் அண்ணனாகவே மதித்து வாழ்ந்துள்ளார் !

 

●  கல்லக்குடி போராட்டத்தில் கலந்து, கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் கலைஞர் இருந்த போது, ” நான்கரை மாத பாலகனான என்னையும் தன் இதயத்தோடு அணைத்து தூக்கி சென்று, கலைஞருக்கு காட்டினார் தயாளு அம்மா ! “..என வாஞ்சையோடு அந்த நாட்களை நினைவுபடுத்துகிறார் !

 

●  சிறை எப்படியெல்லாம் தனது வாழ்க்கையோடு பயணம் செய்தது என்பதை கலைஞர் தனக்கு எழுதிய கடிதம் மூலம் ஸ்டாலின் நினைவு கூறுகிறார் –  1953ல் கலைஞர் சிறையிலிருந்த போது, தான் கைக்குழந்தையாய் இருந்து அவரை காண சென்றோருடன் தூக்கி செல்லப்பட்டதையும்; 1976ல் மிசா கைதியாக ஸ்டாலின் ஓராண்டு இருந்த போது, கலைஞர் சிறையில் சந்தித்து சென்றதையும்; 1977ல் கலைஞர் சிறையிலிருந்த போது தனது மகன் உதயநிதி பிறந்த செய்தியை அவருக்கு சொல்லியனுப்பியதையும், குறிப்பிட்டுள்ளார். 

 

●  திராவிட தலைவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ள இது போன்ற நூல்களைப் எல்லோரும் படித்தறிய வேண்டும் !

 

●  ஸ்டாலின் தனது பள்ளி பருவத்தை நினைவு கூறுகிறார். 

 

சென்னை அண்ணா சாலையிலுள்ள ‘ சர்ச் பார்க் பள்ளி ‘ தன்னை பள்ளியில் சேர்க்க மறுத்தார்களாம். காரணம் ‘ ஸ்டாலின்’ என்ற பெயர். லெனினுக்கு பிறகு சோவியத் ரஷ்யாவில் இரும்பு மனிதராக இருந்தவர் ( ரஷ்ய மொழியில் ஸ்டாலின் என்றால் எஃகு ) ஆட்சியிலிருந்து மதத்தை விலக்கியவர் அந்த ஸ்டாலின் ! அதனால் இந்த ஸ்டாலினுக்கு இடமில்லையாம் !

 

●   இந்த செய்தி கேட்ட கலைஞரோ, ” பள்ளிக் கூடத்தை மாற்றுவேனே தவிர, பெயரை மாற்ற மாட்டேன் ” என்று சொல்லி வேறு பள்ளியில் சேர்த்தாராம்.

 

ஏனெனில் கலைஞர் படித்ததோ ஈரோட்டுப் பள்ளியில் !

 

●  பேரறிஞர் அண்ணாவுடன் பழகிய நாட்களை நம்மோடு பகிர்கிறார். முக்கியமான விவாதங்கள் என்றாலோ ஓய்வெடுக்க வேண்டுமென்றாலோ, கோபாலபுர வீட்டுக்கு அண்ணா வந்து விடுவாரம். கலைஞரின் பிள்ளைகளை நடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பாராம். அண்ணாவுக்கு பிடித்த தேநீர், சமோசா, பக்கோடா போன்றவைகளை, ஸ்டாலின் சைக்கிளில் சென்று இராயப்பேட்டையிலிருந்து வாங்கி வந்து கொடுப்பாராம். 

 

●  ஒரு முறை அண்ணாவை வலுக்கட்டாயமாக ஒரு நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் அழைத்தபோது , ” உன் அப்பனைப் போலவே பிடிவாதக் காரனாக இருக்கிறாயே? ” என்றாராம் அண்ணா. ” என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இதுதான் ! ” என்று எழுதுகிறார், நூலாசிரியர் ஸ்டாலின் !

 

●  1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு – மொழிப் போர் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியிருந்தது. 16.02.1965 அன்று கோபாலபுர வீட்டிலிருந்து கலைஞரை ‘ தேச பாதுகாப்பு சட்டத்தில் ‘ கைது செய்து பாளயங்கோட்டை சிறையில் அடைத்து வைத்தனர். முரசொலியையும் வீட்டையும் முரசொலி மாறன் தான் நிர்வகித்திருந்தார். 

 

●  மாறனையும் 24.03.1965 அன்று தேசப் பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்தார்களாம். ” மற்றவர்கள் குடும்பத்தில் நடக்காதது நம் குடும்பத்தில் மட்டும் ஏன் நடக்கிறது என்று நினைத்து பார்த்த போது – என்னை அரசியல் விழிப்படைய செய்தது ” என்று 12 வயது மாணவனாக இருந்த போதே ஸ்டாலின் உணர்ந்தாராம் !

 

●  ஸ்டாலின் அரசியல் பயணம் 1966ல் அதாவது அவரது 13 வயதில் துவங்குகிறது. கோபாலபுரத்தில் நண்பர்களுடன் இளைஞர் திமுகவை துவக்குகிறார். 1967 சட்டமன்ற தேர்தலில் கலைஞருக்காக சைதை தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார். 1969ல் அண்ணா மணிவிழா மற்றும் 1970ல் அண்ணா பிறந்த நாள் விழாவை இளைஞர் திமுக சார்பில் நடத்துகிறார். 1971 முதல் திமுக கொள்கை விளக்க நாடகங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். முரசே முழங்கு நாடகத்தில் அறிமுகமாகிறார் !

 

●  1971 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ‘ முரசே முழங்கு ‘ பல இடங்களில் நடைபெறுகிறது. எம்ஜிஆர் போட்டியிட்ட பரங்கிமலையில் 14.02.1971ல் ஆர்.எம். வீரப்பன் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. நாடகம் பார்க்க வந்த எம்ஜிஆர் தரையில் அமர்ந்து நாடகத்தை ரசித்தாராம். நாற்காலியில் உட்கார மறுத்து இறுதி வரை நாடகத்தை பார்த்தாராம். ஸ்டாலின் எம்ஜிஆரின் தீவிர ரசிகன், அவரது விமர்சகன் என்ற தகவல்களை நூலில் தந்துள்ளார் !

 

●  காஞ்சிபுரத்தில் 1972ல் நடந்த செங்கல்பட்டு மாவட்ட திமுக மாநாடு, கோவையில் நடைபெற்ற திமுக 5வது மாநில மாநாடு இவைகளிலெல்லாம் தன் பங்களிப்பை அதிகரித்து கொண்டே செல்கிறார்..1975ல் துர்க்காவை வாழ்க்கை துணையாக ஏற்கிறார்.. இப்படி சென்ற வாழ்க்கைப் பயணத்தில் பேரிடியாக எமர்ஜென்சி என்ற சுனாமி தாக்குகிறது..

 

●  அவசர நிலை ( எமர்ஜென்சி ) காலத்தின் போது கலைஞர் தலைமையிலான திமுக அரசு 31.01.1976 அன்று கலைக்கப்பட்டது. அன்று இரவே போலீஸ் கோபாலபுர இல்லத்திற்கு வருகிறது. கலைஞரை கைது செய்யவா ? இல்லை ! ஸ்டாலினை கைது செய்ய ! அப்போது ஸ்டாலின் வீட்டில் இல்லை. கலைஞர் தன்னை கைது செய்ய சொன்னாராம். போலீசார் பதில் பேசாமல் சென்று விட்டனராம்.

 

●  அடுத்த நாள் ( 01.02.1976 )வெளியூர் சென்ற ஸ்டாலின் வீடு வந்து சேர்ந்தார். கலைஞரே போலீசுக்கு போன் போட்டு, ” இதோ ஸ்டாலின், அழைத்து செல்லுங்கள் ! ” ..என்றாராம். போலீஸ் வந்து, ஸ்டாலினை கைது செய்து சென்னை மத்திய சிறைக்கு கொண்டு சென்றது. இத்துடன் முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார் !

 

●  இந்த நூலை படிக்கும் வாசகர்களுக்கு, ஸ்டாலின் தன் உழைப்பாலும் தியாகத்தாலும் இன்று மாநிலத்தின் முதல்வர் பொறுப்பு வரை அடைந்துள்ளார் என்பதும், அவரை வாரிசு அரசியலோ – 

 

சிபாரிசு அரசியலோ இந்த உயரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை என்பதும் நன்கு புரிய வரும் !



மேலும் நூல்கள் பற்றி படிக்க….

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *