“இடக்கை” நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதை

செய்திடாத தவறுக்காக “குற்றவாளி” எனும் பெயரை சுமந்துகொண்டு நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதைதான் இடக்கை என்ற நாவல். நாவல் முழுவதும் அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம். தான் நிரபராதி எந்த குற்றமும் செய்யவில்லை என நிருபணம் செய்ய முடியாத இயலாமை தூமகேது போன்றவர்களை காலமும் அதிகாரமும் எப்போதும் வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.

நூல்: இடக்கை

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

வெளியீடு: உயிர்மை

பக்கங்கள்: 358

விலை: 353


நாவலின் சுவாரஸ்ய வரிகளாக பல உள்ளன.

 

பகல் மனிதனை பிரித்து வைக்கிறது. இரவு ஒன்று சேர்த்து விடுகிறது. உறக்கம் என்பது இரவு புகட்டும் பால்.

 

சூரியன் என்பது வெளிச்சத்தின் மலர்.

 

ஆறு ஒவ்வொரு நாளும் புதியது . அதன் வினோதங்களை நாம் கணிக்கவே முடியாது.

 

மனதின் திணவுகளுக்கு உடல் ஈடு கொடுப்பதில்லை.

 

நீதி உணர்வு நெருப்பைப் போன்று பாரபட்சமற்றது. ஆனால் நடைமுறையில் அது  கானல் நீரைப் போல வெறும் மாயதோற்றமாக உள்ளது.

 

இல்லாத ஒன்றை எப்படி ரகசியம் என்பது.

 

ஒருவனை  குடும்பத்தில் இருந்து பிரித்து விடுவது தான் உண்மையான தண்டனை.

 

நீதி என்றால் நீயும் நானும் உடல் வாழ்வதற்கு உணவை உட்கொள்வது போல உயிர் வாழ்வதற்கு வகுத்துக்கொண்ட  அறம்.

கேலி வலிமையான ஒரு ஆயுதம். அதை நம்மைவிட எதிராளிகள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.


சமூகவலைதளத்தில் இந்து அவர்கள் இடக்கை குறித்து எழுதியிருந்த புத்தக விமர்சனம் இங்கே உங்களுக்காக.

ஒளரங்கஜீபின் அந்திம காலத்திலிருந்து கதை துவங்குகிறது மிக பெரிய பாதுஷாவான ஒளரங்கஜீப் தன் வாழ்வில் ஆசைப்பட்ட அனைத்தையும் பெற முடிந்தவர் என்ற போதும் தூக்கத்தை விலைக்கு வாங்க முடியாமல் துயரம் கொள்கிறார். தன் அந்திம காலத்தை மிகுந்த பயத்துடன் கழிப்பது தான் செய்த பாவங்களால் தான் என்ற குற்றவுணர்வு அவரை வாட்டுகிறது. நல்லதை எடுத்து காட்ட ஒரு மனிதனை ஞானியாக்கும் கடவுள் தீமையை அடையாளம் காட்ட தன்னை பாவையாக்கி கொண்டாரோ கடவுள் என்று வருந்துகிறார். 


இளம் வயதில் தன் பயத்தை மறைத்துக் கொள்ள தான் செய்த கொலைகளை நினைவுகூர்கிறார், அதிலிருந்து நமக்கு ஒன்று மட்டும் புலப்படுகிறது மரணம் எப்போதுமே நம் பயங்களுக்கான தீர்வுகள் ஆகாது. பல்வேறு கிளைக்கதைகள் கதைக்குள் கதையாக வந்தாலும் எல்லாக் கதைகளிலும் எந்த ஒரு விஷயத்தை வெல்ல முடியாமல் அதை கொல்கிறார்களோ அவர்களே அதனிடம் இருந்து தப்பிக்க முடியாமல் மரணத்தை எய்துகிறார்கள் என்கிற செய்தியே அடிநாதமாய் இருக்கிறது. இரவை பற்றி எழுதும் போது பகல் மனிதர்களைப் பிரித்து வைக்கிறது இரவு ஒன்று சேர்த்து விடுகிறது. உறக்கம் என்பது இரவு புகட்டும் பால், குழந்தைகளுக்குத் தாய் மார்பில் பால்புகட்டுவது போலத்தான் இரவு உறக்கத்தை மனிதர்களுக்கு புகட்டுகிறது, முட்டிமுட்டிப் பால் குடித்த குழந்தை கண் அயர்ந்துவிடுவது போலத்தான் மனிதர்கள் உறங்க துவங்குகிறார்கள் என்கிறார்.


அவருடைய அந்தரங்க காரியதரிசியான அஜ்யாவின் கதாபாத்திரம் வெகு அழகாக படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆணாய் பிறந்து பெண் தன்மைகள் பெற்று பெண்ணாய் தன்னை உணரத் தொடங்கும் அஜ்யா கோவில் மண்டபத்தில் உள்ள பெண் சிலையை வருடி பார்ப்பதும் அதற்கு ராதா என்று பெயர் சூட்டுவதும், அதனால் அவனுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் எழுதும் போது அஜ்யாவின் உணர்ச்சிகளை நமக்கு அழகாய் கடத்துகிறார். சிறு வயதில் அஜ்யா படும் அவமானங்கள், ஒளரங்கஜீபின் மரணத்திற்கு பிறகு சித்ரவதைக்கு உள்ளாகும் அஜ்யாவின் நிலை என எல்லாமே நம் மனதையும் கனக்கச் செய்கிறது.


தூமகேது என்கிற கதாபாத்திரம் தான் கதையின் ஆணி வேர் இந்த தூமகேதுவின் துயரத்தை வாசிக்க இயலாமல் இந்த புத்தகத்தை எத்தனை முறை கண்ணீருடன் மூடி வைத்தேன் என்று எனக்குத் தான் தெரியும். அதிகம் போனால் ஒரு பதினைந்து தினங்களுக்குள் வாசித்து முடித்துவிட கூடிய இந்த புத்தகத்தை நான் இரு மாதங்களாக வாசித்தேன். சாமர் இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் மலம் அள்ளும் தொழிலை மேற்கொள்கின் றனர் கதையில் தூமகேதுவின் மனைவி நளா மலத்தை தன் தலையில் சுமந்து சென்று கொட்டிவிட்டு வருவாள் அவள் அவ்வளவு கடினமாக உழைத்தும் அவளால் அவள் குழந்தைகளை காப்ப்பாற்ற முடியாமல் போவது மிகுந்த மனவேதனையை அளித்தது. பொதுவாய் சினிமாவோ அல்லது புத்தகமோ எதை பார்த்தாலும் அல்லது வாசித்தாலும் நான் அதில் ஒன்றி போய் விடுவேன் என்னால் என் கண்களை கட்டுப்படுத்தி கொள்ள முடிந்ததில்லை நளாவை போல இன்று வரை எத்தனை பேர் தலையில் மலத்தை எடுத்து போய் சுத்தம் செய்கின்றனர் அவர்கள் எல்லாம் எந்த விதத்தில் குறைந்தவர்கள்?

சிறு வயதில் இருந்து எனது கற்பனை எப்படி இருந்தது எனில், மன்னர் காலத்தில் எல்லாம் அனைவரும் சுகமாய் வாழ்ந்தார்கள் செழிப்பாய் இருந்தார்கள் பசியில் வாடியவர்கள் என்று யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதாக இருந்தது. மக்களை மிகவும் துப்புறுத்தியது வெள்ளையர்களின் ஆட்சி தான் என்று மிக திடமாக நம்பினேன் வளர வளர அந்த யூகம் மிக தவறானது என்பதை அறிந்து கொண்ட போதும் அதில் கல்லை தூக்கி போட்டு விட்டது இந்த கதை, இடக்கை ராஜாக்களின் கதை அல்ல அது சாமானியனின் கதை அதிலும் அறிவென்பதே இல்லாத கிறுக்கு ராஜாவின் அகம்பாவத்தால் கீழ் நிலையில் வாழும் மக்கள் பட்ட அவதியை எடுத்து கூறும் கதை.


எதற்காக இந்த புத்தகத்திற்கு இடக்கை என்று பெயர் வைத்தார் என்று பலவாறு சிந்தித்து பார்த்தேன், சாமர்கள் இடக்கை பழக்கம் உடையவர்கள். அவர்களுக்கு வீதியில் தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு நடக்க அனுமதி இல்லை, உயர் ஜாதி மக்கள் கடக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நடக்க கூடாது, கோவிலுக்குள் போக கூடாது, பூமாலையை கல்யாணத்திற்கு கூட அணிய கூடாது இப்படி நிறைய இந்த மக்களின் வாழ்வை போல நமது இடக்கையும் மிக முக்கியமானதாக இருந்தாலும் நாம் அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளாமல் தான் இருக்கிறோம்.


கதையில் பாதுஷாவின் ஆட்சியின் கீழ் இருக்கும் சத்கர் என்கிற நகரை ஆளும் பிஷாடன் குரூரம் நிறைந்தவன். ஒழுங்கான தூக்கம் இல்லாமல் மன நோயில் பீடித்து மக்களுக்கு கொடும் தண்டனைகளை கொடுக்கவென்றே காலா என்கிற திறந்த வெளி சிறைச்சாலையை நடத்துபவன். இவனின் பேசும் குரங்கு அனாம் சுவாரஸ்யமானது ஆனால் பிஷாடன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் மிருகத்தின் உச்சம்.

ஆட்டு தோலை பதப்படுத்தும் கடினமான வேலையை செய்யும் தூமகேது காரணமில்லாமல் காலா சிறையில் அடைக்கப்பட்டு அங்கும் கொடுமைகளையும் அவமானங்களையும் அனுபவிக்க நேரும் தருணத்தில் அவனுக்கு ஆறுதலாய் வரும் சக்ரதார் தூமகேதுவை தப்பிக்க வைக்க பரப்பிவிடும் கதைகள் சுவாரஸ்யமானவை. கதை நெடுகிலும் இரண்டு கவிஞர்கள் வருகிறார்கள் ஒன்று பாதுஷா ஒளரங்கஜீபின் மகள் மக்பி அவள் தன் கவிதைகளாலும் தன் காதலாலும் தன் தந்தையால் சிறையில் அடைக்க பட்டு அங்கேயே இறக்கிறாள் மற்றொருவர் காலா சிறையில் தூமகேதுவை சந்தித்து உரையாடும் சச்சல் அவர் கீழ் நிலையில் இருக்கும் மக்களுக்காக தன் கவிதைகள் மூலம் போராடுகிறார். எஸ். ரா அவர்கள் கவிதைகளையே ஒரு கண்டுபிடிப்பு என்கிறார் குழந்தைகள் எப்படி பொருட்களை ஒழித்து வைத்து பின்பு கண்டு பிடிப்பார்களோ அப்படி தான் கவிதைகளும் என்கிறார்.


காலா சிறையிலிருந்து தப்பித்து வெகு தூரம் தன் மனைவி மக்களை தேடி அலையும் தூமகேது போய் சேர்வது ஜோயா என்கிற அற்புதமான கிராமத்திற்கு ஜோயாவில் அவனுக்கு கிடைக்கும் மாதுளம் பழசாறு தான் அவன் உலகிலேயே அருந்திய மிக ருசியான பானம். நல்ல இடத்திற்கு வந்துவிட்டான் இனியாவது அவன் சுகமாய் இருப்பான் என்று நாம் சிந்தித்தால் அது தான் இல்லை நாம் மட்டும் சுகத்தை அனுபவிக்க நம் மனைவி மற்றும் குழந்தைகள் துயரப்படுவதா என்கிற எண்ணத்தில் அவன் ஜோயாவில் இருந்து மீண்டும் தன் குடும்பத்தை தேடி துயரத்தில் விழுவது நமக்கு ஒரு பக்கம் சலிப்பை ஏற்படுத்தினாலும் இது தான் எதார்த்தம் என்றும் தோன்றுகிறது.


ஜோயாவிலிருந்து ஒரு குலாபி என்கிற வேசையிடம் வேலைக்கு சேரும் தூமகேது அங்கும் நிலைகொள்ள முடியாமல் நிகழும் நிகழ்வுகள் விசித்திரமானவை காதம்பரி என்கிற உயரத்தில் குள்ளமானவளின் மனதில் அன்புக்கான யாசிப்பும் ஏமாற்றமும் நம்மையும் அசைத்து பார்க்கிறது.

கடைசி வரை தூமகேது தன் குடும்பத்துடன் சேரவில்லை என்கிற நிதர்சனத்துடன் கதை முடிகிறது இந்த நாவலில் கதையை விட நிகழ்வுகள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு மிக பலமானது. ஒளரங்கஜீப் சுபி ஞானியை பார்க்கும் தருணங்களில் ஞானிக்கும் பாதுஷாவிற்குமான உரையாடல் ஆக சிறந்த ஒன்று ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் வேறு வேறாய் நமக்கு விளங்கும்.

இடக்கை என்கிற புத்தகம் வெறும் கதை என்று நாம் கடந்துவிட கூடிய புத்தகம் அல்ல, வாசித்து சிந்தித்து ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று. இந்த கதையை வாசித்த பின்பாவது இதில் வரும் தூமகேதுவை போன்ற எளிய மனிதர்களின் துயரங்களை புரிந்து கொண்டு அதை தீர்க்கும் வழியை ஏற்படுத்தாவிட்டாலும் குறைந்த பட்சம் மேலும் துன்பத்தையாவது அவர்களுக்கு தராமல் இருக்க முயலலாம். இப்போதெல்லாம் என் வலது கை மோதிர விரலில் கிடக்கும் மோதிரத்தை இடது கை மோதிரவிரலுக்கு மாற்றிவிட்டேன் அதை பார்க்கும் போதெல்லாம் என் சிந்தனையும் மாற்றம் கொள்ளட்டுமே!

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *