“காவல்கோட்டம்” புத்தகம் மதுரையின் 600 வருட வரலாறு | சு. வெங்கடேசன்

காவல் கோட்டம் இதுவரை தமிழ் நாவல்களில் கையாளப்படாத கள்ளர்களின் வாழ்க்கை முறை குறித்த பிரதியினை கையாள்கிறது. மதுரை மாநகரின் கிட்டத்தட்ட 600 வருட வரலாற்றினை காலகாலமாக கையாள்கிறது இது மிகவும் ஒரு வித்தியாசமான முயற்சி.


2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் “காவல் கோட்டம்”. 

 

புத்தகம் : காவல்கோட்டம்

ஆசிரியர் : சு. வெங்கடேசன்

புத்தகம் Rs. 770/-

கதிரவன் ரத்தினவேல் என்பவர் தனது முகப்புத்தகத்தில் காவல் கோட்டம் பற்றி எழுதியுள்ள விரிவான அறிமுகப்பதிவு உங்களுக்கு…..

பிற்கால பாண்டியர்கள் சுல்தான்களிடம் தோற்று இழந்த மதுரையை, விஜய நகரம் மீட்பதில் கதை துவங்குகிறது. புத்தகத்தில் தந்திருக்கும் மேப்பை அவ்வபோது பார்த்து எங்கிருந்து படை எடுத்து வந்து மதுரையை மீட்டுத் தந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. அடுத்து கிருஷ்ண தேவராயர் (தெனாலிராமன் புகழ்) காலத்தில் விஜய நகர அரசின் சார்பாக மதுரைக்கு போரிட வந்த தளபதி, மதுரையை கைப்பற்றி தானே ஆளப்போவதாக அறிவிக்க, அவரை கைது செய்து அழைத்து வர மன்னனின் வலது கரமும் அத்தளபதியின் மகனுமாகிய விஸ்வநாத நாயக்கர் படையுடன் வருகிறார்.

 

மதுரையில் நாயக்கர் ஆட்சி விஸ்வநாதர் வழியாக துவங்குகிறது. 72 பாளையங்கள் உருவாகின்றன. அவற்றுக்கிடையிலான அரசியல், ஏற்கனவே நடைபெற்று வரும் தஞ்சை நாயக்கர்களின் பாளையங்கள், அடிக்கடி பழிவாங்க வரும் மைசூர் படை. இவற்றையெல்லாம் சமாளிப்பதுடன் தொடர்ந்து ஆலயங்களும் மண்டபங்களும் கட்டி மக்களை நல்லபடியாக ஆட்சி செய்யும் நாயக்கர்களின் வம்சாவழியை விவரமாக சொல்லிக் கொண்டே கதை நகர்கிறது.

இந்த வரலாற்றுடன் ஓரமாக நம்மை அறியாமல் மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் கதையும் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. அந்த ஊரின் பெயர் தாதனூர். திருமலை நாயக்கர் ஆட்சியின் போது அத்தனை கட்டுக்காவலையும் மீறி அரசாங்க கஜானாவிலேயே கன்னம் போட்டு விடும் அந்த ஊர்க்காரனை தேடி அழைத்து வரச் சொல்லி கட்டளையிடுகிறார் அரசர் திருமலை நாயக்கர்.


அரசவைக்கு வரும் கள்வனையும் அவனை அழைத்து வந்த பின்னத்தேவனுக்கும் மூன்று உத்தரவு பிறப்பிக்கிறார்.

 

1. அரசு காவலை மீறியவனுக்கு மூன்று சவுக்கடி கொடு

2. களவாண்டவனை அழைத்து வந்தவனுக்கு நீதி பரிபாலனம் செய்யும் உரிமையை கொடு

3. இத்தனை காவலை கடந்து கன்னம் போட்டவனுக்கு மதுரை நகர் காவலைக் கொடு

 

ஆம், திருடன் கையில் சாவி தரப்படுகிறது. களவில் இருந்துதானே காவல் பிறக்கிறது. அன்றில் இருந்து மதுரை நகரம் முழுவதுமான காவலை தாதனூர்தான் கையில் வைத்திருக்கிறது.

அடுத்து ஒவ்வொரு அரசராக வருகிறார்கள், வாழ்கிறார்கள், ஆள்கிறார்கள், போகிறார்கள். ஆனால் மதுரை மக்களின் நிம்மதியான உறக்கத்தை தருவது தாதனூர் காவல்காரர்களின் காவக்கம்புதான். திருமலை நாயக்கருக்கு பின் காலம் உருண்டோடி இராணி மங்கம்மாளிடமும் இராணி மீனாட்சியிடமும் நின்று நாயக்கர் வம்சத்தின் இறுதி மூச்சை இழுத்து விடுகிறது.

 

சந்தா சாகிப்பின் துரோகத்தால் விழும் மதுரை, கூடிய விரைவில் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளில் சிக்குகிறது. அதற்கிடையில் தான் எத்தனை எத்தனை கதைகள், எத்தனை எத்தனை நாயகர்கள்… கமலஹாசன் எடுக்க முயற்சித்த மருத நாயகம் பற்றி படிக்கையில் புல்லரிக்கிறது. வரி கொடுக்க மறுக்கும் கட்டபொம்மனை பிடித்து தூக்கிலிட்ட கம்பெனி, அவன் தம்பி, வாய் பேச முடியாத, காது கேட்காத ஊமைத்துரையிடம் 4 வருடம் தண்ணி குடிக்கிறது. யோசித்து பாருங்கள், ஒருவன் சைகையிலேயே படையை நடத்தி 4 வருடம் வெள்ளையர்களை கதிகலங்கடித்திருக்கிறான் என்றால் எவ்வளவு பெரிய ஆளுமையாய் இருந்திருக்க வேண்டும்? படைகள் எந்தளவு அவன் கட்டளைகளுக்கு கீழ்படிந்திருக்க வேண்டும்?

எதிர்க்கும் அத்தனை பாளையங்களையும் அழித்து, ஜமிந்தாரி முறையை அமுல்படுத்திவிட்டு மதுரைக்குள் கவனம் செலுத்தும் கம்பெனி அரசாங்கம், நகரை விரிவுப்படுத்த சுற்றியுள்ள கோட்டைச்சுவரை இடிக்க முடிவெடுக்கிறது. குமாஸ்தாக்களாக அக்ரஹாரத்து சிங்கங்கள் நுழைந்திருந்த காலகட்டம். கேட்கவா வேண்டும்? நம் மக்களை எங்கு அடிக்க வேண்டும், எப்படி அடிக்க வேண்டும் என சரியாக காய் நகர்த்திக் கொடுக்கிறார்கள்.


நகரை விரிவுப்படுத்திய பின் கச்சேரிக்காக கட்டிடம் கட்டுகிறார்கள். கச்சேரி என்றால் போலிஸ் ஸ்டேசன். ஏதோ அரசாங்க வேலை என்று அதைப் பற்றி புரிதலே இல்லாமல் நம்மாட்களும் வேலையில் சேர்கிறார்கள். அதிலும் யூனிஃபார்ம் போட செய்யும் கோமாளித்தனங்கள், குறிப்பாக தோலால் செய்யப்பட்ட பெல்ட் அணிய அவர்கள் படும் பாடு இருக்கிறதே..!. சாஸ்திரத்திற்கு விரோதமாயிற்றே? நகராட்சி வரி வசூல் செய்தல், நிலங்களுக்கான பஞ்சாயத்திற்காகத்தான் கச்சேரி என காவலர்களே நம்பிக் கொண்டு, கச்சேரியிலுள்ள பொருட்களை பாதுகாக்க தாதனூர்காரர்களுக்கு காவக்கூலி கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது புரிவதில்லை, நாம்தான் நகரத்தை காவல் காக்க வேண்டும் என்று.

 

வெள்ளையர்களின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் பொறுமை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்யமாட்டார்கள். தாதனூர்காரர்கள் காவல் காப்பதை நிறுத்த செய்து, நகர் முழுக்க ஐரோப்பிய பாணியிலான காவலை கொண்டு வர திட்டம் போடுகிறார்கள். சட்டம் எழுதுகிறார்கள். கிட்டத்தட்ட 100 வருடம் போராடி தாதனூர்வாசிகளின் பல நூறு வருட காவல் உரிமையை பிடுங்குவதுடன் அவர்களையே களவாளிகள் என்று குற்றப்பரம்பரை சட்டத்தில் பழியெடுக்கிறார்கள்.

 

நல்லவேளை தாதனூர்காரர்கள் அனுபவித்த வேதனையை ஆழமாக எழுதாமல் விடுகிறார் எழுத்தாளர். ஏற்கனவே தாதனூர் இழவுக்கு தலையில் அடித்துக் கொண்டு அழ தோன்றுகிறது. அவர்கள் பட்ட கஷ்டத்தை விளக்கியிருந்தால் சோறு இறங்கியிருக்காது.

 

நாவலில் உயிர்க்கதையைப் பற்றி நான் இங்கே கொஞ்சம் கூட சொல்லவில்லை. காவல்காரர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி மட்டும் 500 பக்கங்கள் சொல்லி இருக்கிறார். அத்தனையும் பொக்கிஷம். குழந்தை பிறப்பதிலிருந்து என்னென்ன போட்டிகள் வைத்து எதுஎதுவெல்லாம் கற்றுக்கொண்டால் களவுக்கு போகலாம் என்பதில் இருந்து எந்தெந்த களவுகளில் தப்பித்து வந்தால் காவலுக்கு போகலாம்  என்பதைச் சொல்லி காவல் முடித்து ஊர் பெரியாம்பளை ஆகி முறைகளை சரிக்கு சரி காத்து, தினசரி இரவு காவலுக்கு போகிறவர்களையும் களவுக்கு போகிறவர்களையும் இனம் பார்த்து அனுப்பி வைப்பது வரையிலான அத்தனையையும் அவ்வளவு அழகாக சொல்கிறார்.

 

எங்கிருந்தோ எங்கேயோ படையெடுத்து போனவர்களைப் பற்றி பாடமாக படிக்கிறோம். நம் மொழி பேசி வாழ்ந்த நம் குடிகளை பற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறோம். குற்றப்பரம்பரை புத்தகம் படிக்கும் முன் எனக்கு கைரேகைச் சட்டம் பற்றி எந்த அறிமுகமும் இல்லை. தீரன் படத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. காவல் கோட்டம் புத்தகம் தான் எனக்கு இக்கூட்டத்தை பற்றி கதையை முழுமையாக சொல்லி இருக்கிறது.

இப்புத்தகம் படித்த 10 நாட்களும் மிக முக்கியமானவை. பொன்னியின் செல்வன் படித்து உறங்கி இரவில் கனவில் குதிரையேறி கத்திச்சண்டை போட்டுத் திரிந்த பிறகு, இந்தப் புத்தகம் தான் என்னை இரவில் காவல் கம்போடு மதுரை வீதிகளில் சுற்ற வைத்தது.

 

முடிந்தவரை இந்த புத்தகத்தின் மையக்கதையை சொல்லாமல் விட்டிருக்கிறேன். ஏனென்றால் அவற்றை படிக்கும் போது தெரிந்து கொள்ளும் போதுதான் சரியாக இருக்கும்.

 

தமிழர்களின் ஒரு குடியைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் இந்த புத்தகத்தை படிக்கலாம். சும்மா இல்லை 600 வருட வரலாறு.

இதை படிக்காதவர்களெல்லாம் மதுரைக்காரர்கள் என வெளியே சொல்லிக் கொள்ளாதீர்கள்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *